current3

தமிழகம்

1.வெளிநாட்டு பறவைகள் வரத்து அதிகரித்துள்ளதால் காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் முன்கூட்டியே திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2.புதுக் கோட்டை அருகே உள்ள பொற்பனைக்கோட்டையில் தமிழகத்தில் முதல்முறையாக 2,500 ஆண்டுகள் பழமையான, பாறைகளில் அமைக்கப்பட்ட உலோக தொழிற்கூடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியா

1.பாட்னா உயர் நீதிமன்றம்,பிகார் மாநில அரசு கொண்டு வந்த முழு மதுவிலக்குச் சட்டத்தை ரத்து செய்து அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.மேலும் பிகார் மாநில அரசு கொண்டு வந்த முழு மதுவிலக்குச் சட்டம் சட்டவிரோதமானது என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
2.மும்பையில் உள்ள மஜ்கான் டாக்ஸ் கப்பல் கட்டுமான நிறுவனத்தில் தமிழகத்தில் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சி புரிந்த ராஜேந்திர சோழ மன்னனின் திருவுருவப் படத்தை இந்திய கப்பல் கட்டுமான நிறுவனத்துக்கு அர்ப்பணிக்கும் விழா நடைபெற்றது.
3.பாண்டிச்சேரி மாநிலத்தின் பெயர் புதுச்சேரி என மாற்றம் செய்யப்பட்ட நாள் 01 அக்டோபர் 2006.

உலகம்

1.பால்பாயின்ட் பேனாவைக் கண்டுபிடித்த லடிஸ்லோ ஜோஸ் பிரோவின் 117-வது பிறந்தநாளை முன்னிட்டு கடந்த செப்டம்பர் 29ம் தேதி கூகுள் தனது முகப்புப் பக்கத்தில் டூடுள் போட்டுக் கொண்டாட்டியுள்ளது.இவர் ஹங்கேரியில் உள்ள புதா பெஸ்ட்டில் 1899 செப்டம்பர் 29-ம் தேதி பிறந்தார்.
2.உலக அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவரில் உலகில் மிகப்பெரிய ரயில் நிலையத்தை அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது.இந்த ரயில் நிலையத்தின் பணிகள் 2022 ஆம் ஆண்டு சீனாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டு அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளன.
3.இன்று சீனாவின் 67-ஆவது தேசிய தினம் கொண்டாடப்பட்டது.

4.இன்று உலக சைவ தினம் (World Vegetarian Day).
தாவரங்களில் இருந்து பெறப்படும் உணவுப் பொருட்களை சைவ உணவு என்கிறோம். வட அமெரிக்கன் சைவக் கழகம் 1977ஆம் ஆண்டில் இத்தினத்தை அறிவித்தது. இதனை 1978ஆம் ஆண்டில் சர்வதேச சைவ ஒன்றியம் அங்கீகரித்தது. மகிழ்ச்சி, கருணை மற்றும் சைவ வாழ்வை மேம்படுத்தும் நோக்கில் இத்தினம் கொண்டாடப்படுகிறது.
5.இன்று உலக முதியோர் தினம் (International Day of Older Persons).
மருத்துவ வசதி மற்றும் கல்வி அறிவால் மனிதனின் சராசரி ஆயுள்காலம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் உலகளவில் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. முதியோர்களின் அதிகரிப்பால் ஏற்படும் சவால்களை கவனத்தில் எடுத்துக்கொண்டு பல திட்டங்களை உருவாக்க வேண்டியுள்ளது. முதியோர்களின் மீது கவனம் செலுத்த உலக முதியோர் தினம் 1991ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது.

விளையாட்டு

1.உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் நடைபெற்று வரும் 56-ஆவது தேசிய தடகளப் போட்டியில் 60.01 மீ. தூரம் எறிந்து அன்னு ராணி  புதிய தேசிய சாதனையை படைத்துள்ளார்.இவர் தனது மூன்றாவது வாய்ப்பில் இந்த சாதனையை புரிந்துள்ளார்.இதன்மூலம் 60 மீ. தூரத்தை எட்டிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

தினம் ஒரு மாவட்டம் சிறப்பு செய்திகள்

6.இன்று கன்னியாகுமரி மாவட்டம்.

