tamil

இந்தியா

1.கூகுள் நேற்று தனது 18வது பிறந்தநாளை முன்னிட்டு  மக்கள் அதிகம் கூடும் இடங்களில்‘கூகுள் ஸ்டேஷன்’ என்ற கட்டமைப்பு மூலம் இந்தியா முழுவதும் இலவச வைபை வசதியை அறிமுகம் செய்துள்ளது.ஏற்கனவே  ‘ரயில்டெல்’ நிறுவனத்துடன் இணைந்து நாடுமுழுவதும் 53 ரயில் நிலையங்களில் இலவச வைபை வசதியை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
2.சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த விமானத்தில் ‘சாம்சங் கேலக்சி நோட்-2’ செல்போன் விமானத்திலேயே தீப்பிடித்து எரிந்துள்ளது.இது தொடர்பாக சாம்சங் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் கடந்த செப்டம்பர் 26ம்  தேதி டெல்லி விமான போக்குவரத்து இயக்குனரகத்தில் ஆஜராகி உள்ளார்கள்.விமான போக்குவரத்து அதிகாரிகளிடம் அவர்கள் தங்கள் விளக்கத்தை அளித்துள்ளனர்.
3.வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளுடன் ‘சார்க்’ செயற்கைக்கோள் திட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக இஸ்ரோ தலைவர் கிரண்குமார் கூறியுள்ளார்.
4.பி.எஸ்.எல்.வி. சி35 ராக்கெட் வெற்றியைத் தொடர்ந்து இஸ்ரோ தலைவர் கிரண்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில்  இதுவரை 21 வெளிநாடுகளைச் சேர்ந்த 79 செயற்கைக்கோள்களை இஸ்ரோ விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியுள்ளது என தெரிவித்துள்ளார்.
5.‘தி இந்து’வுக்கு தெற்காசிய டிஜிட்டல் மீடியா விருது வழங்கப்பட்டது.தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி மேற்கொண்ட தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரத்துக்காக இவ்விருது வழங்கப்படுகிறது.இவ்விருதை வேன்-இஃப்ரா (WAN-IFRA) மற்றும் கூகுள் சார்பில் வழங்கப்படுகின்றன.
6.இந்திய வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் வரும் நவம்பர் மாதம் நடைபெறும் சார்க் மாநாட்டில் கலந்து கொள்வதில்லை என அறிவித்துள்ளது. தற்போது சார்க் அமைப்புக்கு தலைமை வகித்து வரும் நேபாள நாட்டிடம் இது பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டதாக வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

உலகம்

1.இந்து திருமண சட்ட மசோதா பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கடந்த செப்டம்பர் 26ம் தேதி நிறைவேற்றப்பட்டுள்ளது.இதன்படி இந்துக்களின் குறைந்தபட்ச திருமண வயது 18 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.கணவர்  உயிரிழந்து 6 மாதங்களுக்கு பிறகு இந்து பெண்கள் மறுமணம் செய்து கொள்ள மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
2.நியூயார்க் நகரின் ஹாஃப்ஸ்ட்ரா பல்கலைக்கழகத்தில் அமெரிக்க அதிபர் வேட்பாளர்களான ஹிலாரி – டிரம்ப் இடையே முதல் நேரடி விவாதம் கடந்த செப்டம்பர் 26ம் தேதி நடைபெற்றது.
3.இந்தியாவில் தனது உற்பத்தியைத் தொடங்கப் போவதாக சீனாவைச் சேர்ந்த செல்போன் தயாரிப்பு நிறுவனமான ஹூவாய் அறிவித்துள்ளது.சீனாவில் இருந்து பல நிறுவனங்கள் தங்களது ஆலையை   இந்தியாவுக்கு மாற்றுவதால் சீனாவில் பணிபுரிவோருக்கு வேலை பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளதால் சீன அரசு கவலை அடைந்துள்ளது.
4.இன்று பசுமை நுகர்வோர் தினம் (Green Consumer Day).
பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. ஆகவே இயற்கையான பொருட்களையே பயன்படுத்த வேண்டும். நாம் பயன்படுத்தக்கூடிய பொருட்கள் மறுசுழற்சிக்கு உகந்ததாக இருக்க வேண்டும். உலகின் பல பகுதிகளில் பசுமை நுகர்வோர் அமைப்பு மக்களிடம் பசுமையைப் பாதுகாக்க விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. செப்டம்பர் 28ஐ பசுமை நுகர்வோர் தினமாக கொண்டாடி வருகிறது.
5.இன்று உலக வெறிநோய் தினம் (World Rabies Day).
ரேபிஸ் என்பது ஒரு வகையான வைரஸ். இது வௌவால், நரி, ஓநாய் மற்றும் நாய் ஆகியவற்றை எளிதில் தாக்கும். ரேபிஸ் தாக்கிய விலங்கு மனிதனைக் கடித்தால் இந்நோய் மனிதனை தாக்கிவிடும். இந்நோய்க்கு லூயி பாஸ்டர் என்பவர் 1885ஆம் ஆண்டில் மருந்தைக் கண்டுபிடித்தார். இவர் மறைந்த செப்டம்பர் 28ஆம் தேதியை உலக ரேபிஸ் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

