தமிழகம்

1.அரசுத் துறைகளில் பதவி உயர்வு உள்ளிட்ட அம்சங்களுக்காக நடத்தப்படும் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

2.தமிழகத்தில் மின்னணு குடும்ப அட்டைகளை (ஸ்மார்ட் அட்டைகளை) அச்சிடும் பணியை அனைத்து மாவட்டங்களிலும் மேற்கொள்ள மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, சென்னையில் நான்கும், பிற மாவட்டங்களுக்கு தலா ஒன்றும் என மொத்தம் 35 மின்னணு குடும்ப அட்டை அச்சிடும் இயந்திரங்களை நிறுவிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


இந்தியா

1.ரஃபேல் ஒப்பந்த விவகாரம் தொடர்பாக அனைத்து தகவல்களையும் வகைப்படுத்தி, அவற்றை முழுமையாக துறை ரீதியில் ஆய்வுக்குள்படுத்தி, உண்மைத்தன்மையை வெளிக்கொண்டு வர உத்தரவிடப்பட்டுள்ளதாக, தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டுள்ள கேள்வி ஒன்றுக்கு, பாதுகாப்புத்துறை அமைச்சகம் பதிலளித்துள்ளது.

2.பொருளாதாரக் கணக்கெடுப்புக்கு செல்லிடப்பேசி செயலிகளைப் பயன்படுத்த மத்திய புள்ளியியல் துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.


வர்த்தகம்

1.மொத்த விலை அடிப்படையில் கணக்கிடப்படும் நாட்டின் பொதுப் பணவீக்கம் சென்ற ஏப்ரல் மாதத்தில் 3.07 சதவீதமாக குறைந்துள்ளது.இது, நடப்பாண்டு மார்ச் மாதத்தில் 3.18 சதவீதமாகவும், பிப்ரவரியில் 2.93 சதவீதமாகவும், 2018 ஏப்ரலில் 3.62 சதவீதமாகவும் காணப்பட்டது.

2.இருசக்கர வாகன உற்பத்தியில் ஈடுபட்டு வரும் இந்தியா யமஹா மோட்டார் நிறுவனம் உள்நாட்டில் 1 கோடி வாகனங்களை தயாரித்து சாதனை படைத்துள்ளது.

3.சரக்கு மற்றும் சேவைகள் துறை சார்ந்த ஏற்றுமதியாளர்கள், தன்னிச்சையான கணினி நடைமுறையின் கீழ், ஜி.எஸ்.டி  ரீபண்ட்  பெறும் வசதி, ஜூன், 1 முதல் அமலுக்கு வரஉள்ளது.


உலகம்

1.ஐ.நா. பொதுச் சபையின் அடுத்த தலைவராக, ஐ.நா.வுக்கான நைஜீரியத் தூதர் திஜானி முகமது-பண்டே தேர்ந்தெடுக்கப்படுவதற்கு இந்தியா தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது.

2.ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதினையும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கையும் அடுத்த மாதம் (ஜூன்) நேரில் சந்தித்துப் பேசவிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.


விளையாட்டு

1.ஐசிசி சர்வதேச ஆட்ட நடுவர் பட்டியலில் இடம் பெற்ற முதல் பெண் நடுவர் என்ற பெருமையை இந்தியாவின் ஜிஎஸ்.லட்சுமி பெற்றுள்ளார். இதன் மூலம் அவர் சர்வதேச ஆட்டங்களில் நடுவராக செயல்பட வாய்ப்பு கிடைத்துள்ளது.

2.சியட் கிரிக்கெட் விருதுகள் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது. அதில், சிறந்த வீரராக இந்திய கேப்டன் விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

1983-ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற இந்திய அணியின் முக்கிய வீரராக திகழ்ந்த மொஹிந்தர் அமர்நாத்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.சேத்தேஷ்வர் புஜாராவுக்கு சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருதும், ரோஹித் ஷர்மாவுக்கு சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருதும் வழங்கப்பட்டது. ஸ்மிருதி மந்தானா சிறந்த பெண் கிரிக்கெட் வீரர் விருதைப் பெற்றார்.


ன்றைய தினம்

  • உலக குடும்ப தினம்
  • பராகுவே விடுதலை தினம்(1811)
  • மெக்சிகோ, தென்கொரியா ஆசிரியர் தினம்
  • டோக்கியோ பங்குச் சந்தை அமைக்கப்பட்டது(1978)
  • மாஸ்கோவில் சுரங்க ரயில் சேவை ஆரம்பமானது(1935)

– தென்னகம்.காம் செய்தி குழு