தமிழகம்

1.அதிமுக தற்காலிக பொதுச் செயலர் சசிகலா,சுதாகரன், இளவரசி ஆகிய 3 பேருக்கும் சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிபதி குன்ஹா அளித்த 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை தீர்ப்பு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் நேற்று உறுதி செய்துள்ளது.மேலும் தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகிய இரு நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


இந்தியா

1.ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 9.28 மணிக்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி-37 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.ஏழு நாடுகளைச் சேர்ந்த 104 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் செலுத்தப்பட்டது.இதன் மூலம் 2014 ம் ஆண்டு ரஷ்யா ஒரே நேரத்தில் 33 செயற்கைகோள்களை விண்ணிற்கு அனுப்பிய சாதனையை தற்போது இந்தியா முறியடித்து, புதிய உலக சாதனையை படைத்துள்ளது.
2.திரைப்படம், செய்திப்படம் அல்லது ஆவணப்படம் ஆகியவற்றில் தேசிய கீதம்  இசைக்கும் போது பொதுமக்கள் எழுந்து நிற்கத் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.ஷியாம் நாராயணன் என்பவர் தாக்கல் செய்திருந்த பொது நல வழக்கின் மீது உச்ச நீதிமன்றம்  இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது.மேலும் இதுதொடர்பான அடுத்தகட்ட விசாரணை வரும் ஏப்ரல் 18-ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
3.இதய நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்து குழாய் வடிவத்திலான “கரோனரி ஸ்டென்டு” பொருத்துவது வழக்கம். இதன் விலையை 85 சதவீத அளவுக்கு மத்திய அரசு நேற்று குறைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
4.இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் தெண்டுல்கர் மராட்டிய மாநிலம் ஒஸ்மான்பாத் மாவட்டத்தில் உள்ள டோன்ஜா என்ற கிராமத்தை தத்தெடுத்து அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க ரூ.4 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளார்.முன்னதாக ஆந்திர மாநிலத்தில் உள்ள புட்டம்ராஜூ கான்ட்ரிகா என்ற  கிராமத்தை தத்தெடுத்து தெண்டுல்கர் அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுத்தது நினைவிருக்கலாம்.மேலும் சச்சின் தெண்டுல்கர் டெல்லி மேல்-சபை எம்.பி.யாக இருப்பது குறிப்பிடத்தக்கது.அவரது எம்.பி.உள்ளூர் மேம்பாட்டு நிதியில் இருந்து நிதியை ஒதுக்கீடு செய்து வருகிறார்.


வர்த்தகம்

1.இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கிக்கு (ஐ.பி.பி.பி.) வரும் 2017-18 நிதி ஆண்டுக்கு மத்திய அரசு ரூ.500 கோடியை ஒதுக்கியுள்ளது.


உலகம்

1.அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் ஃபிளின் தனது பதவியை ராஜினாமா செய்வதாக கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி அறிவித்துள்ளார்.


விளையாட்டு

1.சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள பேட்டிங் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் மிதாலி ராஜ் 2-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.


இன்றைய தினம்

1.இன்று கலிலியோ கலிலி பிறந்த தினம் (Galileo Galilei Birth Anniversary Day).
கலிலியோ 1564ஆம் ஆண்டு பிப்ரவரி 15 அன்று இத்தாலி நாட்டில் பிறந்தார். இவரை நவீன வானவியல் ஆய்வுகளின் தந்தை, நவீன இயற்பியலின் தந்தை மற்றும் நவீன அறிவியலின் தந்தை எனவும் அழைக்கின்றனர். தொலைநோக்கி மூலம் வியாழன் கிரகத்திற்கு 4 நிலாக்கள், சனிக்கிரகத்திற்கு வளையம், சூரியனில் கரும்புள்ளிகள் இருப்பதையும் கண்டுபிடித்தார்.
2.யூடியூப் சேவை ஆரம்பிக்கப்பட்ட நாள் 15 பிப்ரவரி 2005.
3.புனித ரோம் பேரரசின் மன்னனாக மூன்றாம் பேர்டினண்ட் முடி சூடிய  நாள் 15 பிப்ரவரி 1637.
4.யாழ்ப்பாணத்தில் முதற்தடவையாக அரிசி பங்கீட்டு அடிப்படையில் வழங்கப்பட்ட நாள் 15 பிப்ரவரி 1920.
5.ENIAC என்ற முதல் தலைமுறைக் கணினி அறிமுகமான நாள் 15 பிப்ரவரி 1946.

 

– தென்னகம்.காம் செய்தி குழு