விளையாட்டு

1.இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையே வரும் செப்டம்பர் 30-ம் தேதி கொல்கத்தாவில் தொடங்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டி, இந்திய அணி உள்நாட்டில் பங்கேற்கும் 250-வது டெஸ்ட் போட்டியாகும்.லார்ட்ஸ் மைதானத்தில் உள்ள வழக்கத்தைப் போல ஈடன் கார்டன் மைதானத்திலும் மணியடித்து போட்டி தொடங்கப்பட உள்ளது.கபில் தேவ் மணியடித்து டெஸ்ட் போட்டியைத் தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.மேலும் டாஸுக்கு தங்க நாணயம் பயன்படுத்தப்பட உள்ளது.
2.ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்ஸா-செக்.குடியரசின் பர்போரா ஸ்டிரைகோவா ஜோடி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.இறுதி போட்டியில் சீனாவின் சென் லியாங்-ஸவோக்சுவான் யாங் ஜோடியை 6-1, 6-1 என்ற நேர் செட்களில் தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றனர்.இது சானியா-பர்போரா ஜோடி  வெல்லும் இரண்டாவது பட்டமாகும்.
3.இந்தியாவின் சானியா மிர்ஸா மகளிர் இரட்டையர் டென்னிஸ் தரவரிசையில் 9,730 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் 9,725 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்தில் உள்ளார்.

தினம் ஒரு மாவட்டம் சிறப்பு செய்திகள்

3.இன்று இராமநாதபுரம் மாவட்டம்.

இது தென் தமிழகத்தில் அமைந்துள்ள ஒரு கடற்கரை மாவட்டம் ஆகும். 4,123 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள மாவட்டத்தின் கிழக்கே பாக் நீரிணையும், வடக்கில் சிவகங்கை மாவட்டமும், வடகிழக்கில் புதுக்கோட்டை மாவட்டமும், தெற்கில் மன்னார் வளைகுடாவும், மேற்கில் மதுரை மாவட்டமும் அமைந்துள்ளன. இந்து மக்களால் புனிதத்தளமாக கருதப்படும் ராமேஸ்வரம் இந்த மாவட்டத்தில் தான் அமைந்துள்ளது.இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பாலத்துக்காகவும் புகழ் பெற்றுள்ளது.இம்மாவட்டத்தின் முக்கிய நகரங்களாக இராமநாதபுரம், பரமக்குடி, இராமேஸ்வரம் ஆகிய நகரங்கள் அறியப்படுகின்றன.மாநிலத்திலேயே அதிக அளவில் தீவுகள் இராமநாதபுரம் மாவட்டத்தில் தான் அமைந்துள்ளன. அவற்றில் சில:பாம்பன் தீவு,அப்பா தீவு,குருசடை தீவு,முயல் தீவு,முளித் தீவு,தலையாரித் தீவு.