தமிழகம்

1.பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) பரிந்துரை அடிப்படையில் கல்லூரி, பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கான ஊதியத்தை உயர்த்தி தமிழக அரசு வெள்ளிக்கிழமை ஆணை (எண்.145) பிறப்பித்துள்ளது.பேராசிரியர்களுக்கு 1-10-2017 முதல் புதிய ஊதிய உயர்வு பலன்கள் வழங்கப்படும்.
2.தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் தடை விதிக்கப்பட்ட நிலையில், சில வகைகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளில் இருந்து தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.ஏற்றுமதி சார்ந்த ஆலைகளில்.. சிறப்புப் பொருளாதார மண்டலம் மற்றும் ஏற்றுமதி சார்ந்த ஆலைகளில் ஏற்றுமதிக்காக உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக் பைக்கு தடையில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. உற்பத்தி அல்லது பதனிடுதலில் சிப்பம் கட்டவும் (பேக்கிங்), மூடி முத்திரை இடும் பணிக்காகவும் பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
3.இந்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட தூய்மைக்கான செயலியை 13,337 பேரும், பெருநகர சென்னை மாநகராட்சியின் நம்ம சென்னை செயலியை 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் பதிவிறக்கம் செய்து பயனடைந்துள்ளனர் என்று பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
4.இணையதளத்தைப் பயன்படுத்தி கல்வி கற்பதில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக பள்ளிக் கல்வித் துறை செயலர் த.உதயசந்திரன் தெரிவித்துள்ளார்.
5.இயற்கையையும் பெண்மையையும் பாதுகாக்க வலியுறுத்தி 3,000 கி.மீ. தூரம் நின்றபடியே மோட்டார் பைக் ஓட்டி சாதனை படைத்த பெண் ஷிபி மேத்யூவுக்கு, கூடலூரில் வெள்ளிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.இவர் நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள மண்வயல் ஓடக்கொல்லி கிராமத்தில் பிறந்தவர் ஷிபி மேத்யூ (45).


இந்தியா

1.உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளை எந்த அமர்வுக்கு ஒதுக்கீடு செய்வது என்பது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் தலைமை நீதிபதிக்கு மட்டுமே உண்டு என்று உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்துள்ளது.
2.உச்ச நீதிமன்ற நீதிபதி பதவியில் இருந்து வெள்ளிக்கிழமை ஓய்வுபெற்ற நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் 5 ஆண்டுகள் வரை இந்தப் பதவியில் நீடிப்பார் என்று மத்திய பணியாளர், பயற்சித் துறை வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3.கர்நாடக சட்டப்பேரவைத் துணைத் தலைவராக மஜத எம்எல்ஏ கிருஷ்ணா ரெட்டி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
4.உத்தரப் பிரதேச மாநிலத்தில் வரும் 15-ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பைகள், கோப்பைகள் உள்ளிட்டவற்றின் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்படுவதாக மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.


உலகம்

1.பனாமா ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து அந்த நாட்டு ஊழல் தடுப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கியுள்ளது.


விளையாட்டு

1.சர்வதேச கிரிக்கெட் அரங்கில் கிரிக்கெட்டின் கடவுள் என்று வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் மற்றும் தற்போதைய இளம் இந்திய அணியின் குருவாக (பயிற்சியாளர்) கருதப்படும் ராகுல் டிராவிட் ஆகியோரைத் தொடர்ந்து 3-ஆவது இந்தியராக தல என்று ரசிகர்களால் அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி புதிய சாதனை படைத்துள்ளார்.இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது டி20 போட்டி முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு 500-ஆவது போட்டியாக அமைந்தது. மேலும் உலகளவில் இந்த மைல்கல்லை எட்டிய 9-ஆவது வீரராகவும் திகழ்கிறார்.


ன்றைய தினம்

1.இன்று சர்வதேசக் கூட்டுறவு தினம்(International Co-operative Day).

ஜனநாயகம், சமத்துவம், ஒருமைப்பாடு மற்றும் சுய வேலைவாய்ப்பு போன்ற அடிப்படைக் கோட்பாடுகளைக் கொண்டதுதான் கூட்டுறவு அமைப்பு. இந்த அமைப்பு உலகம் முழுவதும் விரிந்து காணப்படுகிறது. 1895ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் கூட்டுறவு அமைப்புகள் ஒன்றிணைந்தன. 100 ஆண்டுகள் நிறைவானதை ஒட்டி 1995ஆம் ஆண்டு முதல் சர்வதேசக் கூட்டுறவு தினம் கொண்டாடப்படுகிறது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு