இந்தியா

1.கர்நாடக மாநிலத்தில் உள்ள சிவமொக்கா ‘மலை நாடு‘ என்ற புனைப் பெயருடன் அழைக்கப்படும் ஜோக் அருவியில் செயற்கை முறையில் நிரந்தரமாக தண்ணீர் விழ வைக்கும் திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை இடைக்கால தடை விதித்துள்ளது.
2.மத்திய அரசால் சமீபத்தில் வெளியிடப்பட்ட தூய்மை நகரங்கள் பட்டியலில் குஜராத்தின் வதோதரா நகராட்சி 10-ஆவது இடத்தை பிடித்துள்ளது.இதை கொண்டாடும் விதத்தில் அகோதா-தான்தியா பஜாரை இணைக்கும் ஒரு கிலோ மீட்டர் நீளமுள்ள பாலத்தைச் சுத்தம் செய்ய 5,058 பேர் அங்கு ஒரே நேரத்தில் கூடி தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.இதையடுத்து இந்த நிகழ்ச்சி கின்னல் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
3.பிரதமர் நரேந்திர மோடி 6 நாள் பயணமாக ஜெர்மனி, ஸ்பெயின், ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய 4 நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
4.நொய்டாவில் மருத்துவமனை அருகே அதிக ஒலி மாசு ஏற்படுத்திய குற்றத்துக்காக பஞ்சாபி கிளப்புக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் ரூ.7 லட்சம் அபராதம் விதித்துள்ளது.


வர்த்தகம்

1.பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளராக இருக்கும் சக்திகாந்த தாஸ் பதவி காலம் நேற்றுடன் முடிவடைந்ததையடுத்து புதிய பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளராக தபன் ராய் நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் இன்று முதல் பொறுப்பினை ஏற்க உள்ளார்.


உலகம்

1.உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஜிகா வைரஸ் இந்தியாவில் கர்ப்பிணி உட்பட 3 பேருக்கு இந்த பாதிப்பு உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
2.வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த மோரா புயல் கடந்த மே 30-ஆம் தேதி கரையைக் கடந்தது.வங்கதேசத்தின் பிரபல துறைமுக நகரான சிட்டகாங் நகருக்கும் கோக்ஸ் பஜாருக்கும் இடையே புயல் கரையைக் கடந்தது.புயல் கரையைக் கடந்தபோது மனிக்கு 117 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது குறிப்பிடத்தக்கது.


இன்றைய தினம்

1.இன்று சர்வதேச குழந்தைகள் தினம் (International Children’s Day).
உலகக் குழந்தைகளின் நலனுக்காக 1925ஆம் ஆண்டில் ஜெனிவாவில் மாநாடு நடைபெற்றது. உலகில் வாழும் குழந்தைகளின் நிலையைப் பற்றி விவாதம் செய்யப்பட்டது. குழந்தைகளின் நலனில் அக்கறை காட்டுவதற்கான பல்வேறு ஆலோசனைகளும், முடிவுகளும் எடுக்கப்பட்டன. இதன் காரணமாக பெரும்பான்மையான நாடுகள் ஜூன் – 1 ஐ சர்வதேச குழந்தைகள் தினமாகக் கொண்டாடுகின்றன.
2.இன்று உலக பெற்றோர் தினம் (Global Day of Parents).
பெற்றோர்கள் தன்னலம் கருதாமல், தியாக உணர்வுடன், அர்ப்பணிப்புடன் தங்களது குழந்தைகளை வளர்க்கின்றனர். பெற்றோர் மற்றும் குழந்தைகள் என்கிற உறவுடன் வாழ்நாளை தியாகம் செய்கின்றனர். உலகின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள அனைத்து பெற்றோர்களை கௌரவிக்கும் வகையில் ஐ.நா. சபை 2012ஆம் ஆண்டில் இத்தினத்தைப் பிரகடனம் செய்தது.
3.தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட நாள் 01 ஜூன் 1971.
4.சிஎன்என் ஒலிபரப்புச் சேவையை ஆரம்பித்த நாள் 01 ஜூன் 1980.

 

– தென்னகம்.காம் செய்தி குழு