தமிழகம்

1.மூன்றடுக்கு ஊராட்சி அமைப்புகளில் சிறந்த செயல்பாட்டை மேற்கொண்டதற்காக தமிழகத்துக்கு 12 தேசிய விருதுகள் வழங்கப்பட்டன.ஊராட்சிகளுக்கு கூடுதல் அதிகாரங்கள், கூடுதல் நிதி மற்றும் பணியாளர்களை அளித்து திறனை மேம்படுத்திய வகையில், மாவட்ட அளவில் சேலம் மாவட்டத்திற்கும், ஒன்றிய அளவில் ஈரோடு மாவட்டம் – பெருந்துறை, நாமக்கல் மாவட்டம் – பள்ளிப்பாளையம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கும், ஊராட்சிகள் அளவில் சேலம் மாவட்டம் – கோனூர், கோவை மாவட்டம் – மத்வராயபுரம், நாமக்கல் மாவட்டம் – அரசபாளையம், ஈரோடு மாவட்டம் – வெள்ளாளபாளையம், மதுரை மாவட்டம் -கோவில்பாப்பாக்குடி, திருவண்ணாமலை மாவட்டம் – எஸ்.யு. வனம் ஆகிய கிராம ஊராட்சிகளுக்கு தீன் தயாள் உபாத்யாய ஊராட்சிகளை வலிமைப்படுத்தும் விருது வழங்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம், ராவணப்புரம் ஊராட்சிக்கு வலுவான கிராம சபையின் மூலம் சிறப்பான சாதனைகள் புரிந்ததற்காக நானாஜி தேஷ்முக் ராஷ்டிரிய கெளரவ கிராம சபை தேசிய விருதும், தஞ்சாவூர் மாவட்டம், பட்டீஸ்வரம் ஊராட்சிக்கு குழந்தைகள் நேய கிராம ஊராட்சிக்கான தேசிய விருதும் என மொத்தம் 12 தேசிய விருதுகள் வழங்கப்பட்டன.

2.தமிழகத்தில் புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகள் அமைவதற்கான ஒப்புதலை மத்திய அரசு அளித்துள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடிதம் மாநில சுகாதாரத் துறைச் செயலருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

3.தெற்கு ரயில்வே சார்பில், ரயில்வே ஊழியர்கள், வாடிக்கையாளர் பயன்பாட்டுக்காக, ரயில் தண்டோரா என்னும் செல்லிடப்பேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இந்தச் செயலியின் மூலம், ரயில்வே ஊழியர்களும், பயணிகளும் தங்களது தினசரி வேலைகள் குறித்து அறிந்த கொள்ள முடியும். மேலும், ரயில்வே தொடர்பான பணப் பரிவர்த்தனை செய்து கொள்ளவும் இந்தச் செயலி உதவிகரமாக இருக்கும்.
மேலும், அனைத்து விதமான ரயில்வே அறிவிப்புகள், பயணச்சீட்டு தொடர்பான தகவல்கள், ரயில்வே உணவு மற்றும் இதர தகவல்கள், பார்சல் சேவை குறித்து தகவல்கள் ஆகியவற்றை இந்தச் செயலியின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

4.வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புத் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் இதுவரை 3.71 கோடி பேர் விவரங்களைச் சரிபார்த்துள்ளனர். அதிகபட்சமாக பெரம்பலூர் மாவட்டத்தில் 5.51 லட்சம் வாக்காளர்கள் முழுமையான அளவில் விவரங்களை சரிபார்த்துள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.


இந்தியா

1.ஜம்மு-காஷ்மீர், லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்களுக்கான புதிய துணை நிலை ஆளுநர்களும், ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியும் வரும் 31-ஆம் தேதி பதவியேற்க உள்ளனர்.

2.நிலவுக்குப் பயணம் மேற்கொண்ட சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டரைக் கண்டறிய இயலவில்லை என அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் (நாசா) தெரிவித்துள்ளது.


