தமிழகம்

1.தமிழக வணிகர்களின் பொருள்களை மட்டும் ஆன்லைனில் சந்தைப்படுத்த புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இணையதள வணிகம் மூலம் வெளிநாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்கவும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கேற்ப வணிகர்களை மேம்படுத்தி பாதுகாக்கவும் மெரினா செயலி அறிமுகம் செய்யப்படுகிறது. இதில் முழுவதும் தமிழக வணிகர்களின் பொருள்கள் மட்டும் விற்பனை செய்யப்படும். இதற்காக தனியார் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2.அகில உலக கம்பன் கழகம் சார்பில், சர்வதேச கம்பன் மாநாடு சுவிட்சர்லாந்தில் உள்ள சூரிச் மாநிலக் கல்லூரியில் வரும் அக்டோபர் 5, 6-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.

3.திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் பஞ்சாமிர்தத்துக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.


இந்தியா

1.நாட்டின் 73ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு தில்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி இன்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து முப்படை வீரர்களின் அணி வகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றார். பின்னர் பிரதமர் மோடி தில்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார். நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள், வெளிநாட்டு பிரமுகர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

2.இந்திய விமானப் படை விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமானுக்கு வீர சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த விருது அறிவிப்பை பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

3.மாநிலங்களுக்கு இடையேயான பிரச்னைகளை விசாரித்து தீர்வு காணும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான குழு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் 6 மத்திய அமைச்சர்களும், அனைத்து மாநில முதல்வர்களும் உறுப்பினர்களாக இடம்பெறுவர்.


வர்த்தகம்

1.மொத்தவிலைக் குறியீட்டு எண் அடிப்படையிலான பணவீக்கம், கடந்த ஜூன் மாதத்தில் 2.02 சதவீதமாகவும், கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 5.27 சதவீதமாகவும் இருந்தது. இந்நிலையில், தற்போது 1.08 சதவீதமாக இது குறைந்துள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்தப் பணவீக்கம் 0.9 சதவீதமாக இருந்தது.

2.இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வசம் உள்ள உபரி நிதியை 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறு சிறு தவணைகளாக மத்திய அரசுக்கு வழங்கலாம் என பிமல் ஜலான் குழு பரிந்துரைத்துள்ளது.


உலகம்

1.இந்தியா, சீனா இனி வளரும் நாடுகள் இல்லை; உலக வர்த்தக அமைப்பின் சலுகைகள் இனி அவற்றுக்கு கிடைப்பதை அனுமதிக்க மாட்டோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.


விளையாட்டு

1.சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச், ரோஜர் பெடரர் ஆகியோர் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றனர், அதே நேரத்தில் செரீனா போட்டியில் இருந்து விலகினார்.


ன்றைய தினம்

  • இந்திய சுதந்திர தினம்(1947)
  • தென் கொரியா உருவாக்கப்பட்டது(1948)
  • இந்திய ஆன்மிகவாதி அரவிந்தர் பிறந்த தினம்(1872)
  • பனாமா கால்வாய் திறக்கப்பட்டது(1915)
  • பஹ்ரைன் ஐரோப்பாவிடம் இருந்து விடுதலை பெற்றது(1971)

– தென்னகம்.காம் செய்தி குழு