இந்தியா

1.மெர்சர் குவாலிட்டி நிறுவனம் எடுத்த சர்வே முடிவுகளின் அடிப்படையில் இந்தியாவில் வாழ்வதற்கு ஏற்ற சிறந்த நகரங்கள் பட்டியலில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக ஹைதராபாத் முதல் இடத்தை பிடித்துள்ளது.மேலும் இந்த பட்டியலில் புதுடெல்லி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.நாட்டில் நல்ல உட்கட்டமைப்பு கொண்ட நகரங்களில் மும்பை முதலிடத்தில் உள்ளது. அதைத்தொடர்ந்து கொல்கத்தா, புனே, பெங்களூரு நகரங்கள்  உள்ளன.
2.மணிப்பூர் சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் பா.ஜனதாவைச் சேர்ந்த முதல்- மந்திரி பிரேன்சிங் வெற்றி பெற்றுள்ளார்.


உலகம்

1.சர்வதேச மகிழ்ச்சி தினம் நேற்று கொண்டாடப்பட்டது.இதையொட்டி உலகளவில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலை ஐ.நா-வின் Sustainable Development Solutions Network வெளியிட்டுள்ளது.இந்த பட்டியலில் நார்வே முதல் இடத்தையும்,டென்மார்க் இரண்டாவது இடத்தையும், ஐஸ்லாந்து மூன்றாவது இடத்தையும்,சுவிட்சர்லாந்து நான்காவது இடத்தையும்,பின்லாந்து ஐந்தாவது இடத்தையும்,நெதர்லாந்து 6 வது இடத்தையும்,கனடா 7 வது இடத்தையும்,நியூஸிலாந்து 8 வது இடத்தையும், ஆஸ்திரேலியா 9 வது இடத்தையும், ஸ்வீடன் 10 வது இடத்தையும், அமெரிக்கா 14வது இடத்தையும்,மத்திய ஆப்பிரிக்க குடியரசு கடைசி  இடத்தையும் பிடித்துள்ளன.மொத்தம் உள்ள 155 நாடுகள் கொண்ட இந்த பட்டியலில் இந்தியா 122 வது இடத்தைப் பிடித்துள்ளது.
2.பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலாளராக ஐ.நா. சபையின் நிரந்தர பிரதிநிதியாக பணியாற்றி வரும் தெமினா ஜன்ஜுவா நியமிக்கப்பட்டுள்ளார்.தெமினா ஜன்ஜுவா பாகிஸ்தானின் முதல் பெண் வெளியுறவு செயலாளர் ஆவார்.


விளையாட்டு

1.ராஞ்சியில் நடைபெற்ற இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.இந்த டெஸ்டின் முதல் இன்னிங்சில் புஜாரா பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார்.அவர் 525 பந்தில் 202 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். சுமார் 8 3/4 மணி நேரம் களத்தில் நின்றுள்ளார்.இதன் மூலம் 521 பந்தில் இரட்டை சதம் அடித்தன் மூலம் மெதுவாக இரட்டை சதம் அடித்த ஐந்தாவது வீரர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். 505-வது பந்தை சந்திக்கும்போது இந்திய மண்ணில் அதிக பந்துகளை சந்தித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.496 பந்துகளை சந்தித்த போது டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்சில் அதிக பந்துகளை சந்தித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை புரிந்துள்ளார்.இந்த போட்டியில் ஆட்ட நாயகன் விருது புஜாராவுக்கு வழங்கப்பட்டது.
2.கொழும்புவில் நடைபெற்ற வங்கதேச அணியின் 100-வது டெஸ்ட் போட்டியில் இலங்கையை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்கதேச அணி சாதனை வெற்றி பெற்றுள்ளது.மேலும் தொடரை 1-1 என்று சமன் செய்துள்ளது.தொடர் நாயகனாக ஷாகிப் அல் ஹசனும், ஆட்ட நாயகனாக தமிம் இக்பாலும் தேர்வு செய்யப்பட்டனர்.
3.டெல்லியில் நடைபெற்ற விஜய் ஹசாரே கிரிக்கெட் கோப்பை இறுதிப் போட்டியில், மேற்கு வங்க அணியை வீழ்த்தி, தமிழக அணி 5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.