கன்னியாகுமரி என்ற பெயர் இப்பகுதியில் புகழ் பெற்ற குமரி அம்மன் என்னும் இந்து சமயக் கடவுளை மையப்படுத்தும் தல புராணத்திலிருந்து இம்மாவட்டத்துக்கு கிடைத்திருக்கிறது. இது பார்வதி தேவி தன்னுடைய ஒரு அவதாரத்தில் ‘குமரிப் பகவதி’ என்னும் பெயருடன் சிவனை சேரும் பொருட்டு இந்நிலப் பகுதியின் தென்கோடியில் அமைந்துள்ள ஒரு பாறையில் தவம் செய்ததாக கூறுகின்றனர்.
1947 முதல் 1956 வரை திருவிதாங்கூர் மன்னரின் சுய ஆளுகைக்குள் இருந்தது. கன்னியாகுமரி மாவட்ட மக்களின் தாய்மொழி தமிழாக இருந்தாலும் அவர்கள் மலையாள மொழிப் பகுதியாகிய கேரளத்தோடு இணைந்திருக்க விரும்பவில்லை. மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தின் வளர்ச்சி கேரள அரசால் புறக்கணிக்கப்பட்டது. இந்நிலையில் மார்ஷல் நேசமணி தலைமையில் விடுதலைப் போராட்டம் தொடங்கியது. 1956 நவம்பர் முதல் நாள் குமரி மாவட்டம் தமிழ் நாட்டின் ஒரு பகுதியாக மாறியது.இம்மாவட்டத்தின் முதல் மாவட்ட ஆட்சியராக திருமலை என்பவர் நவம்பர் 1, 1956 அன்று பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.நாகர்கோவில், குளச்சல் உள்ளிட்ட 4 நகராட்சிகளை கொண்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவில் ஆகும்.
தமிழின் ஐந்திணைகளில் நான்கு திணைகள் (முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல்) ஒருங்கமைந்த மாவட்டம். இயற்கை அழகுக்கு பெயர் போன இம்மாவட்டத்தில் ஒன்பதாம் நூற்றாண்டுக்கும் முந்தைய பல வரலாற்றுச் சின்னங்களும் அமைந்திருப்பதால் சுற்றுலா பயணிகளுக்கு சுவர்க்கமாக திகழ்கிறது. இம்மாவட்டத்தின் மேற்கு எல்லையாக கேரள மாநிலமும் வடக்கிலும் கிழக்கிலும் எல்லைகளாக தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டமும் இருக்கின்றன.இம்மாவட்டத்தின் முக்கிய நதிகள் தாமிரபரணி, வள்ளியாறு, பழையாறு ஆகியன.
இம்மாவட்டத்தில் வாழ்கின்ற மக்களின் முதன்மை மொழி தமிழ் ஆகும். மலையாளம் பேசுகின்ற சிறுபான்மையோரும் உள்ளனர். இந்த மாவட்டத்தில் பேசப்பட்டு வரும் வட்டாரத் தமிழ் சிறிது மலையாளம் கலந்து தனித்தன்மை கொண்டுள்ளது
தமிழ் நாட்டின் மொத்த ரப்பர் உற்பத்தியில் 95% கன்னியாகுமரி மாவட்டத்தில் உற்பத்தியாகிறது. காற்றாலைகளுக்கு மாவட்டத்தின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு உண்டு. ஆரல்வாய்மொழி பகுதியில் இவை அதிக அளவில் அமைக்கப்பட்டுள்ளன.கன்னியாகுமரி கடல் பகுதிகளில் இருநூறுக்கும் மேற்பட்ட இன மீன்கள் கிடைக்கின்றன.கல்வியறிவு விகிதத்தில் (91.75 %) குமரி மாவட்டம் தமிழகத்தில் முதலிடம் வகிக்கிறது. மேலும் கல்வித்தரத்திலும் முதலிடம் வகிக்கிறது.