தமிழகம்

1.தமிழகத்தில் ஒரே வளாகத்திலும் அருகருகேயும் தனித்தனியாகவும் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளிகளின் பொறுப்பு, அதே வளாகத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்கப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் அறிவித்துள்ளார்.

2.ஊட்டச்சத்து இயக்க (போஷன் அபியான்) திட்டத்தில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக தேசிய அளவில் தமிழகத்திற்கு முதலிடத்திற்கான இரு விருதுகளும், இரண்டாமிடத்திற்கான ஒரு விருதும் புது தில்லியில்  நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டன.

3.சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பொறுப்பு வகித்து வந்த நீதிபதிகள் எஸ்.ராமதிலகம், ஆர்.தாரணி, பி.ராஜமாணிக்கம், டி.கிருஷ்ணவள்ளி, ஆர்.பொங்கியப்பன், ஆர்.ஹேமலதா ஆகிய 6 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.


இந்தியா

1.முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், ஆறாவது முறையாக மாநிலங்களவை உறுப்பினராக  பதவியேற்றுக் கொண்டார்.
86 வயதாகும் மன்மோகன் சிங்கிற்கு மாநிலங்களவைத் தலைவர் எம். வெங்கய்ய நாயுடு தனது அலுவலக அறையில் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

2.வழக்கு விசாரணைகளில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக 15 சிபிஐ அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சரின் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.


வர்த்தகம்

1.சர்வதேச தரக் குறியீட்டு நிறுவனமான மூடிஸ்(Moody’s), நடப்பு ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.2 சதவீதமாக இருக்கும் என குறைத்து மதிப்பீடு செய்துள்ளது.

2.உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு விரைவான சேவையை அளிக்கும் பொருட்டு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அமேசான் டெலிவரி மையங்களை ஏற்படுத்த உள்ளது.

3.பொதுத் துறை வங்கிகள் கடன் அளிப்பதை அதிகரிக்கவும், பணப்புழக்கத்தை மேம்படுத்தவும் ரூ.70,000 கோடி கூடுதல் மூலதன நிதி உடனடியாக வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள வட்டி விகிதங்கள் குறைப்பின் பயன்களை, வாடிக்கையாளர்களுக்கு வழங்க வங்கிகள் முடிவு செய்துள்ளன. இதனால், வீடு, வாகனம், இதர சில்லறை கடன்களுக்கான வட்டி குறையும்.

சிறு, குறு, நடுத்தர தொழில்துறை நிதிப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள நிலையில், சரக்கு-சேவை வரியில் (ஜிஎஸ்டி) அந்த நிறுவனங்களுக்கு திருப்பியளிக்க வேண்டிய நிலுவைத் தொகை 30 நாள்களுக்குள் வழங்கப்படும்.

தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்பு துறையில் பதிவு செய்துள்ள ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் திரட்டும் மூலதனத்துக்கு விதிக்கப்பட்ட வருமான வரி (ஏஞ்சல் வரி) நீக்கப்படுகிறது. அந்த நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்காக, மத்திய நேரடி வரிகள் வாரியத்தின்கீழ் தனி பிரிவு ஏற்படுத்தப்படும்.

வெளிநாட்டு, உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள், பங்குச் சந்தையில் ஈட்டும் ஆதாயங்களுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் வரி உயர்வு திரும்பப் பெறப்படுகிறது.

2020-ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் வாங்கப்படும் பிஎஸ்-4 தரத்திலான வாகனங்கள், அவை பதிவு செய்யப்படும் காலம் முழுமைக்கும் இயங்க அனுமதிக்கப்படும். வாகனங்களுக்கான பதிவுக் கட்டணத்தை உயர்த்தும் முடிவு, அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை ஒத்திவைக்கப்படுகிறது.

வருமான வரி வசூலில் கெடுபிடியையும், முறைகேடுகளையும் தடுக்கும் வகையில், இனி வருமான வரி நோட்டீஸ்கள், உத்தரவுகள் ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்பின் வாயிலாக அளிக்கப்படும். அதிகாரிகளால் அளிக்கப்படும் தனிப்பட்ட நோட்டீஸ்கள், கடிதங்கள் செல்லாதவையாக கருதப்படும். இதேபோல், நிறுவனங்களுக்கான சமூக பொறுப்புடைமை தொடர்பான விதிமுறை மீறல்கள் குற்றச் செயல்களாக கருதப்பட மாட்டாது.

4.இந்தியாவில் தற்போது காணப்படும் பொருளாதார மந்த நிலை கடந்த 70 ஆண்டுகளில் அரசு எதிர்கொள்ளாதது என நீதி ஆயோக்கின் துணைத் தலைவர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

5.இந்திய பொருளாதாரத்தில் தேக்க நிலை நிலவுவதாக பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு உறுப்பினர் ஷாமிகா ரவி கூறியுள்ளார்.


உலகம்

1.பயங்கரவாதக் குழுக்களுக்கு நிதி கிடைப்பதை தடுக்க தவறியதற்காக, பாகிஸ்தானை கருப்புப் பட்டியலில் சேர்த்து, சர்வதேச பயங்கரவாத நிதி தடுப்பு அமைப்பின் (எஃப்ஏடிஎஃப்) செயல்படும் ஆசிய-பசிபிக் குழு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

2.பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் சுற்றுப் பயணம் சென்ற நிலையில், இந்தியா-பிரான்ஸ் இடையே தகவல் தொழில்நுட்பம், விண்வெளி உள்ளிட்ட 4 துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

3.இந்தியா-அமெரிக்கா இடையேயான பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை தொடர்பான உறவில் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து இருநாட்டு உயர்நிலைக் குழு விரிவாக பேச்சுவார்த்தை நடத்தியது.

4.இலங்கையில் ஈஸ்டர் தின தற்கொலைத் தாக்குதலுக்குப் பிறகு அறிவிக்கப்பட்ட அவசரநிலை முடிவுக்கு வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


விளையாட்டு

1.உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிக்கு தகுதி பெற்றார் இந்திய  வீராங்கனை பி.வி.சிந்து. இப்போட்டியில் தனது 5-ஆவது பதக்கத்தையும் உறுதி செய்தார்.

2.சர்வதேச தரத்துக்கு இணையாக தொழில்நுட்ப வசதிகள் இல்லை எனக் கூறி இந்திய ஊக்க மருந்து சோதனை ஆய்வகத்துக்கு 6 மாதங்கள் தடை விதித்து, உலக ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் (வாடா) நடவடிக்கை எடுத்துள்ளது.


ன்றைய தினம்

  • உக்ரேன் விடுதலை தினம்(1991)
  • கல்கத்தா நகரம் அமைக்கப்பட்டது(1690)
  • நேட்டோ ஒப்பந்தம் அமலுக்கு வந்தது(1949)
  • ஆஸ்திரேலிய அண்டார்க்டிக் பிரதேசம் உருவாக்கப்பட்டது(1936)
  • நாமக்கல் கவிஞர் வே.ராமலிங்கம் பிள்ளை இறந்த தினம்(1972)

– தென்னகம்.காம் செய்தி குழு