Daily-Current-Affairs

இந்தியா

1.ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் வெளியிட்டுள்ள அறிவிப்பில் யுரி தாக்குதலில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களின் நினைவாக தனது பிறந்த நாளை(நேற்று இவருடைய 71வது பிறந்த நாள்) கொண்டாடப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.
2.பிரதமர் நரேந்திர மோடி, ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் முன்னிலையில் ரஷியாவிடம் இருந்து ரூ.43 ஆயிரம் கோடி மதிப்பில் ஆயுத தளவாடங்களை இந்தியா வாங்குவது தொடர்பான ஒப்பந்தங்கள் உள்பட 16 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
3.சுதந்திரப் போராட்டத் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் உருவாக்கப்பட்ட இந்திய தேசிய ராணுவப் படையில் (ஐ.என்.ஏ.) பணியாற்றிய கடைசி வீரராக அறியப்பட்ட டேனியல் காலே கடந்த அக்டோபர் 14-ஆம் தேதி காலமானார்.இவர் மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள பன்ஹாலா கிராமத்தில் 1920-ஆம் ஆண்டு பிறந்தவர்.இவருக்கு வயது 95.
4.கனிம சுரங்கங்களை செயற்கைக்கோள் வழியாக நாடு முழுவதும் கண்காணிக்கும் முறையை மத்திய எரிசக்தி, சுரங்கத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தொடக்கி வைத்துள்ளார்.

உலகம்

1.இன்று உலக வறுமை ஒழிப்பு தினம் (World Poverty Eradication Day).
உலகளாவிய ரீதியில் வறுமை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி பசிப்பிணியில் இருந்து மக்களை விடுவிப்பதற்காக ஐக்கிய நாடுகள் அமைப்பு 1992 ஆம் ஆண்டு வறுமை ஒழிப்பு நாளை அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்டது.
உலகில் வறுமை நிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ வேண்டியதன் அவசியம் குறித்து அனைத்து தரப்பினரின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்துடன் வறுமை ஒழிப்பு தினத்தில் பல்வேறு வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நாள் 1987 ஆம் ஆண்டு முதன் முதலாக பிரான்சின் பாரிஸ் நகரில் கடைப்பிடிக்கப்பட்டது.
உலகின் மிகப்பெரிய 3 பணக்காரர்களின் ஆண்டு வருமானத்தைவிட 46 ஏழை நாடுகளின் வருமானம் குறைவாகவே இருக்கிறது. உலகில் வாழும் மக்களில் பாதி பேர் ஒரு நாளைக்கு 2 டாலருக்குக் குறைவான பணத்தில் தான் உயிர் வாழ்கின்றனர். தினமும் வறுமையின் காரணமாக 30,000 குழந்தைகள் இறந்துவிடுவதாக யூனிசெஃப் கூறுகிறது. இந்த வறுமையினை ஒழிக்க அக்டோபர் 17இல் இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

விளையாட்டு

1.தர்மசாலாவில் நேற்று நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.இது இந்தியாவின் 900-வது ஒரு நாள் போட்டியாகும்.
2.முன்னாள் ஓட்டப்பந்தய வீராங்கனை சாந்திக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தடகள பயிற்சியாளராக நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.இவர் 2006-ம் ஆண்டு தோஹாவில் நடந்த ஆசிய விளையாட்டில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.ஆனால் பாலின சர்ச்சையில் (ஆண் தன்மைக்குரிய ஹார்மோன் அதிகம் இருப்பதாக புகார்) சிக்கியதால் அவரது பதக்கம் பறிக்கப்பட்டதுடன், போட்டிகளில் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டது.இதையடுத்து தமிழக அரசு அவருக்கு பயிற்சியாளர் பணி வழங்கி கெளரவித்துள்ளது.
3.தர்மசாலாவில் நேற்று நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதுடன் மகேந்திர சிங் டோனி புதிய சாதனை புரிந்துள்ளார்.நேற்றைய வெற்றியுடன் சேர்த்து  டோனி தலைமையில் இந்திய அணி பெறும் 108-வது வெற்றி இதுவாகும்.சர்வதேச அளவில் கேப்டனாக அதிக வெற்றிகள் பெற்ற 2-வது கேப்டன் என்ற பெருமையை மகேந்திர சிங் டோனி பெற்றுள்ளார்.ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 165 வெற்றிகளுடன் முதல் இடத்தில் உள்ளார்.

தினம் ஒரு மாவட்டம் சிறப்பு செய்திகள்

22.இன்று தூத்துக்குடி மாவட்டம்.

இது ஒரு துறைமுக நகரமாகும். இது தமிழகத்தின் 10ஆவது மாநகராட்சியாக ஆகஸ்ட் 5, 2008 இல் அப்போதைய தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதியினால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதன் மேற்கிலும், தெற்கிலும் ஸ்ரீவைகுண்டம் வட்டமும், வடக்கில் ஒட்டப்பிடாரம் வட்டமும் உள்ளன. கிழக்கில் வங்காள விரிகுடா கடல் அமைந்துள்ளது. தூத்துக்குடி வரலாற்று ரீதியில் முத்துக் குளிப்புக்குப் பெயர் பெற்ற இடமாகும். தூத்துக்குடியில் ஒரு அனல் மின் நிலையமும் ஸ்பிக் உரத்தொழிற்சாலையும் அமைந்துள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்தில் உற்பத்தியாகும் ஆறுகள் எதுவுமில்லை. திருநெல்வேலி மாவட்டத்தில் உற்பத்தியாகும் ஆறுகள் தூத்துக்குடி மாவட்டம் வழியாக பாய்ந்து கிழக்கிலுள்ள கடலில் போய்ச் சேருகின்றன.
தூத்துக்குடி, திருச்செந்தூர், மணப்பாடு, கழுகுமலை, ஒட்டப்பிடாரம், எட்டயபுரம், பாஞ்சாலங்குறிச்சி, கயத்தாறு, நவதிருப்பதிகள் போன்ற சுற்றுலா தலங்கள் உள்ளன.இங்கு தயாராகும் உப்பு ஆசியாக் கண்டத்திலேயே மிகச் சிறந்த உப்பாகும்.புரோட்டாவிற்கு பெயர் பெற்ற விருதுநகருக்கு அடுத்து தூத்துக்குடி இரண்டாமிடத்தில் இருக்கிறது.