தமிழகம்

1.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட பரிசுத் தொகுப்புடன் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசாக அளிக்கப்படும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சட்டப்பேரவையில் புதன்கிழமை அறிவித்தார்.

2.ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தனி நீதிபதி விதித்த தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

3.தமிழகத்தில் 8 ஆயிரத்து 909 அரசுப் பள்ளிகளில் 25-க்கும் குறைவான மாணவர்களே படித்து வருகின்றனர் என்ற  தகவல் வெளியாகியுள்ளது. அதில், மிகக் குறைவான மாணவர்கள் கொண்ட மாவட்டங்களில் சேலம் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.


இந்தியா

1.மக்களவையில் புதன்கிழமை அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள் 24 பேரை ஐந்து நாள்களுக்கு அவை நடவடிக்கையில் பங்கேற்பதில் இருந்து இடைநீக்கம் (சஸ்பெண்ட்) செய்து அவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் உத்தரவிட்டார்.

2.தேனா வங்கி, விஜயா வங்கி ஆகியவற்றை பாங்க் ஆஃப் பரோடாவுடன் இணைக்க மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.

3.செல்லிடப்பேசி எண் பெறவும், வங்கிக்கணக்கு தொடங்கவும் ஆதார் கட்டாயமில்லை என்ற உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவும், 12 இலக்க ஆதார் எண்ணை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்துவதை தடுக்கும்வகையிலும் ஆதார் திருத்த மசோதாவை மக்களவையில் அரசு புதன்கிழமை அறிமுகம் செய்தது.

4.எஸ்-400 அதிநவீன ஏவுகணையை இந்தியாவுக்கு அடுத்த ஆண்டு முதல் ரஷ்யா அளிக்கவுள்ளது.

5.சுமார் 123 கோடி பேருக்கு ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என்று மத்திய அரசு தெரிவித்தது.

6.அறிவியல் அறிஞர்கள் பலர் பங்கேற்கும் இந்திய அறிவியல் மாநாட்டை, பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கிவைக்க உள்ளார்.


வர்த்தகம்

1.கார் விற்பனையில் முதலிடத்தில் உள்ள மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் டிசம்பர் மாத விற்பனை 1.3 சதவீதம் சரிவடைந்து 1,28,338- வாகனங்களாக இருந்தது.

2.ஹுண்டாய் மோட்டார் இந்தியா டிசம்பரில் 42,093 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த 2017 டிசம்பரில் விற்பனையான 40,158 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 4.6 சதவீதம் அதிகமாகும்.

3.ஹோண்டா கார்ஸ் இந்தியா டிசம்பர் மாதத்தில் 13,139 கார்களை விற்பனை செய்துள்ளது. 2017 டிசம்பரில் விற்பனையான 12,642 எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இது 4 சதவீதம் அதிகம்.

4.சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டம் வரும் 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது.


உலகம்

1.கடந்த 2017ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2018ஆம் ஆண்டில் விமான விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.கடந்த 2017ஆம் ஆண்டில் 10 விமானங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளன. இதில் 44 பேர் பலியாகினர். இதுதான் விமான பயண வரலாற்றில், மிகவும் பாதுகாப்பான ஆண்டாகும். 2018ஆம் ஆண்டில் 15 விமானங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்துகளில் 556 பேர் பலியாகியுள்ளனர்.

2.பாகிஸ்தானுக்கு விரைவில் அதிநவீன போர் கப்பல்களை கட்டமைத்து வழங்க சீனா முடிவு செய்துள்ளது.


விளையாட்டு

1.சச்சின் டெண்டுல்கரின் சிறுவயது பயிற்சியாளர் ரமாகாந்த் அச்ரேகர் புதன்கிழமை மாலை மும்பையில் காலமானார்.

2.கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் முதல்நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.

3.மகளிர் தேசிய குத்துச்சண்டை போட்டியில், உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற சோனியா லேதர், சிம்ரன்ஜித் கெளர் ஆகியோர் காலிறுதிச்சுற்றுக்கு  முன்னேறினர்.

4.ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிரிஸ்பேன் இன்டர்னேஷனல் டென்னிஸ் போட்டியில், பிரிட்டன் வீரர் ஆன்டி முர்ரே 2-ஆவது சுற்றில் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.


ன்றைய தினம்

  • மேற்கிந்தியத் தீவுகளின் கூட்டமைப்பு அமைக்கப்பட்டது(1958)
  • ஆப்பிள் கணினி நிறுவனம் அமைக்கப்பட்டது(1977)
  • ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக போரிட்ட தமிழக மன்னன் கட்டபொம்மன் பிறந்த தினம்(1740)
  • முதல் எலக்ட்ரானிக் கடிகாரத்தை ஹமில்ட்டன் வாட்ச் கம்பெனி அறிமுகப்படுத்தியது(1957)
  • அலாஸ்கா, அமெரிக்காவின் 49வது மாநிலமானது(1959)

– தென்னகம்.காம் செய்தி குழு