வர்த்தகம்

1.பிஎஸ்என்எல் (பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட்) மற்றும் எம்டிஎன்எல் (மகாநகர் டெலிபோன் நிகம் லிமிடெட்) ஆகிய இரு பொதுத் துறை நிறுவனங்களையும் இணைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இவ்விரு நிறுவனங்களையும் ரூ.68,751 கோடியில் வலுப்படுத்தும் திட்டத்துக்கும், 4ஜி சேவையைத் தொடங்குவதற்கும், ஊழியர்கள் விருப்ப ஓய்வுபெறும் திட்டத்துக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

2.தொழில் தொடங்குவதற்கு உகந்த சூழ்நிலை உள்ள நாடுகள் பட்டியலை வெளியிடுவதற்கு, இந்தியாவில் கணக்கீடு மேற்கொள்ள கொல்கத்தா, பெங்களூரு நகரங்களை உலக வங்கி இணைத்துள்ளது.
உலக வங்கி சார்பில் தொழில் தொடங்குவதற்கு உகந்த சூழ்நிலை உள்ள நாடுகள் பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு வருகிறது.

3.சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த, கிரெடிட் சுயிஸ் வங்கி, இந்திய குடும்பங்களின் சொத்து மதிப்பு குறித்து, ஆய்வு ஒன்றை மேற்கொண்டு, அறிக்கை வெளியிட்டுள்ளது.ஒரு பக்கம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, ஐந்து ஆண்டுகளில் இல்லாத வகையில், 5.8 சதவீதமாக குறைந்திருக்க, இன்னொரு பக்கம் குடும்பங்களின் சொத்து மதிப்பு, இரு மடங்கு அதிகரித்துள்ளதாக இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

நடப்பு ஆண்டில், இந்திய குடும்பங்களின் சொத்து மதிப்பு, 12.6 லட்சம் கோடி டாலராக உயர்ந்துள்ளது. இது, இந்திய ரூபாய் மதிப்பில், 894 லட்சம் கோடி ரூபாய்.இதுவே, கடந்த ஆண்டில், இந்திய குடும்பங்களின் மொத்த சொத்து மதிப்பு, 5.97 லட்சம் கோடி டாலராக இருந்தது. இந்திய ரூபாய் மதிப்பில் இது, 424 லட்சம் கோடி ரூபாய்.

4.இந்திய பங்குச் சந்தைகளில், பி நோட் எனப்படும் பங்கேற்பு பத்திரங்கள் வழியாக செய்யப்படும் முதலீடுகள் தொடர்ந்து நான்காவது மாதமாக வீழ்ச்சியடைந்து, செப்டம்பர் இறுதியில், 76 ஆயிரத்து, 611 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.


உலகம்

1.துனிசியாவின் புதிய அதிபராக காயிஸ் சயீது பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்த 13-ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் வெற்றியடைந்த அவர், பிற எம்.பி.க்களுடன் சேர்ந்து தலைநகர் துனிஸில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.


விளையாட்டு

1.உஷூ உலக சாம்பியன்ஷிப் போட்டியில், ஆடவர் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையைப் படைத்தார் 22 வயது பிரவீண் குமார்.48 கிலோ எடைப் பிரிவில் இவர் தங்கம் வென்றார்.
சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற இறுதிச்சுற்றில் பிலிப்பின்ஸ் வீரர் ரஸல் தியாஸை 2-1 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் ஆனார்.

2.பிரெஞ்ச் ஓபன் பாட்மிண்டன் போட்டியில், முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர்கள் ஸ்ரீகாந்த், காஷ்யப், எஸ்.வர்மா ஆகியோர் தோல்வி அடைந்து வெளியேறினர்.

3.சீனாவில் நடைபெற்று வரும் 7-ஆவது உலக ராணுவ வீரர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் 140 நாடுகளைச் சேர்ந்த 10 ஆயிரம் தடகள வீரர்கள் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். இதில், மாற்றுத்திறனாளிகளுக்கான 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தமிழக வீரர் தஞ்சாவூரைச் சேர்ந்த ஆனந்தன் குணசேகரன் பங்கேற்று தங்கம் வென்றுள்ளார்.


ன்றைய தினம்

  • ஐக்கிய நாடுகள் தினம்(1945)
  • ஜாம்பியா விடுதலை தினம்(1964)
  • ரஷ்யாவில் அக்டோபர் புரட்சி இடம்பெற்றது(1917)
  • ஜார்ஜ் வாஷிங்டன் பாலம் திறக்கப்பட்டது(1931)
  • பிரேசிலில் ராணுவ புரட்சி இடம்பெற்றது(1930)

– தென்னகம்.காம் செய்தி குழு