தமிழகம்

1.தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கான நிவாரணத் தொகையை ரூ. 10 லட்சத்திலிருந்து ரூ. 20 லட்சமாக உயர்த்தி வழங்க முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
2.சென்னை எழும்பூரில் இருந்து கோடம்பாக்கத்துக்கு இடையே 163 ஆண்டுகள் பழமையான நீராவி என்ஜின் ரயில் ஞாயிற்றுக்கிழமை இயக்கப்பட்டது. இந்த ரயிலில் 40 பேர் பயணித்து மகிழ்ந்தனர்.


இந்தியா

1.ரூ.11,000 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள நாட்டின் முதலாவது ஸ்மார்ட் நெடுஞ்சாலையை பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார்.இந்த சாலையால், தில்லி-உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் இடையேயான பயண நேரம் பாதியாக குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2.மழை நீர் மற்றும் கழிவு நீர் கால்வாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சீராக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து உரிய தகவல்களை அளிக்கத் தவறியதாக தில்லி அரசுக்கு தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.
3.காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளராகவும், ஆந்திர மாநித்துக்கான மேலிடப் பொறுப்பாளராகவும் கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை அப்பொறுப்புகளை வகித்து வந்த மத்திய முன்னாள் அமைச்சர் திக்விஜய் சிங், அதிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.


வர்த்தகம்

1.பொதுத் துறையைச் சேர்ந்த பேங்க் ஆஃப் பரோடா நான்காம் காலாண்டில் ரூ.3,102.34 கோடி நிகர இழப்பைக் கண்டுள்ளது.


உலகம்

1.அயர்லாந்தில் நடைபெற்ற பொதுவாக்கெடுப்பில், கருக்கலைப்புத் தடைச் சட்டத்தை நீக்குவதற்கு பெரும்பாலான மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதையடுத்து, அந்தச் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ள அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
2.பாகிஸ்தானின் அடுத்த பொதுத் தேர்தல் வரும் ஜூலை மாதம் 25-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


விளையாட்டு

1.கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி நடைபெற்று வந்த 11-ஆவது ஐபிஎல் சீசன் நேற்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) முடிவடைந்தது. பரபரப்பாக நடைபெற்ற நேற்றைய இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.இதன்மூலம் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. மேலும அதிக முறை சாம்பியன் பட்டம் வென்றதில் மும்பை அணியின் சாதனையை சமன் செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
2.உக்ரைன் நாட்டின் கீவ் நகரில் சனிக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக் கால்பந்து இறுதி ஆட்டத்தில் லிவர்பூல் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் ரியல் மாட்ரிட் அணி வென்று 13-வது முறையாக கோப்பையை வென்றது.


ன்றைய தினம்

  • 2008- 240-ஆண்டுகள் மன்னராட்சியின் பின்னர், நேபாளம் குடியரசாக அறிவிக்கப்பட்டது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு