இந்தியா

1.மேற்குவங்க மாநிலம், சோனாபூரில் அமைக்கப்பட்டுள்ள இந்திய கல்லீரல் மற்றும் செரிமான அறிவியல் நிறுவனத்தை (Indian Institute of Liver & Digestive Sciences) ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி துவக்கி வைத்துள்ளார்.
2.1994 முதல் சிக்கிம் மாநில முதல்வராக பதவி வகிக்கும் பவன் குமார் சாம்லிங், முதலாவது பைரோன் சிங் செகாவத் வாழ்நாள் சாதனையாளர் விருது (1st Bhairon Singh Shekhawat Lifetime Achievement Honour in Public Service) பெற்றுள்ளார்.சிக்கிம் மாநிலத்தை இந்தியாவின் முதல் இயற்கை வேளாண்மை மாநிலமாக மாற்றியவர் இவர் ஆவார்.
3.Metaphysics, Morals and Politics என்ற புத்தகத்தை பேராசிரியர் அமல் குமார் எழுதியுள்ளார்.
4.வடக்கு தில்லி மாநகராட்சி மேயராக ப்ரீத்தி அகர்வால், துணை மேயராக விஜய் குமார் பகத் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
5.இந்தியாவில் முதன் முறையாக மலையாள சினிமாவில் நடிகைகள் உட்பட பெண் கலைஞர்களுக்காக புதிய சங்கம் தொடங்கப்பட்டுள்ளது.”உமன்ஸ் கலெக்டிவ் இன் சினிமா” என்ற பெயரில் புதிய சங்கத்தை தொடங்கியுள்ளனர்.
6.புனேவிலுள்ள கேலக்ஸி கேர் மருத்துவமனையில் சோலப்பூரைச் சேர்ந்த 26 வயதான பெண்ணுக்கு  இந்தியாவின் முதல் கருப்பை மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது .மிகச் சிக்கலான இந்த அறுவைச் சிகிச்சையை 12 மருந்துவர்கள் கொண்ட குழு வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர்.முதன்முதலாக 2014-ம் ஆண்டு ஸ்வீடனை சேர்ந்த பெண் ஒருவருக்கு கருப்பை மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


உலகம்

1.மகராஷ்டா மாநிலத்தை சேர்ந்த விஞ்ஞானி ஸ்ரீனிவாஸ் குல்கர்னி என்பவர் கலிபோர்னியா தொழில் நுட்பக் கல்வி நிறுவனத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.இவர் உட்பட மூன்று பேருக்கு இஸ்ரேல் நாட்டின் “டேன் டேவிட் விருது” அறிவிக்கப்பட்டிருக்கிறது.வானியல் ஆராய்ச்சித் துறையில் சிறப்பான பங்களிப்பு செய்ததற்காக இவருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


இன்றைய தினம்

1.இன்று கார்ல் லின்னேயஸ் பிறந்த தினம் (Carl Linnaeus Birth Day).
கார்ல் லின்னேயஸ் 1707ஆம் ஆண்டு மே 23 இல் சுவீடன் நாட்டில் பிறந்தார். இவர் தாவரவியலாளராகவும், விலங்கியலாளராகவும், மருத்துவராகவும் திகழ்ந்தார். இவர் புதிய மற்றும் தற்கால அறிவியல் வகைப்பாட்டு முறைக்கும், பெயர் முறைக்கும் அடிப்படையை உருவாக்கினார். எனவே இவர் நவீன வகைப்பாட்டியலின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
2.சர்வதேச மகப்பேறு ஃபிஸ்துலா ஒழிப்பு தினம் (International Day to End Obstretric Fistula).
வளரும் நாடுகளில் சுமார் 2 – 3.5 மில்லியன் பெண்கள் மகப்பேறு ஃபிஸ்துலாவுடன் வாழ்கின்றனர். ஆண்டிற்கு ஐம்பதாயிரம் முதல் ஒரு லட்சம் பேர் இதனால் பாதிப்படைகின்றனர். இதனை முற்றிலும் குணப்படுத்த முடியும். ஆகவே இதனை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என 2003இல் பிரச்சார இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. ஐ.நா. சபையும் மே 23ஐ மகப்பேறு ஃபிஸ்துலா ஒழிப்பு தினமாக அறிவித்தது.
3.இன்று உலக ஆமைகள் தினம் (World Turtle Day).
ஆமைகள் மிகப் பழங்கால உயிரினமாகும். இவை சுமார் 200 மில்லியன் ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றன. சிறப்பு அமைப்பு கொண்ட ஒரு கவசத்தால் ஆன ஓட்டினால் இதன் உடல் மூடப்பட்டுள்ளது. இந்த ஆமை இனம் தற்போது விரைவாக அழிந்து வருகிறது. அழிவிலிருந்து பாதுகாக்கவும், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உலக ஆமைகள் தினம் 2000ஆம் ஆண்டிலிருந்து கடைப்பிடிக்கப்படுகிறது.
4.ஜெர்மன் கூட்டாட்சி குடியரசு அமைக்கப்பட்ட நாள் 23 மே 1949.

 

– தென்னகம்.காம் செய்தி குழு