current-affairs

தமிழகம்

1.இந்தியாவில் முதல் முறையாக சென்னைக்கு அருகே செங்கல்பட்டில் மருத்துவ கருவிகள், சாதனங்கள் தயாரிப்பதற்கான மருத்துவ பூங்கா அமைப்பதற்கு பிரதமர் மோடி தலைமையில் நேற்று கூடிய மத்திய அமைச்சரவை  ஒப்புதல் அளித்துள்ளது.இதற்கு “மெடிபார்க்” என பெயரிடப்பட்டுள்ளது.மேலும்  330 ஏக்கர்  நிலத்தில் அமைய உள்ளது.
2.சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வி.பார்த்திபன், ஆர்.சுப்பிரமணியன், எம்.கோவிந்தராஜ், எம்.சுந்தர், ஆர்.சுரேஷ்குமார், ஜெ.நிஷா பானு, எம்.எஸ்.ரமேஷ், எஸ்.எம்.சுப்பிரமணியன், டாக்டர் அனிதா சுமந்த்,தலைமை பதிவாளர் டி.ரவீந்திரன், பதிவாளர் (நீதித் துறை) எஸ்.பாஸ்கரன், பதிவாளர் (ஊழல் கண்காணிப்பு) பி.வேல்முருகன், சென்னை மாவட்ட முதன்மை செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி டாக்டர் ஜி.ஜெயசந்திரன், மாவட்ட நீதிபதி (ஓய்வு) ஏ.எம்.பஷீர் அகமது, சி.வி.கார்த்திகேயன் ஆகிய 15 கூடுதல் நீதிபதிகளும் நேற்று பதவியேற்றுக் கொண்டனர்.அவர்களுக்கு தலைமை நீதிபதி எஸ்.கே. கௌல் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.இதன் மூலம், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியா

1.பிரெஞ்ச் நாடு கயானா கொருவில் இருந்து ஏரியன் 5 வி.ஏ. 231 ராக்கெட் மூலம் இந்தியாவின் ஜிசாட் 18 செயற்கைகோள் வெற்றிகரமாக இன்று விண்ணில் ஏவப்பட்டது.இந்த செயற்கைகோள்  தகவல்தொடர்பு மற்றும் ஒளிபரப்பு சேவையான சி மற்றும் கியூ பேண்ட் சேவைகளை அடுத்த 15 ஆண்டுகள் தொடர்ந்து வழங்கும்.
2.முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து அண்மையில் மாநிலங்களவை நியமன உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து,மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நடிகை ரூபா கங்குலி (49)  அவருடைய இடத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

உலகம்

1.பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜான் பெர்ரி, அமெரிக்காவைச் சேர்ந்த ப்ரேசர், நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெர்னார்ட் ஃபிரிஞ் ஆகியோருக்கு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.உலகின் மிகச்சிறிய இயந்திரங்களை வடிவமைத்ததற்காகவும்,மூலக்கூறுகள் பற்றிய கண்டுபிடிப்பிற்காகவும்  இவர்களுக்கு இந்த பரிசு வழங்கப்படுகிறது.
2.ஐ.நா.வின் தலைமைச் செயலராக தற்போது உள்ள பான் கி மூனின் பதவிக்காலம் இந்த ஆண்டு இறுதியுடன் முடிவடைவதையடுத்து புதிய தலைமைச் செயலராக போர்ச்சுகல் நாட்டின் முன்னாள் பிரதமர் அந்தோனியோ குட்டெரெஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

வர்த்தகம்

1.கூகுள் நிறுவனம் பிக்சல் மற்றும் பிக்சல் XL ஸ்மார்ட்ஃபோன்களை புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது.15 நிமிடம் சார்ஜ் செய்தால் 7 மணி நேரம் வரை தாங்கக்கூடிய பேட்டரி இதன் சிறப்பம்சமாகும்.இந்தியாவில் இந்த ஸ்மார்ட்ஃபோன்கள் அக்டோபர் மாதம் 13ம் தேதி முதல் கிடைக்கும்.

