தமிழகம்

1.சென்னை-கன்னியாகுமரி தொழில் வழித்தட திட்டத்தை கண்காணிக்க புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தின் செயல்பாடுகளை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை தொடங்கி வைத்தார்.கன்னியாகுமரி தொழில்வழித் தட திட்டத்துக்கான இணையதளத்தையும் (ckicp.tnhighways.gov.in)  தொடங்கி வைத்தார்.

2.தூத்துக்குடி வஉசி துறைமுகத்திலிருந்து சீனா, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு நேரடி கப்பல் சேவை தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.


இந்தியா

1.மிஸோரம் சட்டப் பேரவைத் தேர்தலில் மிஸோ தேசிய முன்னணி கட்சி அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அக்கட்சியின் தலைவர் ஸோரம்தங்கா, மாநில முதல்வராக வரும் 15-ஆம் தேதி பதவியேற்கவுள்ளார்.

2.நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ஒரே மாதிரியான அணைப் பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதற்கு வழிவகுக்கும் அணைகள் பாதுகாப்பு மசோதா மக்களவையில் புதன்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.
அணைகள் கண்காணிப்பு, ஆய்வு, அவற்றின் இயக்கம், ஆபத்து காலங்களில் குறிப்பிட்ட அணைகளைப் பராமரிப்பது ஆகியவற்றுக்கும் மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

3.விமானங்கள் விபத்தில் சிக்கும்போது அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ள பயன்படும் கருப்பு பெட்டி போன்ற பெட்டி, சில ரயில்களிலும் தற்போது பொருத்தப்பட்டுள்ளது.


வர்த்தகம்

1.கடந்த நவம்பரில், நாட்டின் சில்லரை விலை பணவீக்கம், 16 மாதங்களில் இல்லாத வகையில், 2.33 சதவீதமாக சரிவடைந்துள்ளது.

2.2018-ஆம் ஆண்டில் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட விவரங்கள் குறித்த பட்டியலை  தேடுதளமான கூகுள் நிறுவனம் புதன்கிழமை வெளியிட்டது.

அதிகம் தேடப்பட்ட நட்சத்திர நபராக மலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் இடம்படித்துள்ளார். இதற்கு அடுத்தடுத்த இடங்களில் பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா கணவர் நிக் ஜோனஸ், நடனக் கலைஞர் சப்னா சௌத்ரி, பாலிவுட் நடிகை சோனம் கபூர் கணவர் ஆனந்த அஹுஜா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும்  பிரபல அமெரிக்க நடிகையும், டட்சஸ் ஆஃப் சசக்ஸ் இளவரசியுமான மேகன் மார்கிள் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட வெளிநாட்டு பிரபலமாக உள்ளார்.


உலகம்

1.இலங்கை நாடாளுமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற நம்பிக்கை தீர்மான வாக்கெடுப்பில், பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்றுள்ளார். இது அந்நாட்டு அதிபர் சிறீசேனாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

2.அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள வர்த்தகப் போர்ப் பதற்றத்தைத் தணிப்பதற்காக, இரு நாட்டு உயரதிகாரிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தொடங்கியது.


விளையாட்டு

1.ஒலிம்பிக் சாம்பியன் ஆர்ஜென்டீனாவை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 14-ஆவது உலகக் கோப்பை ஹாக்கி போட்டியின் அரையிறுதிக்கு தகுதி பெற்ற முதல் அணி என்ற சிறப்பை இங்கிலாந்து பெற்றது. தொடர்ந்து மூன்றாவது முறையாக உலகக் கோப்பை அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது அந்த அணி.
மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா 3-0 கோல் கணக்கில் பிரான்ஸை வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.

2.உலக பாட்மிண்டன் சம்மேளன வேர்ல்ட் டூர் பைனல்ஸ் போட்டியின் துவக்க ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து வெற்றி பெற்றுள்ளார்.


ன்றைய தினம்

  • மோல்ட்டா குடியரசு தினம்(1974)
  • பாய்ஜீ என்ற சீன ஆற்றின் டால்ஃபின் அரிய இனமாக அறிவிக்கப்பட்டது(2006)
  • போலந்தில் ராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்டது(1981)
  • தமிழக எழுத்தாளர் நா.பார்த்தசாரதி இறந்த தினம்(1987)
  • தென்னகம்.காம் செய்தி குழு