Current-Affairs-Updates

தமிழகம்

1.இன்று இந்திய விடுதலைப் போராட்ட தியாகி திருப்பூர் குமரன் பிறந்த தினம்.
திருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 – ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலையில் பிறந்தார். 1932 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கிய போது தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவிய நேரத்தில் திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் அச்சமயம் ஏற்பாடு செய்த மறியல் போராட்டத்தில் தீவிரமாகப் பங்குகொண்டு, 1932 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதியன்று கையில் தேசியக் கொடியினை ஏந்தி, தொண்டர் படைக்குத் தலைமை ஏற்று, அணிவகுத்துச் சென்றபோது காவலர்களால் தாக்கப்பட்டு தடியடிபட்டு மண்டை பிளந்து கையில் இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி மயங்கி விழுந்து, பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஜனவரி 11 இல் உயிர் துறந்தார் திருப்பூர் குமரன். இதனால், கொடிகாத்த குமரன் என்றும் அழைக்கப்படுகிறார்.இவரது துணைவியார் ராமாயி அம்மாள் 1998 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உயிர் நீத்தார்.
தமிழ்நாடு அரசு திருப்பூர் குமரன் தியாகத்தைப் போற்றும் வகையில் திருப்பூரில் திருப்பூர் குமரன் நினைவகம் ஒன்றை அமைத்துள்ளது. இங்கு தற்காலிக நூல் நிலையம் உள்ளது. படிப்பகம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. மேலும் இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர்களின் படங்கள் வரைந்து பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.இவரது நூறாவது பிறந்த நாளைச் சிறப்பிக்கும் வகையில், அக்டோபர் 2004 இல் சிறப்பு நினைவுத் தபால் தலை இந்திய அரசால் வெளியிடப்பட்டது.

இந்தியா

1.பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இணைவதற்கு இந்தியா கடந்த அக்டோபர்  02ம் தேதி ஒப்புதல் அளித்துள்ளது.இதனால் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த ஒப்பந்தம் அமலுக்கு வருவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
2.“ஸ்வராஜ் இந்தியா’ எனும் புதிய கட்சியை ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மூத்த தலைவர்களான யோகேந்திர யாதவ், பேராசிரியர் ஆனந்த் குமார் உள்ளிட்டோர்  தில்லியில்  தொடங்கியுள்ளனர்.
3.கர்நாடக மாநில அரசின் புதிய தலைமை செயலாளராக சுபாஷ்சந்திரா குண்டியா நியமிக்கப்பட்டுள்ளார்.
4.நவராத்திரி விழாவையொட்டி  குஜராத்தில் இந்த வருடம் ஏற்றப்பட்ட மனிதநேய விளக்கு கின்னஸ் சாதனை புரிந்துள்ளது.கடந்த அக்டோபர் 1ம் தேதி நடைபெற்ற  விழாவில் குஜராத் முதல்வர் விஜய் ருபானி 34 அடி உயரம் கொண்ட ‘மனிதநேய விளக்கை’ அகமதாபாத் நகரில்  ஏற்றி வைத்தார்.இதனால் இந்த விளக்கு உலகின் மிகப்பெரிய விளக்கு என்று கின்னஸ் சாதனையில் இடம் பிடித்துள்ளது.
5.மதுவிலக்கு தொடர்பான அறிவிக்கையை ரத்து செய்து பாட்னா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து இருநாட்களே ஆகியுள்ள நிலையில், பிகார் அரசு புதிய சட்டத்தைப் பிறப்பித்திருக்கிறது. பிகாரில் பூரண மது விலக்கை அமல்படுத்துவது தொடர்பான புதிய சட்டத்தை அந்த மாநிலத்தை ஆளும் நிதீஷ் குமார் தலைமையிலான அரசு ஞாயிற்றுக்கிழமை பிறப்பித்துள்ளது.

உலகம்

1.உலகின் உயர்ந்த பரிசாக கருதப்படும் நோபல் பரிசுகள் இந்த வாரம் முழுவதும் அறிவிக்கப்படும்.நேற்று  ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற விழாவில் மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.இந்த வருடத்துக்கான மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு, ஜப்பான் நாட்டை சேர்ந்த யோஷினோரி ஓஷுமிக்கு வழங்கப்பட உள்ளதாக நோபல் கமிட்டி அறிவித்துள்ளது.இந்த விருது ஆட்டோபேஜி(Autophagy) எனப்படும் செல் தொடர்பான நிகழ்வின் செயல்பாடுகளை துல்லியமாக கண்டறிந்ததற்காக இவருக்கு வழங்கப்படுகிறது.
2.பிரம்மபுத்திரா நதியின் துணை நதியான ஜியாபகுவின் நீரோட்டத்தை சீனா நிறுத்தியுள்ளது.மேலும் திபெத்தின் ஜியாப்ஸ பகுதியில் ஓடும் ஜியாபகு நதியின் குறுக்கே அணை கட்டும் திட்டத்துக்காக நீரோட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.இதனால் இந்தியா, வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு நீர்வரத்து குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.

