தமிழகம்

1.வரும் ஏப்ரல் 12-ந் தேதி ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது இதற்கான வேட்புமனு தாக்கல் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.அ.தி.மு.க.வின் இரு அணிகளான சசிகலா தலைமையில் ஓர் அணியும், முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஓர் அணியும்,அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே ஒதுக்கவேண்டும் என்று டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் கமிஷனரிடம் மனு அளித்திருந்தினர்.இதற்காக இரு அணிகளும் தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதி மற்றும் தேர்தல் கமிஷனர்கள் ஏ.கே.ஜோதி, ஓ.பி.ராவத் ஆகியோர் முன்னிலையில்  தங்கள் வாதத்தை நேற்று முன்வைத்தனர்.இறுதியில் அந்த சின்னத்தை முடக்கி வைப்பதாக தேர்தல் ஆணையம் நேற்று இரவு உத்தரவு பிறப்பித்துள்ளது.அ.தி.மு.க. என்ற கட்சியின் பெயரையும் இரு அணியினரும் பயன்படுத்தக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இரு கட்சியினரும் தங்களிடம் உள்ள மற்ற ஆதாரங்களை தேர்தல் கமிஷனிடம் வரும் ஏப்ரல் 17-ந் தேதி கொடுத்து முறையிடலாம் என்றும் தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
2.ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க.வின் இரு அணியினரும் புதிய கட்சிக்கான பெயர் மற்றும் தேர்தல் சின்னங்களை தேர்வு செய்துள்ளனர்.சசிகலா தரப்பினருக்கு “அ.இ.அ.தி.மு.க. அம்மா’’ என்றும் ‘‘தொப்பி’’ சின்னமும் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ளது.ஓ.பன்னீர் செல்வம் தரப்பினருக்கு ‘‘அ.இ.அ.தி.மு.க. புரட்சி தலைவி அம்மா’’ என்றும் ‘‘இரட்டை விளக்கு மின்கம்பம்’’ சின்னமும் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ளது.


இந்தியா

1.முற்றிலும் இந்திய தொழில்நுட்பதிலேயே தயாரிக்கப்பட்ட முதல் புறநகர் மின்சார ரயில்  “மேதா”  ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.மும்பையில் தாதர் மற்றும் போரிவலி [ மேற்கு ரயில்வே ] நிலையங்களுக்கு இடையே இந்த ரயில் இயக்கப்பட்டது.இந்திய ரயில்வேயின் கீழ் சென்னை ஆவடி அருகே செயல்பட்டு வரும் ஐசிஎஃப் என அழைக்கப்படும் “Integral Coach Factory” தொழிற்சாலையில் இந்த ரயில் தயாரிக்கப்பட்டுள்ளது.தற்போது மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவிலேயே இந்த சிஸ்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.இந்த சிஸ்டத்தை ஹைதராபாத்தைச் சேர்ந்த “மேதா செர்வோ டிரைவ்ஸ்” எனும் நிறுவனம் தயாரித்து அளித்துள்ளதால் இந்த ரயிலுக்கு மேதா என பெயரிட்டுள்ளனர்.
2.மனிதர்களுக்குச் சமமாக கங்கை, யமுனை ஆறுகள் நடத்தப்பட வேண்டும் என உத்தரகாண்ட் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.சமீபத்தில் நியூசிலந்தின் வாங்கனுய் ஆற்றுக்கு மனிதரைப் போலவே முழு சட்ட உரிமைகளையும் அளிப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்தது நினைவிருக்கலாம்.


உலகம்

1.இக்கனாமிஸ்ட் இன்டெலிஜென்ஸ் யூனிட் நிறுவனம் உலக அளவில் குறைந்த செலவினம் உள்ள 10 நகரங்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது.இதில் அல்மாட்டி நகரம் முதல் இடத்தையும்,பெங்களூரு நகரம் மூன்றாவது இடத்தையும்,கராச்சி 4-வது இடத்தையும்,அல்ஜியர்ஸ் 5-வது இடத்தையும்,சென்னை  6-வது இடத்தையும், மும்பை 7-வது இடத்தையும்,கீவ் 8-வது இடத்தையும்,பச்சாரெஸ்ட் 9-வது இடத்தையும்,டெல்லி 10-வது இடத்தையும் பிடித்துள்ளன.
2.இக்கனாமிஸ்ட் இன்டெலிஜென்ஸ் யூனிட் நிறுவனம் உலக அளவில் அதிக செலவினம் ஏற்படுத்தும் 10 நகரங்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது.இதில் சிங்கப்பூர் முதல் இடத்தையும்,ஹாங்காங் இரண்டாவது  இடத்தையும்,ஜுரிச் 3-வது இடத்தையும்,டோக்கியோ 4-வது இடத்தையும்,ஒசாகா  5-வது இடத்தையும், சியோல் 6-வது இடத்தையும்,ஜெனீவா 7-வது இடத்தையும்,பாரிஸ் 8-வது இடத்தையும்,நியூயார்க் 9-வது இடத்தையும்,கோபன்ஹேகன் 10-வது இடத்தையும் பிடித்துள்ளன.


விளையாட்டு

1.2018 ஜனவரியில் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு குடியரசில் நடைபெறவுள்ள 5வது பார்வையற்றோர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் நல்லெண்ண தூதுவராக ஓய்வு பெற்ற பாகிஸ்தான் வீரர் ஷாகித் அப்ரிடி நியமிக்கப்பட்டுள்ளார்.


இன்றைய தினம்

1.இன்று உலக வானிலை தினம் (World Meterological Day).
உலக வானிலை தினம் மார்ச் 23 அன்று கொண்டாடப்படுகிறது. உலகின் தட்பவெப்பநிலை உயர்வால் கடலின் நீர்மட்டம் உயர்கிறது. தற்போது பூமியின் வெப்பநிலையும் கூடிக்கொண்டே செல்கிறது. இதனை அடுத்து வரும் தலைமுறைக்கு வானிலையை சாதகமாக மாற்றிக்கொடுப்பது மனிதர்களின் கடமையாகும்.இத்தினம் 1950ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
2.பாகிஸ்தான் உலகின் முதல் இஸ்லாமியக் குடியரசாகிய நாள் 23 மார்ச் 1956.
3.கலிபோர்னியா பல்கலைக்கழகம் நிறுவப்பட்ட நாள் 23 மார்ச் 1868.
4.ரைட் சகோதரர்கள் தமது வெற்றிகரமான முதலாவது வானூர்திக்கான காப்புரிமம் பெறுவதற்கு விண்ணப்பித்த நாள் 23 மார்ச் 1903.
5.டைட்டானிக் திரைப்படம் 11 ஆஸ்கார் விருதுகளை வென்ற நாள் 23 மார்ச் 1998.

 

– தென்னகம்.காம் செய்தி குழு