tamil

இந்தியா

1.வரும் 2018-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருவதால் பாகிஸ்தான் எல்லையை முழுவதுமாக மூட முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
2.ரயில் பயண கட்டணத்தில், பல்வேறு சலுகைகளை பெறுவோர், முன்பதிவின் போது, இனி, ஆதார் எண்ணை குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.விரைவில் இந்த திட்டம் அமலுக்கு வரும் என ரயில்வே உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
3.பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிக பெண் ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.ஆளுநர் மற்றும் துணைநிலை ஆளுநர்களாக இதுவரை 4 பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.முதல் பெண் ஆளுநராக மிருதுளா சின்ஹா கோவா மாநிலத்தில் நியமிக்கப்பட்டார்.
4.இந்திய வீரர் அர்ஜூன் வாஜ்பாய் உலகின் 6வது மிக உயரமான மலைச்சிகரம் CHO OYO வில் ( 8188 மீட்டர் உயரம் ) ஏறி சாதனை புரிந்துள்ளார்.
5.இந்தியாவிலேயே முதன் முதலாக ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் முழுவதும் பெண் காவலர்களால் ஆன ரோந்து பிரிவு துவங்கப்பட்டுள்ளது.

உலகம்

1.பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கும், பாலியல் குற்றங்களை மரபணு பரிசோதனை அடிப்படையில் உறுதி செய்து தண்டனை வழங்குவதற்கும் வகை செய்யும் இரு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
2.சீனாவில் சிறுவர்கள் இரவு நேரங்களில் இணையத்தை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.சிறுவர்கள் ஆன்லைன் கேமிற்கு அடிமையாவதை தடுக்க இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது.

3.இன்று உலக அஞ்சல் தினம் (World Post Day).
உலகத் தபால் யூனியன் என்பது 1874ஆம் ஆண்டு அக்டோபர் 9 இல் ஆரம்பிக்கப்பட்டது. இதனால் உலகம் முழுவதும் தபால் போக்குவரத்திற்கான ஒப்பந்தம் ஏற்பட்டது. உலகத் தபால் யூனியனின் மாநாடு 1969ஆம் ஆண்டு டோக்கியாவில் நடைபெற்றது. இதில் உலக அஞ்சல் தினத்தை அக்டோபர் 9 அன்று கொண்டாடுவது என மாநாட்டில் அறிவிக்கப்பட்டது.

தினம் ஒரு மாவட்டம் சிறப்பு செய்திகள்

14.இன்று தர்மபுரி மாவட்டம்.

தர்மபுரி மாவட்டம் கர்நாடக மாநில எல்லைக்கு அருகில் அமைந்திருக்கும் தர்மபுரி மாவட்டம் கோயில்களுக்காகவும், இயற்கை எழில் கொஞ்சும் இடங்களுக்காகவும் புகழ்பெற்று விளங்குகிறது.இது பழங்காலத்தில் தகடூர் என அழைக்கப்பட்டது. இந்நகரை தலைநகராக கொண்டு சங்க கால மன்னன் அதியமான் நெடுமான் அஞ்சி ஆட்சி புரிந்தார்.
1965-ஆம் ஆண்டில் சேலம் மாவட்டத்திலிருந்து தருமபுரி மாவட்டம் உருவாக்கப்பட்டது. 2004-ஆம் ஆண்டில் தருமபுரி மாவட்டத்திலிருந்து கிருஷ்ணகிரி  மாவட்டம் பிரிக்கப்பட்டது.
சங்ககால தகடூரை (தற்போதைய தருமபுரி) ஆண்டவர்களுள் மிகவும் அறியப்படுபவர் அதியமான் நெடுமான் அஞ்சி. பல சங்கத் தமிழ் நூல்களில் இம்மன்னனைப் பற்றிய குறிப்புக்கள் கணப்படுகின்றன. புறநானூறு, அகநானூறு, குறுந்தொகை, பதிற்றுப்பத்து,சிறுபாணாற்றுப்படை ஆகிய நூல்களில் நெடுமான் அஞ்சி பற்றிய குறிப்புக்கள் வருகின்றன. அஞ்சியின் வீரமும், கொடைச் சிறப்பும் ஔவையார் முதலிய புலவர்களின் பாடல்களின் கருப்பொருட்களாக உள்ளன.
வடக்கில் கிருஷ்ணகிரி மாவட்டமும், கிழக்கில் திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களும், தெற்கில் சேலம் மாவட்டமும், மேற்கில் கர்நாடக மாநிலத்தின் சாமராசநகர் மாவட்டமும் இம்மாவட்டத்தின் எல்லைகளாக அமைந்துள்ளன.பருவநிலை பொதுவாக வெப்பமயமானதாகும். ஆண்டிற்கு சராசரியாக 89.556 மி.மீ. மழை பொழிகின்றது.
விவசாயம் மாவட்டத்தின் முக்கியமான தொழிலாக விளங்குகின்றது. சுமார் 70 சதவிகித மக்கள் விவசாயம் மற்றும் அது சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இம்மாவட்டம் மாநிலத்தின் மிகவும் வறட்சியான பகுதிகளுள் ஒன்றாகும்.
தருமபுரி மாவட்டத்தில் சுற்றுலா வளர்ந்து வரும் தொழிலாகும். தமிழ்நாட்டின் தலையாய நதியான காவிரி, ஒகேனக்கல் காவிரி அருவியின் வழியாகவே மாநிலத்தை வந்தடைகிறது. இங்கு பரிசல் பயணமும் எண்ணைக்குளியலும் பிரபலம்.
தீர்த்தமலை மலைக்கோவில் அரூர் வட்டத்தில் அமைந்துள்ளது. பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் உள்ள வாணியாறு அணை மற்றுமொரு முக்கியமான சுற்றுலாத் தலமாகும்.