இந்தியா

1.மத்திய மந்திரிசபையில் 9 மந்திரிகளின் பதவி இடம் காலியானதால் அந்த இடங்களுக்கு புதிய மந்திரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.பாதுகாப்பு துறை மந்திரியாக தமிழ்நாட்டை சேர்ந்த நிர்மலா சீதாராமனும் ரெயில்வே துறைக்கான புதிய மந்திரியாக பியூஷ் கோயலும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், நிலக்கரித்துறையையும் இவர் கூடுதல் பொறுப்பாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.ரெயில்வே மந்திரியாக இருந்த சுரேஷ் பிரபு வர்த்தகம் மற்றும் தொழிற்சாலைகள் துறை மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழகத்தை சேர்ந்த பொன் ராதாகிருஷ்ணன் வகித்துவரும் கப்பல் மற்றும் சாலை போக்குவரத்து துறையுடன் நிதித்துறை இணை மந்திரி பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. முக்தார் அப்பாஸ் நக்வி சிறுபான்மையினர் நலத்துறை மந்திரியாகவும், ராஜ் குமார் சிங் மின்சாரத்துறை மந்திரியாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.உமா பாரதிக்கு குடிநீர் மற்றும் நீர்வளத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிதின் கட்காரிக்கு நீர்வளத்துறை நதிகள் மேம்பாடு மற்றும் கங்கை நதி புனரமைப்பு ஆகிய கூடுதல் பொறுப்புகள் அளிக்கப்பட்டுள்ளது.தர்மேந்திர பிரதானுக்கு திறன் மேம்பாட்டுத்துறை கூடுதல் பொறுப்பாக அளிக்கப்பட்டுள்ளது. வீட்டு வசதி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை இணை மந்திரியாக ஹர்தீப் புரி நியமிக்கப்பட்டுள்ளார். சுற்றுலாத்துறை இணை மந்திரியாக அல்போன்ஸ் கண்ணந்தனம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.மின்சாரத்துறை இணை மந்திரியாக ஆர்.கே.சிங், விளையாட்டுத்துறை மந்திரியாக ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.ஷிவ் பிரதாப் சிங் சுக்லா நிதித்துறை இணை மந்திரியாகவும், அஷ்வினி சவுபே சுகாதாரத்துறை இணை மந்திரியாகவும், விரேந்திர குமார் குழந்தைகள் மற்றும் மகளிர் நலத்துறை இணை மந்திரியாகவும், அனந்த்குமார் ஹெக்டே திறன் மேம்பாட்டுத்துறை இணை மந்திரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.ராணுவ மந்திரி பதவி ஏற்றுள்ள நிர்மலா சீதாராமன் (வயது 58),இந்திரா காந்திக்கு பிறகு 2-வது பெண் ராணுவ மந்திரி என்ற சிறப்பை பெற்றுள்ளார்.
2.போக்குவரத்து மற்றும் வழிகாட்டு தொழில்நுட்பங்களை வழங்க உதவும் ஐஆர்என்எஸ்எஸ் – 1எச் (IRNSS-1H) செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் இஸ்ரோவின் முயற்சி ( ஆகஸ்ட் 31ல்) தோல்வியில் முடிந்தது.இந்த முயற்சி தோல்வி அடைந்துள்ள நிலையில் இந்தாண்டு இறுதியில் ஜிஎஸ்எல்வி-எப்08 ராக்கெட் மூலம் ஜிசாட்-6ஏ செயற்கைகோளை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.


உலகம்

1.பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் கொண்ட பிரிக்ஸ் அமைப்பின் 9-வது உச்சி மாநாடு சீனாவின் புஜியான் மாவட்டம் ஜியாமென் நகரில் கடந்த செப்டம்பர் 3-ஆம் தேதி தொடங்கியது.


விளையாட்டு

1.இலங்கைக்கு எதிரான கொழும்புவில் நடைபெற்ற 5-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 100 ஸ்டம்பிங்குகளைச் செய்த முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனையை இந்தியாவின் மகேந்திர சிங் தோனி படைத்துள்ளார். 301 போட்டிகளில் அவர் இந்த சாதனையை செய்துள்ளார்.
2.கொழும்புவில் நடைபெற்ற 5-வது, இறுதி ஒருநாள் போட்டியிலும் வெற்றி பெற்றதன் மூலம் இலங்கை அணியை 5-0 என்று வீழ்த்தி இந்திய அணி ஒயிட்வாஷ் வெற்றி பெற்றுள்ளது.ஆட்ட நாயகனாக புவனேஷ் குமார் தேர்வு செய்யப்பட, தொடர் நாயகனாக பும்ரா தேர்வு செய்யப்பட்டார்.


இன்றைய தினம்

1.இன்று சர்வதேச கருணை தினம் (International Day of Charity).
குறிப்பாக வளரும் நாடுகளில் வறுமை, பொருளாதாரம் மற்றும் கலாச்சார பிரச்சினைகளால் மக்கள் அவதியுறுகின்றனர். இவர்களின் துயரங்களை மனிதாபிமான அடிப்படையில் துடைக்க வேண்டும். அன்னை தெரசா (Mother Teresa) தன் வாழ்நாள் முழுவதும் ஏழைகளுக்கு சேவை புரிந்தார். அவர் இறந்த நினைவு தினமான செப்டம்பர் 5 ஐ சர்வதேச கருணை தினமாக ஐ.நா. அறிவித்துள்ளது.
2.இன்று இந்தியாவில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.

 

– தென்னகம்.காம் செய்தி குழு