tamil

இந்தியா

1.தில்லியில் நேற்று 27 சர்வதேச நாடுகளைச் சேர்ந்த தேர்தல் ஆணையர்கள் கலந்துகொள்ளும் இரண்டு நாள் நடைபெறும் தேர்தல் ஆணையர்களின் சர்வதேச மாநாடு தொடங்கியது.
2.உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இந்திய கடற்படையின் முதலாவது அணு சக்தி நீர்மூழ்கி கப்பல் ஐஎன்எஸ் அரிஹந்த் சேவையில் சேர்க்கப்பட்டுள்ளது.
3.ரயில்வே துறை சார்பில் ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு இலவச வைஃபை வசதி அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. ரயில்டெல் மற்றும் கூகுள் நிறுவனங்கள் இணைந்து இந்த சேவையை வழங்குகின்றன.இந்தியாவில் முதல்முறையாக மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இலவச வைஃபை வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.மேலும் இலவச வைஃஃபை வசதியைப் பயணிகள் அதிகளவில் பயன்படுத்திய இடங்களின் வரிசையில் பாட்னா ரயில் நிலையம் முதலிடத்தை பிடித்துள்ளது.
4.கேரளாவின் கொல்லம் மாநகரில் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வீட்டிற்கே சென்று நியாயவிலைக் கடை பொருட்களை வழங்கும் திட்டம், நவம்பர் 01ல் துவங்க உள்ளது.2017 ஏப்ரலுக்குள் மாநிலம் முழுமைக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது.
5.கோவாவில் நடந்து முடிந்த பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க வந்த ரஷ்ய அதிபர் புதினுடன் இந்தியா தரப்பில் பல்வேறு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன.இதில் இந்தியா-ரஷ்யா இணைந்து 600 கி.மீ. தூர இலக்கைத் தேடித் தாக்கும்  ஏவுகணைகளை உருவாக்க உள்ளன.தற்போது இந்தியாவிடம் உள்ள பிரம்மோஸ் ஏவுகணை 300 கி.மீ. தூரம் மட்டுமே தாக்கும் சக்தி உடையது.இந்தியா-ரஷ்யா இடையே இந்த ஒப்பந்தத்தால் இனி 600 கி.மீ. தூர இலக்கைத் தேடித் தாக்கும்  ஏவுகணைகளை உருவாக்க முடியும்.

உலகம்

1.உலகின் முதல் 5ஜி மோடமை 2018 ஆம் ஆண்டு அமெரிக் நிறுவனம்  Qualcomm அறிமுகப்படுத்த உள்ளது.இதற்கு ”ஸ்னாப்டிராகன் X50” என பெயரிடப்பட்டுள்ளது.இதன் வேகம்  5 Gbps ஆக இருக்கும்.
2.பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் (பிஎம்எல்-என்) தலைவராக அந்நாட்டுப் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மீண்டும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
3.ருவாண்டாவின் கடைசி மன்னர் கிகேலி வி நாதின்துர்வா அமெரிக்காவில் காலமானார்.இவருக்கு வயது 80.
4.இன்று உலக எலும்புப்புரை தினம் (World Osteoporosis Day).
மாதவிடாய் நிற்றலுக்குப் பிறகு எலும்புப்புரை நோய் பெண்களுக்கு அதிகமாக ஏற்படுகிறது. எலும்புப்புரை என்பது அதிகமாக எலும்பு முறிவு ஆபத்தை ஏற்படுத்தும் ஒரு எலும்பு சம்பந்தப்பட்ட நோய். உலக எலும்புப்புரை அமைப்பு 1996ஆம் ஆண்டில் அக்டோபர் 20 ஐ உலக எலும்புப்புரை தினமாக அறிவித்தது. உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டு இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

தினம் ஒரு மாவட்டம் சிறப்பு செய்திகள்

25.இன்று நாமக்கல் மாவட்டம்.

1997 ம் ஆண்டு ஜனவரி 1 அன்று சேலம் மாவட்டத்தில் இருந்து நாமக்கல் மாவட்டம் பிரிக்கப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்டது.நாமக்கல் நகராட்சி ஆசியாவின் முதல் ISO 14001-2004 தரச்சான்றிதழ் பெற்றதாகும். இது “குப்பை இல்லா நகரம்” என்னும் சிறப்பையும் பெற்றதாகும்.
“நாமகிரி” என்று அழைக்கப்படும் 65 மீ உயர மிகப் பெரிய ஒற்றைப் பாறை நகரின் நடுவில் உள்ளது. நாமகிரி என்ற பெயரிலிருந்து நாமக்கல் என்ற பெயர் உருவானது. இவ்வூரின் பழைய பெயர் ‘ஆரைக்கல்’ என்பதாகும். இப்பெயர் பல கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாறையின் மீது கோட்டை ஒன்று உள்ளது இதை ராமச்சந்திர நாயக்கர் கட்டியது என கருதப்படுகிறது, இதை மைசூர் அரசின் அதிகாரி லட்சுமி நரசய்யா அமைத்தார் என்ற கருத்தும் நிலவுகிறது.பின்னாளில் திப்பு சுல்தான் இப்பாறைக் கோட்டையிலிருந்து ஆங்கிலேயர்களை எதிர்த்து சண்டையிட்டார் என்றும் நம்பப்படுகிறது.நாமகிரி என்பதே தமிழில் நாமக்கல் எனப்படுவதாக கருதப்படுகிறது.
இந்த மாவட்டத்திலுள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களாக திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வரர் கோவில், கொல்லிமலை ஆகியவை அறியப்படுகின்றன.