இந்தியா

1.இந்திய தபால் துறை சமீபத்தில் மறைந்த இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்குக்கு தபால் தலை வெளியிட்டு அஞ்சலி செலுத்தியது.
2.புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பொருளாதார குற்றப்பிரிவின் அமலாக்கத்துறை முதன்மை சிறப்பு இயக்குனர் பதவியில் சிமான்ச்சலா டேஷ் நேற்று நியமிக்கப்பட்டுள்ளார்.
3.ஒடிசா ஆளுநரின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில் அப்பொறுப்பை பீகார் கவர்னர் சத்யா பால் மாலிக் கூடுதலாக கவனிப்பார் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.


இன்றைய தினம்

1.இன்று உலக பொம்மலாட்டம் தினம்(World Puppetry Day).
பொம்மலாட்டம் மிகப் பழமையான மரபுவழிக் கதைகளில் ஒன்று. உலகின் பல்வேறு இடங்களில் இக்கலை மரபுவழிக் கலையாகத் திகழ்கிறது. உயிர் அற்ற பொம்மைகள், உயிர்பெற்று திரைக்கு முன்னே ஆடிப்பாடி, பேசும் உணர்வில் பார்வையாளர்களைக் கவரும் கலையாக உள்ளது. உலகம் முழுவதும் வாழும் பொம்மலாட்டக் கலைஞர்களை கௌரவிக்க இத்தினம் 2003ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடப்படுகிறது.
2.இன்று உலகக் கவிதைகள் தினம்(World Poetry Day).
எழுச்சிமிக்க கவிதைகள் நாட்டின் சுதந்திரத்திற்கும், புரட்சிக்கும் வித்திட்டிருக்கிறது. இரண்டு வரிகளைக் கொண்ட திருக்குறள் உலகம் முழுவதும் போற்றப்படுகிறது. யுனெஸ்கோ 1999ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 அன்று பாரிஸ் நகரில் 30ஆவது பொதுமாநாட்டை நடத்தியது. இந்த மாநாட்டில் உலக கவிதைகள் தினமாக மார்ச் 21 ஐ அறிவித்தது. இதனை ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக்கொண்டது.
3.இன்று உலக காடுகள் தினம்(World Forestry Day).
வனங்கள் அழிக்கப்படுவதால் உலகில் வெப்பநிலை கூடுகிறது. காடுகளின் அவசியத்தை உணர்த்த உலக காடுகள் தினம் கொண்டாடப்படுகிறது. ஐரோப்பா nhண்மை கூட்டமைப்பு நவம்பர் 1971இல் கூடியது. இந்த அமைப்பு மார்ச் 21ஐ உலக காடுகள் தினமாகக் கொண்டாடுமாறு கேட்டுக்கொண்டது. இதனை உலக நாடுகள் அனைத்தும் ஏற்றுக்கொண்டன.
4.இன்று சர்வதேச இனப்பாகுபாடு நிராகரிப்பு தினம்(International Day of the Elimination of Racial Discrimination).
இனக்கொள்கைக்கு எந்தவித அடிப்படை விஞ்ஞானமும் இல்லை. மனிதனை இனங்களாகப் பிரிக்கப்படுவது எந்தவிதத்திலும் சரியானதல்ல. மனிதர்களுக்கு இடையே இனபேதம் பார்ப்பது சமூக விரோதச் செயல் என யுனெஸ்கோ தெரிவிக்கிறது. உலகின் பல நாடுகளில் இனவெறி இருப்பதைக் கருத்தில்கொண்ட ஐ.நா. சபை 1966ஆம் ஆண்டில் மார்ச் 21ஐ சர்வதேச இனப்பாகுபாடு நிராகரிப்பு தினமாக அறிவித்தது.
5.இன்று உலக டவுன் சிண்ட்ரோம் தினம்(World Down Syndrome Day).
நோய் எப்போதும் மனிதனின் பகுதியாகவே உள்ளது. டவுன் சிண்ட்ரோம் என்பது மனவளர்ச்சி குன்றியதைக் குறிப்பிடுகிறது. இந்த நோயானது மனித செல்லுக்குள், குரோமோசோமில் ஏற்படும் பிழையால் ஏற்படுகிறது. இந்த நோயைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த ஐ.நா. பொதுச்சபை 2011ஆம் ஆண்டு, டிசம்பர் மாதத்தில் மார்ச் 21ஐ உலக டவுன் சிண்ட்ரோம் தினமாக அறிவித்தது.
6.இன்று சர்வதேச நவ்ரூஸ் தினம்(International Day of Nowruz).
நவ்ரூஸ் என்பது பழங்கால பாரம்பரிய இசைத் திருவிழா. வெவ்வேறு சமூகங்கள் மத்தியில் கலாச்சார பன்முகத்தன்மை, நட்பு பங்களிப்பு, அமைதி மற்றும் தலைமுறைகளுக்கு இடையே குடும்பங்களில் ஒற்றுமை, அத்துடன் நல்லிணக்கம் உலகம் முழுவதும் அமைவதை ஊக்குவிக்க இத்தினம் கொண்டாடப்படுகிறது. இத்தினத்தை ஐ.நா.சபை 2010ஆம் ஆண்டில் அறிவித்தது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு