இந்தியா

1.பிரதமர் நரேந்திர மோடி நேற்று காலை 11 மணிக்கு வானொலி மூலம் மன் கி பாத் நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.இது இந்த ஆண்டின் முதல் நிகழ்ச்சியாகும்.இந்நிகழ்ச்சியை ஆண்டு இறுதி தேர்வை எதிர்நோக்கியுள்ள மாணவர்களுக்காக வழங்கினார்.
2.“உன்னத வாழ்வு” (உஜாலா) என்ற திட்டத்தின் மூலம் பீகாரில், மின்சாரத்தை சேமிக்கும் 1 கோடிக்கும் மேற்பட்ட எல்இடி மின்விளக்குகள் மலிவு விலையில் பொதுமக்களிடம்  விநியோகிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


உலகம்

1.இங்கிலாந்தை சேர்ந்த இளம்பெண் கிறிஸ்டினா வாக்னர் (18), பீட்சாவை (Pizza) திருமணம் செய்து கொண்டதாக அறிவித்துள்ளார்.
2.வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை, பிரிட்டன் பிரதமர் தெரஸா மே கடந்த ஜனவரி 27-ம் தேதி சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு டிரம்பை சந்தித்த முதல் வெளிநாட்டு தலைவர் தெரஸா மே ஆவார்.
3.“மிஸ்யுனிவர்ஸ்” என்றழைக்கப்படும் பிரபஞ்ச அழகிப் போட்டி இந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்றது.இதில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஐரிஷ் மிட்டனெரே (24), பிரபஞ்ச அழகியாக  தேர்வு செய்யப்பட்டார்.இரண்டாவது இடத்தை கெய்தி நாட்டை சேர்ந்த ரகீல் பெலிசியருக்கும், கொலம்பியாவை சேர்ந்த ஆண்ட்ரியா தோவர் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.


விளையாட்டு

1.ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.இவர் தன்னை எதிர்த்து விளையாடிய ஸ்பெயின் வீரர் ரபேல் நாடலை 6-4, 3-6, 6-1,3-6,6-3 என்ற நேர் செட்களில் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.ரோஜர் பெடரர்  வெல்லும் 18 -ஆவது கிராண்ட்ஸ்லாம்  பட்டம் இதுவாகும்.மேலும் இது ரோஜர் பெடரர்க்கு  5-வது ஆஸ்திரேலிய ஓபன் பட்டமாகும்.
2.லக்னோவில் நடைபேற்று  வந்த சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீரர் சமீர் வர்மா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.இவர் தன்னை எதிர்த்து விளையாடிய இந்திய வீரர் சாய் பிரனீத்தை 21-19, 21-16 என்ற நேர் செட்டில்  தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.பெண்கள் ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.இவர் தன்னை எதிர்த்து விளையாடிய இந்தோனேஷிய வீராங்கனை கிரிகோரியா மாரிஸ்காவை 21-13, 21-14 என்ற நேர் செட் கணக்கில் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.


இன்றைய தினம்

1.இன்று இராமலிங்க அடிகளார் நினைவு தினம்.
வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் (அக்டோபர் 5, 1823 – ஜனவரி 30, 1873) ஓர் ஆன்மிகவாதி ஆவார். இவர் சத்திய ஞான சபையை நிறுவியவர்.”வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன்” என்று பாடியவர் இவர்.சாதி சமய வேறுபாட்டுக்கு எதிரான தமது நிலைப்பாடு காரணமாக, சமுதாயத்தின் பழைமைப் பற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டவர். வள்ளலாருக்கு எதிராக வழக்குமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர் ஆறுமுக நாவலர்.
2.இன்று இந்தியாவில் தியாகிகள் நாள் கொண்டாடப்படுகிறது.
தியாகிகள் நாள் இந்திய விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை ஈந்த விடுதலைப் போராட்ட வீரத் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள் மறைந்த ஜனவரி 30 ம் நாள் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.நாட்டின் விடுதலைக்காகவும், முன்னேற்றத்துக்காகவும் பாடுபட்ட தலைவர்களின் நினைவு தினம், தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
3.ஜெர்மனியின் அதிபராக ஹிட்லர் பதவியேற்ற நாள் 30 ஜனவரி 1933.
4.இன்று மகாத்மா காந்தி என்று அழைக்கப்படும் மோகன்தாஸ் காந்தியடிகள் நினைவு நாள்.இவர் மறைந்த தேதி 30 ஜனவரி 1948.
5.ரேஞ்சர் 6 விண்கலம் ஏவப்பட்ட நாள் 30 ஜனவரி 1964.
6.தமிழ்நாட்டில் மு.கருணாநிதியின் திமுக ஆட்சி கவிழ்க்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவரப்பட்ட நாள் 30 ஜனவரி 1976.
7.பெல்ஜியம் சமப்பால் திருமணத்தைச் சட்டபூர்வமாக்கிய நாள் 30 ஜனவரி 2003.

 

– தென்னகம்.காம் செய்தி குழு