Current-Affairs-Updates

தமிழகம்

1.2016-ஆம் ஆண்டுக்கான தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் ராமானுஜன் விருதுக்கு பின்லாந்தைச் சேர்ந்த துர்க்கு பல்கலைக்கழக முனைவர் கைசா மாடோமகி, கனடாவைச் சேர்ந்த முனைவர் மாக்சிம்ரட்சில் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியா

1.இந்த ஆண்டிற்கான உலக பட்டினி நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ள 118 வளரும் நாடுகளில் இந்தியா 97வது இடத்தில் உள்ளது. இந்தியாவை விட, பட்டினி விகிதத்தில் எத்தியோப்பியா, நைகர், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் பின்தங்கியுள்ளன. அதேநேரத்தில் இலங்கை, வங்களாதேசம், நேபாளம், சீனா ஆகியன அடுத்தத்த இடங்களில் உள்ளன.கடந்த 2008ம் ஆண்டு இந்தியா இந்த பட்டினி நாடுகளின் பட்டியலில் 102வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

உலகம்

1.2016ம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு தத்துவம், அரசியல், சமூகம் சார்ந்த பாடல்களை எழுதியுள்ள பாப் டிலனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
2.இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வென்ற கொலம்பியா அதிபர் ஜுவன் மானுவேல் சான்டோஸ் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னுடைய நோபல் பரிசுப் பணத்தை முழுவதுமாக அர்ப்பணிப்பதாக அறிவித்துள்ளார்.
3.இந்தியாவுக்கு எதிராக சீனா, ஈரான் உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய தெற்காசிய பொருளாதாரக் கூட்டமைப்பு உருவாக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.
4.ஐ.நா. சபையின் புதிய பொதுச் செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள போர்ச்சுகல் நாட்டின் முன்னாள் பிரதமர் அன்டோனியோ குட்டெரெஸ் நேற்று அதிகாரப்பூர்வமாக தேர்வு  செய்யப்பட்டார்.தற்போதைய ஐ.நா. பொதுச் செயலர் பான் கி-மூனின் பதவிக் காலம் வரும் டிசம்பர் மாதம் 31-ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளது.இவர் தொடர்ந்து 10 ஆண்டுகாலம் ஐ.நா. பொதுச் செயலர் பதவியை வகித்துள்ளார்.
5.இன்று உலகத்தர நிர்ணய தினம் (World Standards Day).
உற்பத்தி செய்யும் பொருட்கள் சர்வதேச அளவில் தரமானதாக இருக்க வேண்டும் என்பதற்காக 1946ஆம் ஆண்டு, அக்டோபர் 14 இல் சர்வதேச தர நிர்ணய அமைப்பு (ISO) உருவாக்கப்பட்டது. உலகத் தர நிர்ணய தினம் 1970ஆம் ஆண்டுமுதல் கொண்டாடப்படுகிறது. நுகர்வோர்க்கு தரமான பொருட்களை வழங்க வேண்டும். தரமான பொருட்களே உலகைக் காக்கும் என தர நிர்ணய அமைப்பு கூறுகிறது.
6.இன்று உலக முட்டை தினம் (World Egg Day).
உலக முட்டை தினம் 1996ஆம் ஆண்டிலிருந்து அக்டோபர் இரண்டாவது வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. ஒரு மனிதனின் ஆரோக்கிய வாழ்வுக்கு ஆண்டிற்கு சராசரியாக 180 முட்டைகள் சாப்பிட வேண்டும். முட்டை கலப்படம் செய்ய முடியாத உணவாக விளங்குகிறது. முட்டை நுகர்வின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இத்தினம் கொண்டாடப்படுகிறது.

வணிகம்

1.ஆன்லைன் ரியல் எஸ்டேட் நிறுவனமான ரூப் அண்ட் புளோர் நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) கௌரி சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

விளையாட்டு

1.இந்த  ஆண்டுக்கான சர்வதேச தங்கக்கால் விருது இத்தாலி கால்பந்து அணியின் கோல்கீப்பர் Gianluigi Buffon-க்கு வழங்கப்பட்டுள்ளது.சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் கால்பந்து வீரர்களை கவுரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் இவ்விருது வழங்கப்படுகிறது

தினம் ஒரு மாவட்டம் சிறப்பு செய்திகள்

19.இன்று திருநெல்வேலி மாவட்டம்.

16 ஆம் நூற்றாண்டு நூல் வேணுவனப் புராணம் திருநெல்வேலிக்கு ‘வேணுவனம்’ என்று பெயர் சூட்டிப் பாடுகிறது. ‘வேணு’ என்னும் சொல் மூங்கிலைக் குறிக்கும். பண்டைக் காலத்தில் மூங்கில் காடாக விளங்கிய இந்த ஊர் மூங்கில்-நெல்லால் பசியைப் போக்கிய காரணத்தால் இந்த ஊரை ‘நெல்வேலி’ எனப் பெயரிட்டு வழங்கியிருக்கிறார்கள். “திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி’ என சம்பந்தரும், “தண் பொருநைப் புனல்நாடு’ எனச் சேக்கிழாரும், “பொன்திணிந்த புனல் பெருகும் பொருநைத் திருநதி’ என்று கம்பரும் பாடிய பூமி, திருநெல்வேலி ஆகும். 1790 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பனியால் உருவாக்கப்பட்டது. (அன்றைய தினத்தில் திருநெல்வேலி மாவட்டத்துடன் இன்றைய தூத்துக்குடி மாவட்டமும், விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தின் சில பகுதிகளும் இருந்தன.) செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி திருநெல்வேலி தினமாக கொண்டாடப்படுகிறது. திருநெல்வேலி (அ) நெல்லை நகரம், பொருனை  எனப்படும் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. 2000 ஆண்டு பழமை வாய்ந்த இந்த நகரம் பாண்டிய மன்னர்களின் தலைநகரமாக சிலகாலம் செயல்பட்டது. இங்குள்ள நெல்லையப்பர் – காந்திமதி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. கிழக்கில் வங்காள விரிகுடா மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தையும், மேற்கில் கேரளத்தையும், வடக்கில் விருதுநகர் மாவட்டத்தையும், தெற்கில் கன்னியாகுமரி மாவட்டத்தையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. தாமிரபரணி ஆறு பாயும் இம்மாவட்டத்தில் அமைந்துள்ள நெல்லையப்பர் ஆலயம், அகஸ்தியர் அருவி ஆகியவை புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களாக திகழ்ந்து வருகின்றன.