தமிழகம்

1.தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி சேவைகள் கழகத்தின் தலைவராக பி.வளர்மதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இதற்கான ஆணையை தமிழக அரசின், பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் சபீதா பிறப்பித்துள்ளார்.


இந்தியா

1.டெல்லியில் பெண்களின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு மெட்ரோ ரயில்களில் பயணிக்கும்போது அவர்கள் கத்தி எடுத்துச் செல்ல மத்திய பாதுகாப்பு படை அனுமதி வழங்கியுள்ளது.மேலும் ரயில் பயணிகள் தீப்பெட்டிகள் மற்றும் லைட்டர் கொண்டுச் செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒரு பயணி ஒரே ஒரு தீப்பெட்டிதான் வைத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
2.வருகின்ற பிப்ரவரி 28-ஆம் தேதிக்குகள், அனைத்து வங்கிக் கணக்குகளுடனும், பான் கார்டு எண்ணை இணைக்க வேண்டும். பான் கார்டு இல்லாதவர்களிடம் படிவம் 60-ஐ பெற வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சகம் மற்றும் மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையம் வங்கிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. ஜீரோ பேலன்ஸ் அக்கவுன்ட்டுகள் மற்றும் ஜன்தன் வங்கிக் கணக்குகளுக்கு இந்த முறை பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3.இந்திய ரிசர்வ் வங்கியின் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றி வந்த U.S.பாலிவால் பணிநிறைவு பெற்றுள்ளதால் அவருக்குப் பதிலாக புதிய நிர்வாக இயக்குநராக சுரேகா மராண்டி நியமிக்கப்பட்டுள்ளார்.
4.சாலை விபத்தில் பாதிக்கப்படுவோருக்கு உடனடியாக உதவிகள் புரிந்தோருக்கு ரூ 2000 வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் என டெல்லி முதல்வர் தெரிவித்துள்ளார்.


உலகம்

1.HSBC Holdings ஆய்வின்படி வெளிநாட்டினருக்கு அதிகபட்ச சம்பளம் வழங்கும் நாடுகளின் பட்டியலில் சுவிட்சர்லாந்து முதலிடத்தில் உள்ளது. இங்கு வருடத்திற்கு சராசரியாக $ 1,88,275 சம்பளம் பெறுகின்றனர். இது உலகின் சராசரியைவிட இருமடங்கு ஆகும்.இரண்டாமிடத்தில் ஹாங்காங் உள்ளது. மூன்றாம் இடம் இந்தியா பெற்றுள்ளது.
2.ஜப்பானை சேர்ந்த Cerevo என்ற Startup நிறுவனம் , Taclim எனும் உலகின் முதல் மெய்நிகர் காட்சி காலணிகளை உருவாக்கியுள்ளது.
3.சௌதி அரேபியா தலைமையில் 39 நாடுகள் இணைந்து உருவாக்கியுள்ள இஸ்லாமிய ராணுவத்தின் [ Islamic Military Alliance to Fight Terrorism (IMAFT)] தலைமை தளபதியாக, ஓய்வு பெற்ற பாகிஸ்தான் ராணுவ தளபதி ரஹீல் ஷரிப் நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த அமைப்பில் கடைசியாக ஓமன் நாடு சேர்ந்துள்ளது.


விளையாட்டு

1.லா லிகா தொடரில் கிரனாடாவை 5-0 என வீழ்த்தியன் மூலம் தொடர்ச்சியாக 39 தோல்வியை சந்திக்காமல் பார்சிலோனா சாதனையை சமன் செய்துள்ளது ரியல் மாட்ரிட் அணி.ஸ்பெயின் நாட்டின் கால்பந்து கிளப்புகளில் பார்சிலோனா, ரியல் மாட்ரிட் அணிகள் முன்னணி கிளப்பாக விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
2.சென்னை ஓபன் டென்னிஸ் இரட்டையர் பிரிவு, இறுதிப் போட்டியில் ரோஹன் போபண்ணா- ஜீவன் நெடுஞ்செழியன் இணை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.இந்த இணை 6-3, 6-4 என்ற, நேர் செட் கணக்குகளில் புரவ் ராஜா- திவிஜ் சரண் இணையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.இதன் மூலம் சென்னை ஓபன் டென்னிஸில் இந்திய இணை ஒன்று சாம்பியன் பட்டம் வெல்வது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்பு பயஸ்-பூபதி இணை ஐந்து முறை சென்னை ஓபன் இரட்டையர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
3.சென்னை ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் ஸ்பெயின் வீரர் ராபர்டோ பாடிஸ்டா அகுட்  சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.இவர் தன்னை எதிர்த்து விளையாடிய ரஷ்ய வீரர் டேனில் மெட்வடேவ்வை 6-3, 6-4 என்ற கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.இவர் சென்னை ஓபன் சாம்பியன் பட்டத்தை வெல்வது இதுவே முதல்முறையாகும்.மேலும் ஏடிபி உலக டூர் போட்டிகளில் அவர் வென்ற 5வது பட்டம் இதுவாகும்.
4.கதார் ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் ஆண்டி முர்ரேவை வீழ்த்தி நோவாக் ஜோகோவிச்  சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.இவர் தன்னை எதிர்த்து விளையாடிய ஆண்டி முர்ரேவை 6-3, 5-7, 6-4 என்ற கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.இந்த வெற்றியின் மூலம் கடந்த 28 போட்டிகளாக தொடர்ந்து வெற்றி பெற்று வந்த முர்ரேவின் சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ஜோகோவிச்.


இன்றைய தினம்

1.புனித ஜார்ஜ் கோட்டையில் சென்னை சட்டமன்றத்தின் முதலாவது கூட்டம் நடைபெற்ற நாள் 09 ஜனவரி 1921.
2.ஐநாவின் தலைமையகம் நியூயார்க் நகரில் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்ட நாள்  09 ஜனவரி 1951.
3.ஹம்பிறி டேவி சுரங்கத் தொழிலாளர்களுக்காக வடிவமைக்கப்பட்ட டேவி விளக்கை வெற்றிகரமாகப் பரிசோதனை செய்த நாள் 09 ஜனவரி 1816.
4.சீனாவின் ஷென்சூ 2 விண்கலம் ஏவப்பட்ட நாள் 09 ஜனவரி 2001.

 

– தென்னகம்.காம் செய்தி குழு