தமிழகம்

1. தமிழகத்தில் ரூ.133 கோடியில் கட்டப்பட்ட புதிய வேளாண்மைத் துறை கட்டடங்களை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.

2.கடந்த 2011-12-ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகளில் 100 லட்சம் மெட்ரிக் டன்னுக்கும் அதிகமாக உணவு தானியம் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது. இந்தச் சாதனைக்காக ஐந்து முறையும் கிரிஷ் கர்மான் விருதினை மத்திய அரசு வழங்கியுள்ளது.

3.தமிழக அரசில் ஒரே நாளில் 55 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் பலர் உதவி ஆட்சியர் நிலையில் உள்ளவர்கள்.


இந்தியா

1.உச்சநீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் மனுக்களை தனி நீதிபதி அமர்வு விரைவில் விசாரிக்க இருக்கிறது. உச்சநீதிமன்றத்தில் அதிக அளவில் வழக்குகள் தேங்குவதைக் குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக உச்சநீதிமன்ற விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கக் கூடிய பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளில் ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் மனுக்களை தனி நீதிபதி அமர்வு விசாரிக்கும்.


வர்த்தகம்

1.உள்நாட்டு நிறுவனங்களுக்கான பெரு நிறுவன வரியை (கார்பரேட் வரி) மத்திய அரசு 25.17 சதவீதமாகக் குறைத்துள்ளது. இது சுமார் 10 சதவீத வரிக் குறைப்பாகும்; இந்த வரிக் குறைப்பு கடந்த ஏப்ரல் மாதம் முதல் முன்தேதியிட்டு அமலுக்கு வருகிறது.இதன் மூலம் அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.1.45 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும். பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் தங்கள் பங்குகளைத் திரும்ப வாங்கிக் கொள்ளும்போது அதற்கு இனி வரி விதிக்கப்படமாட்டாது. பெரிய முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் ஈட்டும் வருவாய் மீது விதிக்கப்பட்டு வரும் கூடுதல் வரி திரும்பப் பெறப்படுகிறது. இது வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் பொருந்தும்.

அடிப்படையில் பெரு நிறுவன வரி இப்போதுள்ள 30 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதுவே புதிய நிறுவனங்களுக்கு 25 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. இது நடைமுறையில், பெரு நிறுவனங்களின் வருவாய் மீது இப்போது விதிக்கப்படும் 34.94 சதவீத வரி இனி 25.17 சதவீதமாக (தூய்மை இந்தியா கூடுதல் வரி (செஸ்), கல்விக்கான கூடுதல் வரி ஆகியவை உள்பட) இருக்கும்.

2.பெரு நிறுவனங்களுக்கான வரி குறைப்பு எதிரொலியால் இந்தியப் பங்குச் சந்தைகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 1,921 புள்ளிகள் அதிகரித்தது. கடந்த 10 ஆண்டுகளில் ஒரே நாளில் சென்செக்ஸ் இந்த அளவுக்கு உயர்ந்தது இதுவே முதல் முறையாகும்.

3.ஹோட்டல் அறை வாடகை மீதான சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) குறைக்கப்பட்டுள்ளது.அதன்படி ரூ.1,000 வரையிலான ஹோட்டல் அறை வாடகைக்கு வரி கிடையாது. ஓர் இரவு தங்க ரூ.1001 முதல் ரூ.7,500 வரை வாடகை வசூலித்தால், அதன் மீதான ஜிஎஸ்டி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்படுகிறது. அதேபோல ரூ.7,500-க்கு மேலான வாடகைக்கு விதிக்கப்பட்டு வந்த 28 சதவீத வரி 18 சதவீதமாக குறைக்கப்படுகிறது.

ஆடைகள், பைகளில் பயன்படுத்தப்படும் ஜிப்கள் மீதான ஜிஎஸ்டி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகவும், வெட் கிரைண்டர் மீதான ஜிஎஸ்டி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகவும், கப்பல், படகுகளுக்கான எரிபொருள் மீதான ஜிஎஸ்டி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படுகிறது. சமையலுக்கு பயன்படுத்தப்படும் உலர்ந்த புளி மீதான ஜிஎஸ்டி ரத்து செய்யப்படுகிறது.அதேபோல இலைகள், பாக்கு மட்டைகள் உள்ளிட்டவை கொண்டு தயாரிக்கப்படும் கோப்பைகள், தட்டுகள் மீதான ஜிஎஸ்டியும் ரத்து செய்யப்பட்டுள்ளது.


உலகம்

1.லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த, மனிதர்களின் முன்னோடி இனமான டினிசோவன்கள், எந்த உருவத்தைக் கொண்டிருந்தார்கள் என்பதை இஸ்ரேல் ஜெருசலேம் நகரிலுள்ள எபிரேய பல்கலைக்கழக விஞ்ஞானிகள் விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வின் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர்.

டினிசோவன்கள் மட்டுமன்றி, நியாண்டர்தால் மனிதர்கள், 1 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த நவீன மனிதர்கள் ஆகியோரின் எலும்பு மாதிரிகளும் இத்தகைய சோதனைகளுக்கு உள்படுத்தப்பட்டன. அதன் மூலம், அந்த மூன்று மனித முன்னோடி இனங்களின் உடல்கூறு இடையிலான ஒற்றுமைகளும், வேற்றுமைகளும் ஆராயப்பட்டன.

விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வின்படி, டினிசோவன்களுக்கும், நியாண்டர்தால்களுக்கும் உருவ ஒற்றுமை நிலவினாலும், பல அம்சங்களில் அவர்கள் நவீன மனிதர்களின் உடல்கூறுகளைக் கொண்டிருந்தனர்.
இருந்தாலும், 56 உடல்கூறுகளில் நியாண்டர்தால் மனிதர்களைப் போலவும் இல்லாமல், நவீன மனிதர்களைப் போலவும் இல்லாமல் பிரத்யேக அம்சங்களை டினிசோவன்கள் கொண்டிருந்தனர். அவற்றில் 34 அம்சங்கள் மண்டையோட்டில் மட்டுமே காணப்பட்டன.
டினிசோவன்களின் மண்டையோடு நவீன மனிதர்கள் மற்றும் நியாண்டர்தால் மனிதர்களைவிட அகலமாக இருந்தது.

2.மங்கோலியாவின் தலைநகர் உலான்பாதரில் புதிதாக நிறுவப்பட்டுள்ள புத்தர் சிலையை அந்நாட்டு அதிபர் கல்த்மாஜின் பதுல்காவும், பிரதமர் நரேந்திர மோடியும் தில்லியில் இருந்தபடி காணொலி வழியாக  திறந்து வைத்தனர்.


விளையாட்டு

1.உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் அரையிறுதியில் வென்று இறுதிச்சுற்றில் நுழைந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தார் அமித் பங்கால்.

2.கஜகஸ்தானில் நடைபெற்றுவரும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் பிரிவு முதல் சுற்றிலேயே இந்திய வீரர் சுஷில் குமார் தோல்வி அடைந்தார்.


ன்றைய தினம்

  • உலக அமைதி தினம்
  • ஆர்மேனியா விடுதலை தினம்(1991)
  • மோல்ட்டார் விடுதலை தினம்(1964)
  • பிரான்சில் குடியரசு நிறுவப்பட்டது(1792)
  • பக்ரைன்,பூட்டான், கத்தார் ஆகியன ஐ.நா.,வில் இணைந்தன(1971)

– தென்னகம்.காம் செய்தி குழு