இன்றைய தினம்

1.இன்று உலக பொம்மலாட்டம் தினம் (World Puppetry Day).
பொம்மலாட்டம் மிகப் பழமையான மரபுவழிக் கதைகளில் ஒன்று. உலகின் பல்வேறு இடங்களில் இக்கலை மரபுவழிக் கலையாகத் திகழ்கிறது. உயிர் அற்ற பொம்மைகள், உயிர்பெற்று திரைக்கு முன்னே ஆடிப்பாடி, பேசும் உணர்வில் பார்வையாளர்களைக் கவரும் கலையாக உள்ளது. உலகம் முழுவதும் வாழும் பொம்மலாட்டக் கலைஞர்களை கௌரவிக்க இத்தினம் 2003ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடப்படுகிறது.
2.இன்று உலகக் கவிதைகள் தினம் (World Poetry Day).
எழுச்சிமிக்க கவிதைகள் நாட்டின் சுதந்திரத்திற்கும், புரட்சிக்கும் வித்திட்டிருக்கிறது. இரண்டு வரிகளைக் கொண்ட திருக்குறள் உலகம் முழுவதும் போற்றப்படுகிறது. யுனெஸ்கோ 1999ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 அன்று பாரிஸ் நகரில் 30ஆவது பொதுமாநாட்டை நடத்தியது. இந்த மாநாட்டில் உலக கவிதைகள் தினமாக மார்ச் 21 ஐ அறிவித்தது. இதனை ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக்கொண்டது.
3.இன்று உலக காடுகள் தினம் (World Forestry Day).
வனங்கள் அழிக்கப்படுவதால் உலகில் வெப்பநிலை கூடுகிறது. காடுகளின் அவசியத்தை உணர்த்த உலக காடுகள் தினம் கொண்டாடப்படுகிறது. ஐரோப்பா கூட்டமைப்பு நவம்பர் 1971இல் கூடியது. இந்த அமைப்பு மார்ச் 21ஐ உலக காடுகள் தினமாகக் கொண்டாடுமாறு கேட்டுக்கொண்டது. இதனை உலக நாடுகள் அனைத்தும் ஏற்றுக்கொண்டன.
4.இன்று சர்வதேச இனப்பாகுபாடு நிராகரிப்பு தினம் (International Day of the Elimination of Racial Discrimination).
இனக்கொள்கைக்கு எந்தவித அடிப்படை விஞ்ஞானமும் இல்லை. மனிதனை இனங்களாகப் பிரிக்கப்படுவது எந்தவிதத்திலும் சரியானதல்ல. மனிதர்களுக்கு இடையே இனபேதம் பார்ப்பது சமூக விரோதச் செயல் என யுனெஸ்கோ தெரிவிக்கிறது. உலகின் பல நாடுகளில் இனவெறி இருப்பதைக் கருத்தில்கொண்ட ஐ.நா. சபை 1966ஆம் ஆண்டில் மார்ச் 21ஐ சர்வதேச இனப்பாகுபாடு நிராகரிப்பு தினமாக அறிவித்தது.
5.இன்று உலக டவுன் சிண்ட்ரோம் தினம் (World Down Syndrome Day).
நோய் எப்போதும் மனிதனின் பகுதியாகவே உள்ளது. டவுன் சிண்ட்ரோம் என்பது மனவளர்ச்சி குன்றியதைக் குறிப்பிடுகிறது. இந்த நோயானது மனித செல்லுக்குள், குரோமோசோமில் ஏற்படும் பிழையால் ஏற்படுகிறது. இந்த நோயைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த ஐ.நா. பொதுச்சபை 2011ஆம் ஆண்டு, டிசம்பர் மாதத்தில் மார்ச் 21ஐ உலக டவுன் சிண்ட்ரோம் தினமாக அறிவித்தது.
6.இன்று சர்வதேச நவ்ரூஸ் தினம் (International Day of Nowruz).
நவ்ரூஸ் என்பது பழங்கால பாரம்பரிய இசைத் திருவிழா. வெவ்வேறு சமூகங்கள் மத்தியில் கலாச்சார பன்முகத்தன்மை, நட்பு பங்களிப்பு, அமைதி மற்றும் தலைமுறைகளுக்கு இடையே குடும்பங்களில் ஒற்றுமை, அத்துடன் நல்லிணக்கம் உலகம் முழுவதும் அமைவதை ஊக்குவிக்க இத்தினம் கொண்டாடப்படுகிறது. இத்தினத்தை ஐ.நா.சபை 2010ஆம் ஆண்டில் அறிவித்தது.
7.டானிஷ் மேற்கிந்தியத் தீவுகள் கன்னித் தீவுகள் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்ட நாள் 21 மார்ச் 1917.

 

– தென்னகம்.காம் செய்தி குழு