தமிழகம்

1. கீழடி – சிறப்பு தொகுப்பு

கீழடியில் மேற்கொள்ளப்பட்ட நான்காம் கட்ட அகழாய்வு குறித்த அறிக்கையின் மூலம் தமிழ்ச் சமூகம் கி.மு. 6-ஆம் நூற்றாண்டிலேயே எழுத்தறிவு பெற்ற சமூகமாக விளங்கியுள்ளது தெரியவந்துள்ளது.பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்ட மாதிரிகளில் அதிகபட்சமாக 353 செ.மீ. ஆழத்தில் கிடைக்கப் பெற்ற கரிமத்தின் காலம் கி.மு. 580 என்று கணக்கீடு செய்யப்பட்ட ஆய்வறிக்கை கிடைத்துள்ளது.
இக்கால கணிப்பு கி.மு. 6-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 1-ஆம் நூற்றாண்டு வரை வளமையான பண்பாடு கொண்ட பகுதியாக கீழடி விளங்கியிருக்க வேண்டும் எனத் தெரிகிறது. தற்போது கிடைக்கப் பெற்றுள்ள சான்றுகளின் மூலம் வைகை நதிக்கரையில் நகரமயமாதல், கி.மு. 6-ஆம் நூற்றாண்டிலிருந்து தொடங்குகிறது என்பது தெளிவாகிறது. இதே காலகட்டத்தில்தான் வட இந்தியாவின் கங்கைச் சமவெளிப் பகுதியிலும் நகரமயமாதல் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
கீழடி அகழாய்வில் கிடைத்த அறிவியல் ரீதியான காலகணிப்புகள் தமிழ்- பிராமியின் காலம். மேலும், நூறாண்டுகள் (கி.மு.6-ஆம் நூற்றாண்டு) பழமை வாய்ந்தது எனும் முடிவுக்கு நம்மை இட்டுச் செல்கிறது. இதன் மூலம் 2,600 ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழகம் எழுத்தறிவு பெற்ற சமூகமாக விளங்கியுள்ளதை நிலைநிறுத்த முடிகிறது.

கீழடியிலிருந்து கிட்டத்தட்ட 70 எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை (53 சதவீதம்) காளை, எருமை, ஆடு, பசு ஆகியவற்றினுடையவை. இந்தப் பகுப்பாய்வு முடிவுகளின் மூலம் சங்ககாலச் சமூகம், வேளாண்மையை முதன்மைத் தொழிலாகக் கொண்டிருந்ததோடு கால்நடை வளர்ப்பையும் மேற்கொண்டிருந்தனர் என்பது தெளிவாகிறது.

கீழடி அகழ்வாய்வில் தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட 56 பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இவற்றில் குவிரன், ஆத(ன்) உள்ளிட்ட பெயர்களும் முழுமையடையாத எழுத்துகளும் கிடைத்துள்ளன. இதில் ஆதன் என்ற பெயர், அதன் என்று குறிப்பிடப்படுகிறது. முற்கால தமிழ் பிராமியில், நெடிலைக் குறிக்க ஒலிக்குறியீடு இடும் வழக்கம் இல்லை என்பதால், இந்த தமிழ் பிராமி எழுத்துகள் காலத்தால் மிகவும் முந்தையவையாகக் கருதப்படுகின்றன.

கீழடியில் நூல் நூற்கப் பயன்படும் தக்கிளி, தறிகளில் பயன்படுத்தப்படும் தூரிகை, தறியில் தொங்கவிடும் கருங்கல் போன்றவையும் கிடைத்திருப்பதால், இப்பகுதியில் வாழ்ந்தவர்கள் நெசவுத் தொழிலிலும் ஈடுபட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இங்கு பல விளையாட்டுப் பொருள்கள் குறிப்பாக ஆட்டக் காய்கள், தாய விளையாட்டிற்கான பகடைக்காய்கள் அதிக அளவில் கிடைத்துள்ளன. இவை பெரும்பாலும் சுட்டமண்ணால் ஆனவை.

வடமேற்கு இந்தியாவின் மகாராஷ்டிரம், குஜராத் போன்ற பகுதிகளில் பரவலாகக் காணப்படும் அகேட் மற்றும் கார்னீலியம் கற்களால் ஆன மணிகளும் கிடைத்துள்ளன.
ரோம் நாட்டை சேர்ந்த அரிட்டைன் பானை ஓடு மண்ணடுக்கின் மேல் நிலையில் கிடைத்திருக்கிறது. இவை ரோம் நாட்டில் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் புழக்கத்தில் இருந்தவை. எனவே, ரோம் நாட்டைச் சேர்ந்த வணிகர்கள் அல்லது அழகன்குளத்தில் தங்கியிருந்த ரோம் நாட்டைச் சேர்ந்த வணிகர்கள் இந்தப் பகுதிக்கு வந்திருக்கலாம்.
இங்கு ஒட்டுமொத்தமாக சுடுமண்ணாலான 13 மனித உருவங்கள், 3 விலங்கு உருவங்கள், 650-க்கும் மேற்பட்ட விளையாட்டுப் பொருள்கள், 35 காதணிகள், பிற அணிகலன்கள் கிடைத்துள்ளன. ஆனால், வழிபாடு தொடர்பான தொல்பொருள்கள் எவையும் தெளிவான முறையில் இதுவரை கிடைக்கவில்லையென தொல்லியல் துறையின் ஆய்வறிக்கை கூறுகிறது.