2.இன்று உலக வனவிலங்குகள் தினம் (World Animal Day).
உலக விலங்கு நாள்   ஆண்டு தோறும் அக்டோபர் 4 அன்று கொண்டாடப்பட்டு வருகிறது.உலக வனவிலங்குகள் தினம் முதன்முதலாக இங்கிலாந்து நாட்டில் 2003ஆம் ஆண்டு அக்டோபர் 4 இல் கொண்டாடப்பட்டது.  காட்டு விலங்குகளை அழியாமல் பாதுகாக்க வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது. வனவிலங்குகளை பாதுகாக்க வேண்டும் என்கிற உறுதிமொழியை மக்களை எடுக்கச் செய்ய வேண்டும். அதன் மூலம் அழியும் தருவாயில் உள்ள விலங்குகளை பாதுகாக்கலாம்.. இயற்கை ஆர்வலரும் விலங்குகளின் தெய்வமாக மதிக்கப்படுபவருமான பிரான்சிஸ் அசிசி என்பவரின் வணக்க நிகழ்வு அக்டோபர் 4 இல் வருவதால் இந்நாள் வன விலங்கு நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.
3.உலக விண்வெளி வாரம் (World Space Week (WSW)).
உலக விண்வெளி வாரம் அக்டோபர் 4 ஆம் நாள் முதல் – அக்டோபர் 10 நாள் முடிய,இந்த இடைப்பட்ட நாட்களை உலக விண்வெளி வாரமாக கொண்டாடப்படுகிறது.1957 ஆம் ஆண்டு, அக்டோபர் 4 இல் ஸ்புட்னிக் 1 (Sputnik 1) என்ற செயற்கைகோள் உலகின் முதன்முதலாக செலுத்தப்பட்ட செயற்கைகோளாகும். 1967 இல் அக்டோபர் 10 ஆம் நாளில் புற விண்வெளி அமைதி உடன்படிக்கை செய்யப்பட்டு, உலக நாடுகளிடையே ஒப்பந்தம் கையொப்பம் ஆனதாக அறியப்படுகிறது
சர்வதேச விண்வெளி வாரமென்பது, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் மனித மேம்பாட்டிற்கும், அமையபெற்று தங்கள் பங்களிப்பை கொடுப்பதாகும். 1999 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுசபையால் அக்டோபர் 4 – 10 இரு நாட்கள் (இரு நிகழ்வுகள்) இடைநாட்கள், நினைவுகூரும் வகையில் உலக விண்வெளி வாரம் கொண்டாடப்படுமென அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

விளையாட்டு

1.கொல்கத்தாவில் நியூஸிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 178 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.இதனால் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது.இந்த வெற்றியின் மூலம் டெஸ்ட் தரவரிசையில் இந்தியா மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது.

தினம் ஒரு மாவட்டம் சிறப்பு செய்திகள்

9.இன்று கோயம்புத்தூர் மாவட்டம்.

கோயம்புத்தூர் மாவட்டம் பொருளாதாரத்திலும், தொழிற்துறையிலும் முன்னேற்றமடைந்த தமிழக மாவட்டங்களில் கோயம்புத்தூர் மாவட்டம் முக்கிய இடம் வகிக்கிறது.கோயம்புத்தூர் தமிழ் நாட்டில் சிறந்த தொழில் வளர்ச்சி அடைந்த ஒரு நகரம் ஆகும். இது தென்னிந்தியாவின் நெசவுத் தொழிலின் தலைநகரம் அல்லது தென்னிந்தியாவின் துணி உற்பத்தியின் தலைநகரம் என்றழைக்கப்படுகிறது.இந்நகரம் நொய்யலாற்றின் கரையில் அமைந்துள்ளது.
பழைமை வாய்ந்த கொங்கு நாட்டின் ஒரு பகுதியாய் திகழ்ந்த இம்மாவட்டத்தில் கோசர் இன மக்கள் கோசம்புத்துர் என்னும் இடத்தை தலைமையிடமாக கொண்டு வசித்து வந்தனர். இவர்கள் வாழ்ந்த இடமான கோசம்புத்தூர் காலப்போக்கில் பெயர் மருவி கோயம்புத்தூர் என்றே அழைக்கப்படுகிறது. கோயம்புத்தூர் முற்காலச் சோழனாகிய கரிகாலனின் ஆட்சிக் காலமான இரண்டாம் அல்லது மூன்றாம் நூற்றாண்டிலிருந்தே இருந்து வந்துள்ளது.இதனை இராட்டிரகூடர்கள், சாளுக்கியர்கள், பாண்டியர்கள், ஹோசைளர்கள், விஜய நகரப் பேரரசு ஆகிய பேரரசுகள் ஆட்சி புரிந்துள்ளன.
இந்த மாவட்டத்தில் ஆழியாறு, சிறுவாணி ஆறு, பவானி, நொய்யல் மற்றும் அமராவதி ஆறுகள் பாய்கின்றன. இவற்றில் சிறுவாணி ஆற்றின் நீர் உலகிலேயே 2-வது சுவையான நீராக கருதப்படுகிறது.கிபி 1804 ம் ஆம் ஆண்டு கோவை மாவட்டம் தனி மாவட்டமாக உருவானது. இம்மாவட்டத்தின் வடக்கு எல்லையாக பெரியார் மாவட்டமும், தெற்கில் கரூர் மாவட்டமும், மேற்கில் கேரள மாநிலமும், கிழக்கில் சேலம் மாவட்டமும் அமைந்துள்ளது. 1979 – ஆம் ஆண்டு நிர்வாக வசதிக்காக கோவை மாவட்டம், பெரியார் மாவட்டம் என இரண்டாக பிரிக்கப்பட்டது. இது தமிழ்நாட்டின் மேற்கு பகுதியோரம் அமைந்துள்ளது.