தமிழகம்

1.கீழடி உள்பட முக்கிய இடங்களில் அகழாய்வுப் பணிகளை வரும் ஆண்டில் தொடர்வதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. இதற்காக ரூ.2 கோடி அளவுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையத்தின் காலத்தை 6-ஆவது முறையாக நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

3.நான்குனேரி தொகுதியில் 32,312 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் நாராயணன் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர்களை பின்னுக்குத் தள்ளி வெற்றி பெற்றார்.

4.விக்கிரவாண்டி தொகுதியில் 44,782 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்தியா

1.நடந்து முடிந்த மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக-சிவசேனை கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. ஹரியாணாவில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் தொங்கு சட்டப்பேரவை அமைய வாய்ப்புள்ளது.

2.நாடு முழுவதும் 17 மாநிலங்களில் 51 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், 2 மாநிலங்களில் 2 மக்களவைத் தொகுதிகளுக்கும் நடைபெற்ற இடைத்தேர்தலுக்கான முடிவுகள் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டன.
சட்டப்பேரவைத் தொகுதி: உத்தரப் பிரதேச இடைத்தேர்தலில் (11 தொகுதிகள்) ஆளும் கட்சியான பாஜக 7, எதிர்க்கட்சியான சமாஜவாதி 3, ஆளும் பாஜகவின் கூட்டணிக் கட்சியான அப்னா தளம் (சோனேலால்) ஒரு தொகுதியை வென்றுள்ளன.

குஜராத் (6): பாஜக ஆளும் இந்த மாநிலத்தில் அக்கட்சியும், காங்கிரஸும் தலா  3 இடங்களை கைப்பற்றியுள்ளன.

பிகார் (5): எதிர்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளம் 2, ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் 1, அகில இந்திய மஜ்லீஸ் 1 தொகுதியை கைப்பற்றியுள்ள நிலையில், சுயேச்சை வேட்பாளர் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

கேரளம் (5): இங்கு எதிர்க்கட்சியான காங்கிரஸ் 2, ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1 தொகுதியை கைப்பற்றியுள்ளன.

அஸ்ஸாம் (4): ஆளும் பாஜக 3, எதிர்க்கட்சியான அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி ஒரு தொகுதியை வென்றுள்ளன.

பஞ்சாப் (4): இந்த மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் 3, எதிர்க்கட்சியான சிரோமணி அகாலிதளம் 1 தொகுதியை தனதாக்கியுள்ளன.

சிக்கிம் (3): இங்கு இடைத்தேர்தல் நடைபெற்ற தொகுதிகளில் ஆளும் கூட்டணியில் உள்ள பாஜக 2, ஆளும் கட்சியான சிக்கிம் கிராந்தி மோர்ச்சா 1 தொகுதியில் வெற்றி பெற்றன.

தமிழகம் (2): தமிழகத்தில் 2 தொகுதிகளையுமே ஆளும் கட்சியான அதிமுக கைப்பற்றியது.

ஹிமாசல பிரதேசம் (2): பாஜக ஆளும் இந்த மாநிலத்தில், இடைத்தேர்தல் நடைபெற்ற இரு தொகுதிகளிலும் அக்கட்சியே வென்றுள்ளது.

ராஜஸ்தான் (2): இரு பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் ஆளும் காங்கிரஸும், எதிர்க்கட்சியான ராஷ்ட்ரீய லோக்தாந்த்ரிக்கும் தலா ஒரு தொகுதியை வென்றன.

இதர 7 மாநிலங்கள்: இதேபோல், 7 மாநிலங்களில் தலா ஒரு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில் பாஜக ஆளும் அருணாசல பிரதேசத்தில் சுயேச்சை வெற்றி பெற்றார். மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், புதுச்சேரியில் ஆளும் கட்சியான காங்கிரஸ் வென்றது. ஒடிஸாவில் ஆளும் கட்சியான பிஜூ ஜனதா தளமும், மேகாலயத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனநாயகக் கட்சியும், தெலங்கானாவில் ஆளும் கட்சியான தெலங்கானா ராஷ்டிர சமிதியும் வெற்றி பெற்றன.


வர்த்தகம்

1.வெளிநாட்டு முதலீட்டாளர்களை அதிகளவில் ஈர்க்கும் வகையில், அன்னிய நேரடி முதலீட்டு கொள்கையை மேலும் எளிமைப்படுத்துவது குறித்து, 29ம் தேதியன்று, அமைச்சகங்கள் மட்டத்திலான கூட்டம் நடைபெற உள்ளது.

2.நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில், 5.5 சதவீதமாக இருக்கும் என, தர நிர்ணய நிறுவனமான, பிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

3.எளிதாக தொழில் புரிவதற்கான நாடுகள் குறித்த உலக வங்கியின் பட்டியலில், இந்தியா, 14 இடங்கள் முன்னேறி, 63வது இடத்தை பிடித்துள்ளது. இதற்கு முந்தைய தர வரிசை பட்டியலில் இந்தியா, 77வது இடத்தில் இருந்தது. தற்போது, 14 இடங்கள் முன்னேறி, 63 இடத்தை பிடித்துள்ளது.

4.நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகியின் செப்டம்பர் காலாண்டு லாபம் எட்டு ஆண்டுகள் காணாத அளவுக்கு சரிவைச் சந்தித்துள்ளது.


உலகம்

1.கர்தார்பூர் வழித்தட திட்டத்தை செயல்படுத்துவதற்கு இந்தியாவும், பாகிஸ்தான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

2.தொழில் நடத்துதல் 2020 எனும் ஆண்டறிக்கையை உலக வங்கி 24-ஆம் நாள் முற்பகல் வெளியிட்டது. இவ்வாண்டு, சீனாவில் தொழில் நடத்துவதற்கான சூழல், உலக தரவரிசையில், 15 இடங்கள் முன்னேறி, 31-ஆவது இடத்தில் உள்ளது.


விளையாட்டு

1.உலக முப்படைகள் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் ஆனந்தன் குணசேகரன், ஷிவ்பால் சிங் ஆகியோர் தங்கம் வென்றனர்.சீனாவுன் வூஹான் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியில் ஆடவர் ஈட்டி எறிதலில் இந்திய விமானப்படை வீரர் ஷிவ்பால் சிங் 83.33 மீ தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றார். மாற்றுத்திறனாளி 200 மீ டி1 பிரிவில் இந்திய வீரர் ஆனந்தன் குணசேகரன் தங்கப் பதக்கம் வென்று இப்போட்டியில் தனது 3-ஆவது தங்கத்தை கைப்பற்றினார்.

2.விரிவாக்கப்பட்ட கிளப் உலகக் கோப்பை கால்பந்து அறிமுக போட்டி வரும் 2021இல் சீனாவில் நடைபெறும் என பிஃபா தலைவர் இன்ஃபேன்டினோ தெரிவித்துள்ளார்.


ன்றைய தினம்

  • தகவல் அறியும் உரிமை சட்ட தினம்
  • கசக்கிஸ்தான் குடியரசு தினம்(1990)
  • விண்டோஸ் எக்ஸ்பி வெளியிடப்பட்டது(2001)
  • இந்தியாவில் தடா சட்டத்திற்கு பதிலாக பொடா சட்டம் கொண்டு வரப்பட்டது(2001)
  • ஹிட்லர் மற்றும் முசோலினி இணைந்து ரோம்-பெர்லின் அச்சு என்ற கூட்டமைப்பை ஏற்படுத்தினர்(1936)

– தென்னகம்.காம் செய்தி குழு