இந்தியா

1.நிர்பயா நிதியின் கீழ் ரூ.500 கோடி செலவில் 983 ரயில் நிலையங்களில் 19,000 கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட உள்ளன.
2.மத்திய அரசு ஊழல், லஞ்சத்தை ஒழிக்கும் நோக்கில், Operation Clean Money என்ற பெயரில் புதிய இணையதளத்தை துவக்கியுள்ளது.
3.மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் அனில் மாதவ் தவே (60), திடீர் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார்.


விளையாட்டு

1.அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி வீராங்கனைகள் தீப்தி சர்மா ( 188 ரன்கள்) , பூணம் ராத் (109 ரன்கள்) ஜோடி முதல் விக்கெட்டுக்கு 45.3 ஓவரில், 320 ரன்கள் சேர்த்தது, பெண்கள் கிரிக்கெட்டில் எந்த ஒரு விக்கெட்டுக்கும் இணைந்து அதிகபட்ச ரன்கள் எடுத்த ஜோடி என, உலக சாதனை படைத்துள்ளது.இதற்கு முன் 2008ல் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக, இங்கிலாந்து அணியின் சாரா டெய்லர் , அட்கின்ஸ் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 268 ரன்கள் எடுத்தது தான் சாதனையாக இருந்தது.இந்த சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.
2.குஜராத்தின் அமுல் நிறுவனம் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் பங்குபெறும் நியூசிலாந்து அணியின் விளம்பரதாரராக ஒப்பந்தமாகியுள்ளது.


இன்றைய தினம்

1.இன்று சர்வதேச அருங்காட்சியக தினம் (International Museum Day).
அருங்காட்சியகங்கள் கல்வி வளர்ச்சிக்குப் பெரும்பங்கு வகிக்கின்றன. உலகளவில் சர்வதேச அருங்காட்சியக ஆலோசனை சபை என்கிற அமைப்பு இரண்டாம் உலக யுத்தத்திற்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டது. இந்த அமைப்புடன் உலகில் உள்ள அனைத்து அருங்காட்சியகங்களும் தொடர்பு வைத்துள்ளன. 1978ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச அருங்காட்சியக தினம் மே 18 அன்று கொண்டாடப்படுகிறது.
2.இன்று உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினம் (World AIDS Vaccine Day).
எச்.ஐ.வி. தொற்று மற்றும் எய்ட்ஸை தடுக்க தடுப்பூசி மிக அவசியமான, அவசரத் தேவையாக உள்ளது. இதனை கண்டுபிடிக்க விஞ்ஞானிகளும், மருத்துவர்களும் முயன்று வருகின்றனர். தடுப்பூசி கண்டுபிடிப்பதன் மூலம் எய்ட்ஸ் ஆபத்தைக் குறைக்க முடியும். இது சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்த 1998ஆம் ஆண்டிலிருந்து மே 18 அன்று எய்ட்ஸ் தடுப்பூசி விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்படுகிறது.
3.உலகின் 4வது பெரிய மலையான லகோத்ஸே மலையின் உச்சியை முதன் முதலில் சுவிட்சர்லாந்து மலையேறிகள் எட்டிய நாள் 18 மே 1956.
4.அப்பல்லோ 10 விண்ணுக்கு ஏவப்பட்ட நாள் 18 மே 1969.

 

– தென்னகம்.காம் செய்தி குழு