தமிழகம்

1. தமிழகம் – கேரளம் இடையேயான நதிநீர்ப் பங்கீட்டு பிரச்னைகளுக்கு தீர்வு காண சிறப்புக் குழுக்கள் அமைப்பது என்று இரு மாநில முதல்வர்கள் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது.

2.தமிழகத்தில் புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி காலாவதியான ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிக்கும் கால அவகாசம் ஓராண்டாக குறைக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

3.தமிழகத்தில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான பழங்காலப் பொருள்கள், தொல்பொருள்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றார் தொல்லியல் அலுவலர் சி.ஆர். காயத்ரி.

4.காகிதம் இல்லாமல் மின்னணு முறையில் கோப்புகளை மேலாண்மை செய்யும் திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான தகுந்த மின்னாளுமை மென்பொருள் சேவையானது மாநில தரவு மையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.


இந்தியா

1.நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்குப் பங்களிப்பவர்களுக்கு, சர்தார் வல்லபபாய் படேல் பெயரில் உயரிய விருது வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

2.கேரளத்தில் நடைபெற்ற எழுத்தறிவுத் தேர்வில் 2,993 பழங்குடியினர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், 85 வயது மூதாட்டியும் தேர்ச்சி பெற்றுள்ளார்.


வர்த்தகம்

1.மத்திய அரசு, ‘59 நிமிடங்களில் கடன்’ எனும் திட்டத்தை மேலும் பயனுள்ளதாக மாற்ற இருப்பதாக, மத்திய குறு, சிறு, நடுத்தர நிறுவன துறை அமைச்சர், நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

2.இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2019-20 நிதியாண்டில் 6.5 சதவீதமாகவே இருக்கும் என்று ஆசிய வளர்ச்சி வங்கி கணித்துள்ளது. முன்னதாக, கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என்று ஆசிய வளர்ச்சி வங்கி கூறியிருந்தது.

3.ஐஐஎஃப்எல் வெல்த் மற்றும் ஹுருன் இந்தியா இணைந்து வெளியிட்ட இந்தியப் பணக்காரர்களின் பட்டியலில், ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி, ரூ. 3.80 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். மேலும், தொடர்ந்து 8 -ஆவது ஆண்டாக அவர் முதலிடத்தை தக்கவைத்துள்ளார்.

4.பெட்ரோல் நிலையங்களில் கடன் அட்டையை (கிரெடிட் கார்டு) பயன்படுத்தி எரிபொருள் நிரப்பும்போது அளிக்கப்பட்டு வந்த 0.75 சதவீத தள்ளுபடி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 1-ஆம் தேதி முதல் இது நடைமுறைக்கு வருகிறது. அதே நேரத்தில் பற்று அட்டை (டெபிட் கார்டு) உள்ளிட்ட பிற மின்னணு முறையில் பணம் செலுத்தினால் சலுகை உண்டு.


உலகம்

1.பன்னாட்டு நிதியத்தின் (ஐஎம்எஃப்) தலைவராக பல்கேரியாவைச் சேர்ந்த பொருளாதார நிபுணரும், உலக வங்கியின் முன்னாள் தலைமை அதிகாரியுமான கிறிஸ்டலினா ஜார்ஜிவா அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

2.ஸ்வீடனைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா துன்பர்க்(Greta Thunberg), “மாற்று நோபல் பரிசு’ என்றழைக்கப்படும் வாழ்வாதார உரிமை விருதுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.16 வயதே நிரம்பிய கிரேட்டா துன்பர்க், பருவநிலை மாற்றத்துக்கெதிரான போராட்டத்தை கடந்த ஆண்டு தொடங்கினார்.

3.குழந்தைத் திருமணம் மற்றும் குழந்தைத் தொழிலாளர் முறைகளை எதிர்த்து போராடியதற்காக, ராஜஸ்தானைச் சேர்ந்த 17 வயது சிறுமி பாயல் ஜாங்கிட்-க்கு பில்கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் “சேஞ்ச்மேக்கர்’ (மாற்றத்துக்கு வித்திட்டவர்) விருது வழங்கப்பட்டுள்ளது.

4.“தூய்மை இந்தியா’ திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அளித்த சிறப்பான பங்களிப்புக்காக, பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் அவருக்கு “குளோபல் கோல்கீப்பர்’ விருது வழங்கப்பட்டது.

5.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை தகுதி நீக்கம் செய்வதற்கான விசாரணையைத் தொடங்கியுள்ளதாக அந்த நாட்டு நாடாளுமன்ற கீழவையான பிரதிநிதிகள் சபைத் தலைவர் நான்சி பெலோசி அறிவித்துள்ளார்.
குடியரசுக் கட்சியில் தமக்குப் போட்டியாகத் திகழும் ஜோ பிடனுக்கு எதிராக அந்நிய நாட்டை (உக்ரைன்) தூண்டி விட்டதன் மூலம், பதவிப் பிரமாண உறுதிமொழியை டிரம்ப் மீறிவிட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.


விளையாட்டு

1.சர்வதேச பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்நூக்கர் கூட்டமைப்பு சார்பில் மியான்மரில் நடைபெற்ற ஸ்நூக்கர் டீம் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் பங்கஜ் அத்வானி-ஆதித்ய மெஹ்ரா இணை இறுதிச்சுற்றில் 5-2 என்ற கணக்கில் தாய்லாந்து இணையை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

2.கனடாவில் நடைபெற்ற காமன்வெல்த் பளுதூக்குதல் (பவர்லிஃப்டிங்) மற்றும் பென்ஞ் பிரஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த ஆர்த்தி அருண் 5 தங்கப் பதக்கங்களையும், தில்லியைச் சேர்ந்த 16 வயது இளம் வீராங்கனை ரிஷிதா ஜெயின் 4 தங்கப் பதக்கங்களையும் வென்று சாதனை படைத்தனர்.


ன்றைய தினம்

  • உலக கடல்சார் தினம்
  • இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிறந்த தினம்(1932)
  • கர்நாடக இசை அறிஞர் பாபநாசம் சிவன் பிறந்த தினம்(1890)
  • கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை நினைவு தினம்(1954)
  • ஏமன் அரபுக் குடியரசு அமைக்கப்பட்டது(1962)
  • இந்தோனேஷியா ஐநாவில் இணைந்தது(1950)

– தென்னகம்.காம் செய்தி குழு