இந்தியா

1.வாடிக்கையாளர்களின் திருப்தி குறியீட்டில் (Customer Satisfaction Index) ராய்பூரில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தா விமான நிலையம் 4.84 மதிப்பெண்களுடன் இந்திய அளவில் முதல் இடத்தை பிடித்துள்ளது.உதய்பூர் இரண்டாவது இடத்தையும்,அம்ரித்சர் மூன்றாவது இடத்தையும்,டேராடூன் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளன.
2.அகில இந்திய பட்டய கணக்காளர் (C A) தேர்வில் வேலூரைச் சேர்ந்த அகத்தீஸ்வரன் , இந்திய அளவில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
3.தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக போட்டியிடும் வெங்கய்யா நாயுடு தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.வெங்கய்யா நாயுடு வகித்து வந்த தகவல் மற்றும் ஒளிபரப்புதுறை, ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி வசமும்,ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் வசம் நகர்ப்புற மேம்பாட்டு துறையும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


உலகம்

1.ஆஸ்திரேலியா அரசில் முதல்முறையாக தீவிரவாத தடுப்புக்காக தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளது.


விளையாட்டு

1.லண்டனில் நடைபெறும் World Para Athletics Championships போட்டியில், சக்கர நாற்காலி வட்டு எறிதல் பிரிவில் (F-51 club throw event) இந்திய வீரர் அமித் சரோஹா வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார்.
2.புரோ கபடி லீக் போட்டிகளில் பங்கேற்கவிருக்கும் சச்சின் தெண்டுல்கருக்கு சொந்தமான தமிழ் தலைவாஸ் அணியின் விளம்பரத் தூதராக நடிகர் கமல்ஹாசன் நியமிக்கப்படுள்ளார்.
3.இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியுடன் இணைந்து செயல்படும் விதமாக , பந்து வீச்சு பயிற்சியாளராக பாரத் அருண் , பேட்டிங் பயிற்சியாளராக சஞ்சய் பங்கர் மற்றும் பீல்டிங் பயிற்சியாளராக ஶ்ரீதர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதற்கு முன் ஜாகீர்கான் மற்றும் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டதாக செய்தி வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.


இன்றைய தினம்

1.இன்று மனிதன் நிலவில் இறங்கிய நாள் (Moon Landing Day).
அமெரிக்காவிலிருந்து அப்பலோ 11 என்கிற விண்கலம் நிலாவில் 1969ஆம் ஆண்டு ஜூலை 20 அன்று தரை இறங்கியது. முதன்முதலாக நீல் ஆர்ம்ஸ்ட்ராங் ஜூலை 21 அன்று அதிகாலை 2.56 மணிக்கு நிலவில் தனது காலை பதித்தார். மனித குல வரலாற்றில் இது மிகப்பெரிய சாதனையாகும். இவரைத் தொடர்ந்து 19 நிமிடங்கள் கழித்து ஆல்டிரின் என்பவரும் நிலவில் கால் பதித்தார்.
2.இன்று கிரிகோர் மெண்டல் பிறந்த தினம் (Gregor Mendel Birth Day).
கிரிகோர் மெண்டல் 1822ஆம் ஆண்டு ஜூலை 20 அன்று ஆஸ்திரிய நாட்டில் பிறந்தார். இவரை மரபியலின் தந்தை என்று அழைக்கிறார்கள். மரபுப்பண்புகள் சில குறிப்பிட்ட விதிகளுக்கு உட்பட்டே ஒரு சந்ததியில் இருந்து அடுத்த சந்ததிக்கு எப்படி கடத்தப்படுகிறது என்பதைக் கண்டறிந்தார். பிற்காலத்தில் இவ்விதிகள் மெண்டலின் விதிகள் எனப் பெயரிடப்பட்டன.
3.இன்று சர்வதேச சதுரங்க நாள் (International Chess Day).
உலகச் சதுரங்கக் கூட்டமைப்பு 1924ஆம் ஆண்டு ஜூலை 20 இல் பாரிஸ் நகரில் நிறுவப்பட்டது. இது உலக நாடுகளின் சதுரங்க அமைப்புகளை ஒன்றிணைக்கும் ஒரு உலக நிறுவனம். இதன் குறிக்கோள் நாம் அனைவரும் ஒரே மக்கள் என்பதாகும். தற்போது இந்நிறுவனத்தில் 150க்கும் மேற்பட்ட நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இக்கூட்டமைப்பு ஜூலை 20 ஆம் நாளை சர்வதேச சதுரங்க நாளாக 1966ஆம் ஆண்டில் அறிவித்தது.

 

– தென்னகம்.காம் செய்தி குழு