current-affairs

தமிழகம்

1.இன்று கவிஞர், பாடலாசிரியர்  பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மறைந்த தினம்.இவர் மறைந்த தேதி 08 அக்டோபர் 1959.

இந்தியா

1.இந்திய ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளமான ஐஆர்சிடிசியில் அக்டோபர் 7 முதல் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் ரயில் பயணிகள் 92 பைசாவுக்குப் பதிலாக ஒரு பைசாவிலேயே பயணக் காப்பீடு எடுத்துக் கொள்ளலாம்.இந்தத் திட்டம் இம்மாதம் 31-ஆம் தேதி வரை மட்டுமே அமலில் இருக்கும்.
2.டபுள் டக்கர் விரைவு ரயில் சேவை கோவை-பெங்களூரு இடையே விரைவில் தொடங்கப்படும் என்று சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் ஹரிசங்கர் வர்மா தெரிவித்துள்ளார்.
3.எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் கடலுக்குச் செல்லும் மீனவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய தகவல்களைத் தருவதற்காக ‘பான் இந்தியா மீனவ நண்பன் கைப்பேசி செயலி’ என்ற சேவையை இந்த மாத இறுதிக்குள் அறிமுகப்படுத்த உள்ளது.
4.இந்திய விமானப்படை தினம் இன்று கொண்டாடப்பட்டது.
இந்திய பாதுகாப்புப் படையில் முக்கிய பங்கு வகிக்கும் இந்திய விமானப்படை 1932-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இதே தினத்தில் நான்கு வெஸ்ட்லேண்ட் லாபிடி விமானங்கள் மற்றும் ஐந்து விமானிகளுடன் துவங்கப்பட்டது. அன்று முதல் இந்திய விமானப்படை தினமானது ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் இந்திய விமானப்படையின் 84வது ஆண்டு தினம் இன்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது. உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமான தளத்தில் விமானப் படை அதிகாரிகளின் சாகச நிகழ்ச்சிகளும், வானூர்திகளின் வண்ணமயமான நிகழ்ச்சிகளும் நடந்தது.

உலகம்

1.கொலம்பிய அதிபர் யுவான் மேனுவல்  சாண்டோஸ்க்கு 2016ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நோபல் குழுத் தலைவர் கேஸி குல்மன் இதனை அறிவித்துள்ளார். கொலம்பியாவில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர பாடுபட்டவர்.மேலும் ஃபார்க் கிளர்ச்சியாளர்களுடன் அமைதி உடன்பாடு செய்வதில் இவர் முக்கிய பங்காற்றினார்.
2.அமெரிக்க அஞ்சல் துறை தீபாவளி பண்டிகையை நினைவுபடுத்தும் விதமாக சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட்டு சிறப்பித்துள்ளது.
3.பெல்ஜியத்தின் ராயல் ஆய்வக விஞ்ஞானிகள் சனிக்கிரகத்தின் டையோன் நிலவிலும் நிலத்தடிக்கு கீழே பல கிலோ மீட்டர் ஆழத்தில் கடல் ஓடுவதை கண்டுபிடித்துள்ளனர்.
4.அமெரிக்காவின் நியூ மெக்சிகோவின் Albuquerque நகரில் சர்வதேச வெப்ப பலூன் திருவிழா நடைபெற்று வருகிறது. 45-வது ஆண்டாக நடக்கும் பலூன் திருவிழாவிற்கு, “Desert kaliedoscope” என பெயரிடப்பட்டு கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
5.மார்ஷல் தீவுகள் சர்வதேச நீதிமன்றத்தில் அணு ஆயுதப் போட்டியை தடுத்து நிறுத்தத் தவறியதாக இந்தியா, பாகிஸ்தான், பிரிட்டனுக்கு எதிராக தாக்கல் செய்த மனு தள்ளுபடி  செய்யப்பட்டுள்ளது.
6.இன்று உலக ஆக்டோபஸ்கள் தினம்!(World Octopus Day).

வர்த்தகம்

1.இந்தியாவில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 8 புதிய மாடல் கார்களை அறிமுகம் செய்ய உள்ளதாக ஜப்பானைச் சேர்ந்த நிஸான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

விளையாட்டு

1.இத்தாலியில் நடைபெற்ற உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில்  சீன வீரர் வெய் பாங் 190.6 புள்ளிகளுடன் தங்கப்பதக்கமும்,இத்தாலி வீரர் ஜிசெப் ஜியோர்டானோ 170.3 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கமும்,இந்திய வீரர் ஜிதுராய் 188.8 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கமும் வென்றனர்.
2.சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் கடந்த 2008-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ரஷ்ய வீராங்கனை Anna Chicherova  தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை உட்கொண்டிருந்ததால் அவர் வென்றிருந்த வெண்கலப்பதக்கம் பறிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஒலிம்பிக் குழு தெரிவித்துள்ளது.

தினம் ஒரு மாவட்டம் சிறப்பு செய்திகள்

13.இன்று தஞ்சாவூர் மாவட்டம்.

தஞ்சை என்பதற்கு “குளிர்ந்த வயல்கள் நிறைந்த பகுதி” என்று பொருள் .தஞ்சாவூர் மாவட்டம் தமிழ்நாட்டின் அரிசிக்கின்னம் என்று அறியப்படும் தஞ்சாவூர் மாவட்டம் சோழர்களின் வரலாற்றைக் கூறும் சரித்திரப் புகழ் வாய்ந்த மாவட்டம். உலகப்புகழ்பெற்ற பிரகதீஸ்வரர் கோயில், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, தஞ்சாவூர் ஓவியம் ஆகியவற்றுக்காக தஞ்சை மாவட்டம் சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமாக திகழ்ந்து வருகிறது. தஞ்சை என பெயர் வரக் காரணமாகச் சொல்லப்படும் புராணக்கதை. முற்காலத்தில் தஞ்சன் என்னும் அரக்கன் இவ்விடத்தில் மக்களைத் துன்புறுத்திவந்தான். மக்களைக் காக்க அவனை சிவபெருமான் வதம் செய்த இடமாதலால் தஞ்சாவூர் என்ற பெயரும், சிவபெருமான் இந்த ஊரில் தஞ்சபுரீசுவரர் என்ற திருப்பெயருடன் கோயில் கொண்டுள்ளார். இத்திருக்கோயில் தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில், பள்ளியக்கிரகாரத்திற்கு அருகில் இருக்கிறது. வைணவச் சம்பிரதாயத்தில் இதே புராணம் சிறிது மாற்றப்பட்டு மகாவிஷ்ணுவே தஞ்சனை அழித்தார் என்றும், அதனால் தஞ்சை மாமணி நீலமேகப்பெருமாளாய் கோயில் கொண்டு இருக்கிறார் என்றும் நம்பப்படுகிறது. இதில் குறிப்பிடத்தக்க செய்தி, மேற்கூறிய நீலமேகப்பெருமாள் கோயில் தஞ்சபுரீசுவரரின் கோயிலுக்கு நேரெதிரில் உள்ளது. தஞ்சாவூர் எட்டாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட ஒரு நகராகும். அப்போது இப்பகுதியினை வளமையோடு ஆண்டு வந்த தனஞ்சய முத்தரையரின் பெயரையே இந் நகரம் பெயராகப் பெற்றது. தனஞ்சய ஊர் என்பது மருவி தஞ்சாவூர் என்று நிலைப்பெற்றது என்றும் கூறப்படுகிறது.