Current Affairs – 25 August 2019
தமிழகம்
1.சென்னையில் வரும் திங்கள்கிழமை (ஆக. 26) முதல் மின்கலப் பேருந்து இயக்கப்பட உள்ளது. சோதனை ஓட்ட முறையில் இயக்கப்படும் இந்தப் பேருந்தின் இயக்கத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கொடியசைத்துத் தொடங்கி வைக்கவுள்ளார். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ளது.
2.வழக்குகளை விரைந்து முடிக்கும் பொருட்டு, தமிழகத்தில் கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் 440 புதிய நீதிமன்றங்கள் திறக்கப்பட்டுள்ளன என்று சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.
3.கோவை மாவட்டம், ஆனைகட்டியில் உள்ள சலீம் அலி பறவையியல், இயற்கை வரலாற்று ஆராய்ச்சி மையத்தில் பறவைகள் சூழல் நச்சுத்தன்மைக்கான நாட்டின் முதலாவது ஆராய்ச்சி மையம் திறக்கப்பட்டுள்ளது.
இந்தியா
1.பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அருண் ஜேட்லி (66) உடல்நலக் குறைவால் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சனிக்கிழமை காலமானார்.முன்னாள் பிரதமர் வாஜ்பாய், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்ற மூத்த தலைவர்கள் வழிநடத்தி வந்த பாஜகவை, அடுத்த தலைமுறையினரின் கைகளில் கொண்டுசேர்த்ததில் அருண் ஜேட்லிக்கு முக்கியப் பங்குண்டு. ஜேட்லி நிதியமைச்சராக இருந்தபோதுதான், பணமதிப்பிழப்பு நடவடிக்கை, சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) அமலாக்கம் போன்ற முக்கிய நடவடிக்கைகளை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்டது.
2.முத்தலாக் கூறி விவாகரத்து செய்வதை தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்து கொண்டுவரப்பட்ட சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வர்த்தகம்
1.கடந்த 2018-19-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பு 2.7 லட்சம் கோடி டாலர். அப்போது, பொருள்கள் ஏற்றுமதி மதிப்பு 33,100 கோடி டாலர் அளவுக்கும், சேவைகள் ஏற்றுமதி மதிப்பு 20,400 கோடி டாலர் அளவுக்கும் இருந்தன. கடந்த 2018-19 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏற்றுமதி மட்டும் 20 சதவீத அளவுக்கு பங்களிப்பை வழங்கியுள்ளது என இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு (எஃப்ஐஇஓ) தெரிவித்துள்ளது.
2.நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 43,050 கோடி டாலராக குறைந்தது.
உலகம்
1.ஐக்கிய அரபு அமீரகத்தில் அபுதாபி இளவரசர் ஷேக் முகமது பின் சயீது அல் நயனை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பின்போது, வர்த்தகம், கலாசாரம் உள்ளிட்ட துறைகளில், இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருவரும் விவாதித்தனர்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு ஐக்கிய அரபு அமீரக அரசு அந்நாட்டின் மிக உயரிய விருதான “ஆர்டர் ஆஃப் சயீது’ விருதை வழங்கி கெளரவித்துள்ளது.
2.அமெரிக்கப் பொருள்களுக்கு கூடுதல் வரி விதித்துள்ள சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அந்த நாட்டிலிருந்து இறக்குமதியாகும் 55,000 கோடி டாலர் (சுமார் ரூ.39,33,000 கோடி) மதிப்பு கொண்ட பொருள்களுக்கான இறக்குமதி வரியை 5 சதவீதம் அதிகரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
3.விண்வெளிக்கு முதல் முறையாக மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் “ககன்யான்’ திட்டத்துக்காக, ரஷ்யாவின் விண்வெளி ஆய்வு மையத்தில் இந்திய விண்வெளி வீரர்கள் 4 பேருக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
விளையாட்டு
1.உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு தொடர்ந்து 3-ஆவது முறையாக தகுதி பெற்றுள்ளார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து.
ஸ்விட்சர்லாந்தின் பேஸல் நகரில் நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் உலகின் 3-ஆம் நிலை வீராங்கனை சீனாவின் சென் யுபெயை 21-7, 21-14 என்ற செட் கணக்கில் 40 நிமிடங்களில் வீழ்த்தி இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தார் சிந்து.
2.மேற்கிந்தியத் தீவுகளின் கம்மின்ஸ் 45 பந்துகளை எதிர்கொண்டு ரன் எடுக்காமல் ஆட்டமிழந்து வரலாற்றுச் சாதனையில் இடம்பிடித்துள்ளார். ரன் ஏதும் எடுக்காமலே களத்தில் அதிக நேரத்தைச் செலவிட்டவர்கள் வரிசையில் இவர் தற்போது இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.
இன்றைய தினம்
- உருகுவே விடுதலை தினம்(1825)
- பெல்ஜியம் புரட்சி ஆரம்பமானது(1830)
- கலிலியோ கலிலி தனது முதல் தொலைநோக்கியை அறிமுகப்படுத்தினார்(1609)
- ஜிம்பாப்வே ஐ.நா., வில் இணைந்தது(1980)
– தென்னகம்.காம் செய்தி குழு