விளையாட்டு

1.ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கிப் போட்டியில் விளையாடவுள்ள இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு வந்தனா கட்டாரியா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக பின்கள வீராங்கனை சுனிதா லகரா நியமிக்கப்பட்டுள்ளார்.ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கிப் போட்டிகள் சிங்கப்பூரில் வரும் 29-ஆம் தேதி தொடங்குகின்றன.

தினம் ஒரு மாவட்டம் சிறப்பு செய்திகள்

11.இன்று சென்னை மாவட்டம்.

தமிழ்நாட்டின் தலைநகரமும் இந்தியாவின் நான்காவது பெரிய நகரமும் ஆகும். 1996 ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்நகரம் மெட்ராசு (Madras) என்று அழைக்கப்பட்டு வந்தது. சென்னை, வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்த துறைமுக நகரங்களுள் ஒன்று. சுமார் 10 மில்லியன் மக்கள் வாழும் இந்நகரம், உலகின் 35 பெரிய மாநகரங்களுள் ஒன்று. 17 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் சென்னையில் கால் பதித்தது முதல், சென்னை நகரம் ஒரு முக்கிய நகரமாக வளர்ந்து வந்திருக்கிறது. சென்னை, தென்னிந்தியாவின் வாசலாகக் கருதப்படுகிறது. சென்னை நகரில் உள்ள மெரினா கடற்கரை, உலகின் நீளமான கடற்கரைகளுள் ஒன்று. சென்னை, கோலிவுட் (Kollywood) எனப்படும் தமிழ்த் திரைப்படத் துறையின் தாயகம். பல விளையாட்டு அரங்கங்கள் உள்ள சென்னையில் பல விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறுகின்றன.
தமிழகத்தின் தலைநகரம் சென்னையை மையமாக கொண்டு அமையப்பெற்ற சென்னை மாவட்டத்துக்கு என்று தனியாக தலைநகரம் எதுவும் கிடையாது.இது ஒரு நகரம் சார்ந்த மாவட்டம் என்பதால் இம்மாவட்டத்திற்கு தலைநகரம் கிடையாது  தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சிறிய மாவட்டம் இது ஆகும், ஆனால் மிக அதிக அளவில் மக்கள் இங்கு வசிக்கிறார்கள்.
சென்னை-1ல் ராஜாஜி சாலையில் உள்ள பழைய ஆட்சியர் அலுவலக கட்டிடம், 1793ஆம் ஆண்டு கட்டப்பட்டது. அந்த கட்டிடம் அப்போதைய மதராஸ் ஆளுநர் லார்டு பென்டிங் பெயரால் அழைக்கப்பெற்றது. 19ஆம் நூற்றாண்டின் இறுதி வரை இந்த கட்டிடம் பயன்பாட்டில் இருந்து வந்தது. பின்னர் புதிதாக ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டு, மீனவர் சமூகத்திலிருந்து முதன் முதலாக வழக்குரைஞராக இருந்து பல சேவைகள் செய்த சிங்காரவேலர் பெயரிடப்பட்டது. இன்று வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் “சிங்காரவேலர் மாளிகை” என்றழைக்கப்படுகிறது.
சென்னை மாவட்டம் மெரினா கடற்கரை, பார்த்தசாரதி கோயில், வடபழனி முருகன் கோயில் போன்றவருக்காக புகழ்பெற்றது.மேலும் தமிழக மாவட்டங்களிலேயே மிகவும் வளர்ச்சியடைந்த மாவட்டம் இதுவே ஆகும்.நியூயார்க் டைம்ஸ் இதழின் 2014-லில் செல்ல வேண்டிய உலகின் 52 இடங்களின் பட்டியலில், சென்னை 26வது இடத்தைப் பெற்றுள்ளது.