தமிழகம்

1.தமிழகத்தில் மார்ச் 1-ம் தேதி முதல் வெளிநாட்டு குளிர்பானங்களான பெப்சி, கோக் உள்ளிட்டவற்றை விற்பனை செய்ய மாட்டோம் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவித்துள்ளது.
2.சென்னை கடற்கரை பகுதிகளில் ஆலிவ் ரிட்லி ஆமை முட்டைகளை  தமிழக வனத் துறையும்,தன்னார்வ தொண்டு நிறுவனமும் சேகரித்து பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.ஆலிவ் ரிட்லி வகை கடல் ஆமைகள் டிசம்பர் முதல் ஏப்ரல் வரையிலான காலங்களில் தமிழகக் கடலோரப் பகுதிக்கு வந்து முட்டை இட்டு வருவது குறிப்பிட்டத்தக்கது.


இந்தியா

1.மணிப்பூர் மாநிலம் லோக்டக் ஏரியில் அமைந்துள்ள “கரங் ( Karang )” தீவு இந்தியாவில் ரொக்க பரிவர்த்தனை இல்லாத முதல் தீவு என்ற பெருமையை பெற்றுள்ளது.
2.60 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கான “வரிஷ்ட பென்ஷன் பீமா யோஜனா” என்ற புதிய ஓய்வூதியக் காப்பீட்டுத் திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது.
3.குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், ஆளுநர் உள்ளிட்டோரது படங்களை தேர்தல் பிரசாரத்தில் உபயோகிக்கக்கூடாது  என்று தேர்தல் ஆணையம் நேற்று  உத்தரவு பிறப்பித்துள்ளது.
4.மாணவர்களுக்கு பட்டமளிக்கும் அதிகாரத்தை இந்திய மேலாண்மைக் கழகங்களுக்கு (ஐஐஎம்) வழங்கும் வரைவு மசோதாவுக்கு மத்திய அரசு நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.
5.இந்திய நில அளவீட்டுத் துறையான “ஜியலாஜிக்கல் சர்வே ஆஃப் இந்தியா” இமயமலையில் அமைந்துள்ள உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை மறுஅளவீடு செய்ய முடிவு செய்துள்ளது.


உலகம்

1.அண்டார்டிகா கண்டத்தை யாருடைய உதவியும் இல்லாமல் தனியே சுற்றி வந்து ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த 32 வயது பெண் லிசா பிலேயர் உலக சாதனை புரிந்துள்ளார்.இவர் 1,600 கடல் மைல் தூரத்தை 100 நாட்களில் பயணம் செய்து அண்டார்டிகா கண்டத்தை எட்டியுள்ளார்.இதற்கு முன்பு 102 நாட்களில் ஒருவர் பயணம் செய்ததே சாதனையாக இருந்தது.தற்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
2.2017-ஆம் ஆண்டுக்கான 89-ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவில் பிப்ரவரி 26-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதையொட்டி, அந்த விருதுக்கான பரிந்துரைகள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளன.இதில், 14 பிரிவுகளின் கீழ் ஹாலிவுட் படமான “லா லா லேண்ட்’ என்ற திரைப்படம்  பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.அதேபோல், “லயன்’ என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்த இந்திய நடிகரான தேவ் படேல் சிறந்த துணை நடிகருக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.மேலும்  “ஆல் அபௌட் தி ஈவ்’ (1959), “டைட்டானிக்’ (1997) ஆகிய திரைப்படங்களுக்குப் பிறகு 14 பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்படும் மூன்றாவது திரைப்படம் என்ற பெருமையை “லா லா லேண்ட்’ என்ற திரைப்படம் பெற்றுள்ளது.
3.ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவது குறித்த முடிவு தொடர்பாக நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
4.அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப்,பிரதமர் நரேந்திர மோடியுடன் நேற்று இரவு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச்சு வார்த்தை நடத்தினார்.டொனால்ட் டிரம்ப் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய ஐந்தாவது வெளிநாட்டுத் தலைவர் மோடி என்று வெள்ளை மாளிகை ஊடகத் துறை செயலாளர் சீன் ஸ்பைசர் தெரிவித்துள்ளார்.


விளையாட்டு

1.இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி, ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பாட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து ஆகியோருக்கு இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.


இன்றைய தினம்

1.இன்று தேசிய வாக்காளர் நாள் (National Voters’ Day) .
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ஆம் தேதி “தேசிய வாக்காளர் நாள்” ஆகும். ஓட்டளிப்பதை மக்கள் தங்கள் கடமையாகக் கருத வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவது இந்நாளின் நோக்கமாகும். 18 வயது நிரம்பிய இந்தியக் குடிமக்கள் அனைவரும் வாக்களிக்கத் தகுதி வாய்ந்தவர். தேர்தல் என்பது பொதுவாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருகிறது. சாதி, மதம், இனம் என்ற வேறுபாடுகளைக் களைந்து 18 வயது நிரம்பிய இந்திய குடியுரிமை பெற்ற மக்கள் அனைவரும் ஓட்டளிக்கத் தகுதி உள்ளவர்கள். வாக்காளர் அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை தேர்தல் ஆணையத்தால் வழங்கபடுகின்றது.
2.இந்தியாவின் 18-வது மாநிலமாக இமாசலப் பிரதேசம் உருவான நாள் 25 ஜனவரி 1971.
3.முதலாவது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் பிரான்சில் ஷாமனீ என்ற இடத்தில் ஆரம்பமான நாள் 25 ஜனவரி 1924.
4.இஸ்ரேலில் இடம்பெற்ற முதலாவது பொதுத் தேர்தலில் டேவிட் பென்-கூரியன் பிரதமரான நாள் 25 ஜனவரி 1949.
5.நாசாவின் கிளமென்டைன் விண்கலம் சந்திரனை நோக்கி ஏவப்பட்ட நாள் 25 ஜனவரி 1994.
6.விக்கிப்பீடியா மீடியாவிக்கி மென்பொருளுக்கு மாறிய நாள் 25 ஜனவரி 2002.
7.இன்று இந்தோனேசியாவில் தேசிய ஊட்டச்சத்து நாள் கொண்டாடப்படுகிறது.

 

– தென்னகம்.காம் செய்தி குழு