தமிழகம்

1.சர்வதேச சுகாதார – தொழில்நுட்ப மாநாடு சென்னையில் வரும் 27, 28 தேதிகளில் நடைபெற உள்ளது. அதில், வெளிநாடுகள் மற்றும் உள்நாட்டைச் சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள், சுகாதாரத் துறை பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

2.சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் புவி காந்தவியல் ஈர்ப்புக் கருவி மூலம் 6-ஆம் கட்ட அகழாய்வு நடத்துவதற்காக இடம் தேர்வு செய்யும் பணி தொடங்கியது.


இந்தியா

1.சிறு, குறு விவசாயிகளுக்கான ஓய்வூதியத் திட்டத்தை ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியில் பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார்.

2.ஐ.நா. பொதுச் சபையில் உரையாற்றுவதற்காக, பிரதமர் நரேந்திர மோடி வரும் 21-ஆம் தேதி அமெரிக்கா செல்கிறார். 7 நாள் அரசுமுறைப் பயணமாக செல்லும் அவர், நியூயார்க் நகரில் பல்வேறு நாடுகளின் தலைவர்களைச் சந்தித்து இரு தரப்பு விவகாரங்கள், பிராந்திய விவகாரங்கள் ஆகியவை குறித்து விரிவாகப் பேசவுள்ளார்.


வர்த்தகம்

1.நாட்டின் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி விகிதம் கடந்த ஜூலை மாதத்தில் 4.3 சதவீதமாக குறைந்தது.தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி முந்தைய ஜூன் மாதத்தில் 1.2 சதவீதமாகவும், மே மாதத்தில் 4.6 சதவீதமாகவும் காணப்பட்டது. கடந்தாண்டு ஜூலை மாதத்தில் தொழில்துறையின் வளர்ச்சி 6.5 சதவீதமாக அதிகரித்திருந்தது.

2.சில்லறைப் பணவீக்கம் சென்ற ஆகஸ்ட் மாதத்தில் 3.21 சதவீதமாக அதிகரித்தது.முந்தைய ஜூலை மாதத்தில் இது 3.15 சதவீதமாக காணப்பட்டது.

3.சந்தையில் அதிக ஏற்ற இறக்கம் காணப்பட்ட போதும் ஆகஸ்ட் மாதத்தில் பரஸ்பர நிதி துறையில் 5 லட்சம் முதலீட்டாளர்கள் கூடுதலாக இணைந்ததையடுத்து அத்துறை கணக்குகளின் மொத்த எண்ணிக்கை 8.53 கோடியைத் தொட்டுள்ளது.

4.நாட்டின் வேளாண் ஏற்றுமதி, ஏப்ரல் முதல், ஜூலை வரையிலான மதிப்பீட்டு காலத்தில், 38 ஆயிரத்து, 700 கோடி ரூபாயாக உள்ளது. இது, 14.39 சதவீதம் குறைவாகும். நடப்பு நிதியாண்டின், முதல் நான்கு மாதங்களில், பாசுமதி அரிசி ஏற்றுமதி, 9.26 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது.


உலகம்

1.சீனப் பொருள்கள் மீது கூடுதல் வரி விதிக்கும் திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 15 நாள்களுக்கு நிறுத்திவைத்தார்.

2.சீனாவில் உருவாக்கப்பட்ட 3 செயற்கைக்கோள்களை அந்த நாட்டின் லாங் மார்ச்-4பி ராக்கெட் விண்ணில் செலுத்தியது.

3.பூமியைப் போலவே தட்பவெப்ப நிலையைக் கொண்ட மற்றொரு கிரகமான கே2-18பி-யில் நீர் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.பூமியிலிருந்து 110 ஒளிவருட தூரத்தில் இருக்கும் கே2-18பி என்ற கிரகம், பூமியைப் போல் 8 மடங்கு பெரிதானது.
இதுவரை கண்டறியப்பட்ட கிரகங்களிலேயே, உயிரினங்கள் வசிப்பதற்கு ஏற்ற தட்பவெப்ப நிலையைக் கொண்டுள்ள, பூமி அல்லாத ஒரே கிரகம் இதுவாகும்.
கே2-18 என்ற நட்சத்திரத்தைச் சுற்றி வரும் அந்த கிரகத்தில் தண்ணீர் இருப்பதை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம், மற்றும் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தின் விண்கல தொலைநோக்கிகள் கண்டறிந்துள்ளன.
அந்த நீரும் திரவ வடிவில் இருப்பதற்குத் தகுந்த தொலைவில் தனது நட்சத்திரத்தை கே2-18பி கிரகம் சுற்றி வருகிறது. அந்த வகையில், மனிதர்கள் வசிப்பதற்குத் தேவையான திரவ நிலை நீரைக் கொண்டிருக்கக் கூடிய, பூமி அல்லாத ஒரே கிரகம் கே2-18பி என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


விளையாட்டு

1.ரஷ்யாவின் எகடெரின்பர்க் நகரில் நடைபெற்று வரும் உலக ஆடவர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 63 கிலோ பிரிவில் காமன்வெல்த் வெள்ளி வீரர் மணிஷ் கெளஷிக் 5-0 என்ற புள்ளிக் கணக்கில் கிர்கிஸ்தான் வீரர் உலு அர்ஜெனை வீழ்த்தி இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றார். அடுத்த சுற்றில் நெதர்லாந்தின் என்ரிகோ லாக்ரஸுடன் மோதுகிறார் மணிஷ்.

2.பத்ம விருதுகளுக்கு மேரி கோம், பி.வி.சிந்து, வினேஷ் போகட், வில்வித்தை வீரர் தருண்தீப் ராய், ஹாக்கி ஒலிம்பிக் வீரர் எம்.பி.கணேஷ், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட், டேபிள் டென்னிஸ் மனிகா பத்ரா, கிரிக்கெட் வீராங்கனை ஹர்மன்ப்ரீத் கெளர், ஹாக்கி அணி கேப்டன் ராணி ராம்பால், முன்னாள் துப்பாக்கி சுடும் வீராங்கனை சுமா ஷிருர், மலையேற்ற இரட்டையர் டஷி, நுங்ஷி மாலிக் ஆகியோர் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.


ன்றைய தினம்

  • உலக சாக்லேட் தினம்
  • நியூயார்க் நகரம், அமெரிக்காவின் தற்காலிக தலைநகராக அறிவிக்கப்பட்டது(1788)
  • ஹனிபல் குட்வின், செலுலாயிட் புகைப்பட சுருளைக் கண்டுபிடித்தார்(1898)
  • ஐதராபாத், இந்திய ஆளுமைக்குள் வந்தது(1948)

– தென்னகம்.காம் செய்தி குழு