2.வக்பு வாரியத்தை நிர்வகிக்க தனி அதிகாரியாக நிதித்துறை முதன்மைச் செயலாளர் (செலவினம்) எம்.ஏ.சித்திக்கை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

3.நாய்கள், பூனைகள் உள்ளிட்ட செல்லப் பிராணிகளுக்கான பிரத்யேக ரத்த தான செயலியை கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் அறிமுகம் செய்துள்ளது.

4. தமிழக அரசு அமல்படுத்தியுள்ள தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறைப்படுத்தும் சட்டம் தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரகம் இனி தனியார் பள்ளிகள் இயக்குநரகம் என அழைக்கப்படும், புதிய சட்டத்தின்படி, சரியாக படிக்காத மாணவர்களை தனியார் பள்ளிகள் இனி பொதுத்தேர்வுகள் எழுதவிடாமல் தடுக்கக்கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்க அரசுக்கு அதிகாரம் தரப்பட்டுள்ளது. நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சிபிஎஸ்இ, ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓரியண்டல் என அனைத்து வித தனியார் பள்ளிகளும் மாணவர் சேர்க்கை, கட்டண நிர்ணயம் உள்ளிட்ட விவகாரங்களில் ஒரேவிதமான நடைமுறையை இனி பின்பற்ற வேண்டும்.


இந்தியா

1.இந்திய விமானப் படையின் அடுத்த தலைமை தளபதியாக ஏர் மார்ஷல் ஆர்.கே. எஸ். பதெளரியா நியமிக்கப்பட்டுள்ளார்.

2.பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முதல்முறையாக தேஜஸ் இலகுரக போர் விமானத்தில் பயணித்து புதிய வரலாறு படைத்துள்ளார்.

3.இ-சிகரெட்டுக்கு தடை விதிக்கும் அவசரச் சட்டத்தை மத்திய அரசு பிறப்பித்தது. முன்னதாக, இந்த முடிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.


வர்த்தகம்

1.குஜராத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட கார்களின் எண்ணிக்கை  10 லட்சம் என்ற மைல்கல்லைத் தாண்டியுள்ளதாக மாருதி சுஸுகி இந்தியா தெரிவித்துள்ளது.

2.சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு அதிக அளவில் கடனுதவி அளிக்கும் வகையில் அக்டோபர் 3-ஆம் தேதி முதல் 400 மாவட்டங்களில் லோன் மேளா நடத்துமாறு பொதுத் துறை வங்கிகளை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

3.தமிழகத்தில் தொழில் முதலீடுகளை துரிதப்படுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உயர்நிலை அதிகாரக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், முதலீடுகளை எளிதாக்கும் வகையில் முதல்வர் அலுவலகத்தில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியை சிறப்புப் பணி அலுவலராகக் கொண்டு தனிப் பிரிவும் உருவாக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.


உலகம்

1.இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், எதிர்க்கட்சியுடன் இணைந்து தேசிய அரசை அமைக்க பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அழைப்பு விடுத்துள்ளார்.

2.சர்வதேச அளவில் மகப்பேறு காலத்தில் தாயோ, சிசுவோ உயிரிழக்கும் சம்பவம் 11 விநாடிக்கு ஒரு முறை நேரிடுவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.உலகில் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகள் உயிரிழப்பது கடந்த ஆண்டில் 53 லட்சமாகக் குறைக்கப்பட்டது. இது கடந்த 2000-ஆம் ஆண்டிலிருந்ததைவிட பாதியாகும்.கர்ப்பக் கோளாறுகள், மகப் பேறு போன்ற காரணத்தால் பெண்கள் உயிரிழப்பது கடந்த 2000-ஆம் ஆண்டில் 4.51 லட்சமாக இருந்தது. இது கடந்த ஆண்டில் 2.95 லட்சமாகக் குறைப்பட்டுள்ளது.


விளையாட்டு

1.சீன ஓபன் சூப்பர் 1000 பாட்மிண்டன் போட்டியிலிருந்து நடப்பு உலக சாம்பியன் பி.வி. சிந்து வெளியேறியுள்ளார்.தாய்லாந்தின் பார்ன்பவீ சோசுவாங், 12-21, 21-13, 21-19 என்கிற கேம் கணக்கில் சிந்துவைத் தோற்கடித்தார்.

2.டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா, ரவி குமார் தாஹியா ஆகியோர் தகுதி பெற்றனர்.


ன்றைய தினம்

  • தாய்லாந்து இளைஞர்கள் தினம்
  • நீலப் பென்னி அஞ்சல் தலையை பிரிட்டன், மொரீசியசில் வெளியிடப்பட்டது(1847)
  • துருவ செயற்கைகோள் ஏவுகணையை இந்தியா ஏவியது(1993)
  • பெண் விடுதலைக்காக போராடிய அன்னி பெசண்ட் நினைவு தினம்(1933)

– தென்னகம்.காம் செய்தி குழு