தமிழகம்

1.சென்னை பெருநகர காவல் ஆணையராக ஏ.கே.விஸ்வநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.இதற்கான உத்தரவை உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார்.சென்னை பெருநகர காவல் துணை ஆணையராக சாம்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.சென்னை பெருநகர காவல் ஆணையராக இருந்த கரண் சின்ஹா போலீஸ் தேர்வு வாரியத் தலைவராக மாற்றப்பட்டுள்ளார்.


இந்தியா

1.ஹரியாணா மாநில அரசு இணையவழிக் குற்றங்கள் தொடர்பாக மாணவர்களுக்கு விழிப்புணர்வு அளிக்க முடிவு செய்துள்ளது.இதன் முதல்கட்டமாக பள்ளி ஆசிரியர்களுக்கு இணையவழிக் குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு பயிற்சி அளித்து வருகிறது. பயிற்சிப் பெற்ற ஆசிரியர்கள் வரும் கல்வியாண்டு முதல் ப்ளஸ் 2 மாணவர்களுக்கு இணையவழிக் குற்றங்கள் குறித்து பாடம் நடத்த உள்ளனர்.
2.உலக சுகாதார நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசிய பிராந்திய “கல்லீரல் அழற்சி நோய்” விழிப்புணர்வு நல்லெண்ண தூதராக பிரபல இந்தி நடிகர் அமிதாப்பச்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
3.கேரளாவில் புதிதாக தொடங்கவுள்ள மெட்ரோ ரயில் பணிகளில் 23 திருநங்கைகளுக்கு வேலை வாய்ப்பு தரப்பட்டுள்ளது.மெட்ரோ ரயில் பராமரிப்பு , டிக்கெட் வழங்குதல் உள்ளிட்ட பணிகளுக்கு, அவர்கள் தகுதிக்கு ஏற்ப வேலை வழங்கப்படவுள்ளது.


உலகம்

1.பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ் தொடர்பான வழக்கில், ஐ.நா. சபையின் சர்வதேச நீதிமன்றம் ஜாதவின் மரண தண்டனைக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் உள்ள ஐ.நா. சபையின் சர்வதேச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி – ரோன்னி ஆபிரஹாம் ஆவார்.


இன்றைய தினம்

1.இன்று உலக அன்னையர் தினம் (World Mother’s Day).
அண்ணா ஜார்விஸ் என்கிற அமெரிக்கப் பெண் தன் அன்னை மீது கொண்ட அன்பின் காரணமாக அன்னையர் தினம் ஏற்பட்டது. இவரின் கடும் முயற்சியால் அமெரிக்க ஜனாதிபதி வில்சன் அவர்கள் 1914ஆம் ஆண்டில் அன்னையர் தினத்தை அறிவித்தார். தாயின் ஆரோக்கியம், கல்வி, பொருளாதார வாய்ப்பு போன்ற சிறந்த வசதிகளை செய்து கொடுப்பதே அன்னையர் தினத்தின் நோக்கமாகும்.
2.பெரியம்மை நோய்க்கான தடுப்பூசியை எட்வர்ட் ஜென்னர் அறிமுகப்படுத்திய நாள் 14 மே 1796.

– தென்னகம்.காம் செய்தி குழு