தமிழகம்

1.தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி முறைப்படி நேற்று பகல் 12.30 மணியளவில் பொறுப்பேற்றுக் கொண்டார். முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட அவர் 500 டாஸ்மாக் கடைகள் மூடல், அம்மா இரு சக்கர வாகனம் திட்டம், மகப்பேறு நிதியுதவி உயர்வு, மீனவர்களுக்கு வீட்டு வசதி திட்டம், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான ஊக்கத்தொகை அதிகரிப்பு ஆகிய 5 அறிவிப்புகள் கொண்ட கோப்புகளில் கையெழுத்திட்டார்.


இந்தியா

1.கர்நாடக மாநிலத்தில் வருகிற 22-ந் தேதி முதல் சாலைப் போக்குவரத்து கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.இரண்டு நாள் இந்த கணக்கெடுப்பு நடைபெற உள்ளது.வாகனப் போக்குவரத்தின் அளவை மதிப்பிடுவதுதான் இந்த கணக்கெடுப்பின் நோக்கமாகும்.
2.திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு உறுப்பினராக சமூக சேவகியான சுதா நாராயணமூர்த்தி கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி ஏழுமலையான் கோவிலில் உள்ள தங்க வாசலில் பதவியேற்றுக் கொண்டார்.
3.ரூ.2 லட்சத்துக்கு மேல் ரொக்கப்பணம் கொடுத்து நகை வாங்கினால், இனி 1 சதவீதம் வரி செலுத்த வேண்டும் என மத்திய அரசு அதிகாரி தெரிவித்துள்ளார்.வரும் ஏப்ரல் 1-ந் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது.
4.திருமலை-திருப்பதி ஏழுமலையானுக்கு ஆந்திரா மாநிலம், கடப்பா மாவட்டம், புலிவேந்தலா பகுதியை சேர்ந்த ஸ்ரீராமாஞ்சுல ரெட்டி, இவரது மனைவி வெங்கட சுஜாதா ஆகியோர் ரூ.16 லட்சத்தில் தங்கம், வெள்ளி இழைகளால் செய்யப்பட்ட தர்மாவரம் பட்டு வேஷ்டி மற்றும் அங்க வஸ்திரத்தை தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சதலவாடா கிருஷ்ண மூர்த்தியிடம் கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி வழங்கினர்.இது தற்போது உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.60 ஆயிரம் பேர் தறி நெய்ததால் இவை இண்டர்நேஷனல் ஒண்டர் புக் ஆஃப் ரெகார்ட்ஸில் இடம் பிடித்துள்ளது.


உலகம்

1.இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்தவர் ரேவுட் ஹால் (54),சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.ஆனால் அவருக்கு மாரடைப்பு தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டே இருந்தது.அதாவது 24 மணி நேரத்தில் 27 தடவை மாரடைப்பு அவரை தாக்கியது.இருந்தும் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் பிழைத்தார்.
2.ஜெர்மனி நாஜி சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லர் இரண்டாம் உலகப்போர் காலக்கட்டங்களில் பயன்படுத்திய டெலிபோன் 2,43,000 டாலர்களுக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஏலம் அமெரிக்காவில் நடத்தப்பட்டது.இந்த தொலைபேசியை ஏலம் எடுத்தவரின் பெயர் சில காரணங்களினால் வெளியிடப்படவில்லை.


விளையாட்டு

1.சர்வதேச விளையாட்டு நிறுவனமான “பூமா” விராட் கோலியை 8 ஆண்டுக்கு ரூ.110 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.இதன் மூலம் இந்திய வீரர்களில் ஒருவர் ஒரே விளம்பரத்தில் அதிக தொகைக்கு ஒப்பந்தம் ஆனவர்  என்ற பெருமையை விராட் கோலி படைத்திருக்கிறார்.


இன்றைய தினம்

1.இன்று சர்வதேச தாய்மொழி தினம் (International Mother Language Day).
உலகில் சுமார் 6000 மொழிகள் உள்ளன. ஏற்கனவே பல மொழிகள் அழிந்து விட்டன. தற்போது 3000 மொழிகள் அழியும் தருவாயில் இருக்கின்றன. அழிந்துவரும் மொழிகளைப் பாதுகாக்கவும், அவற்றின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் யுனெஸ்கோ அமைப்பு உலகம் முழுவதும் சர்வதேச தாய்மொழி தினத்தை 1999ஆம் ஆண்டு முதல் பிப்ரவரி 21 அன்று கொண்டாடுகிறது.
2.நீராவியால் இயங்கிய முதல் தொடருந்து இயந்திரம் வேல்சில் இயக்கி சோதித்துப் பார்க்கப்பட்ட நாள் 21 பிப்ரவரி 1804.
3.கடைசி கரலீனா பரக்கீட் என்ற பறவை சின்சினாட்டியில் இறந்த நாள் 21 பிப்ரவரி 1918.
4.முதலாவது பறக்கும் தானுந்து வெற்றிகரமாகப் பறக்க விடப்பட்ட நாள் 21 பிப்ரவரி 1937.
5.சோவியத்தின் லூனா 20 சந்திரனில் இறங்கிய நாள் 21 பிப்ரவரி 1972.

 

– தென்னகம்.காம் செய்தி குழு